‘‘ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம்’’ மு.க.ஸ்டாலின் சூளுரையும், எதிர்ப்பும்; 10 குறிப்புகள்

Read Time:3 Minute, 59 Second

1) ‘‘ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம்’’ என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரை காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

2) 2019 தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்கிறது.

3) டெல்லியில் டிசம்பர் 10-ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக வியூகம் வகுக்கப்பட்டது. சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை.

4) காங்கிரசுடன் நட்பு பாராட்டும் பல கட்சிகளும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிய தயக்கம் காட்டி வருகின்றன. பிரதமர் வேட்பாளர் போட்டியில் மம்தா பானர்ஜியும், மாயாவதியும் இருந்து வருகிறார்கள்.

5) பா.ஜனதாவை எதிர்க்கொள்ள பிராந்திய கட்சிகளை ஒன்றாக இணைத்து காங்கிரசுடன் பேச்சுவார்த்தையை நடத்த செய்வதில் மம்தா பானர்ஜி முக்கியமான பணியை மேற்கொண்டு வருகிறார்.

6) பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் காங்கிரஸ்கூட பிரதமர் வேட்பாளர் தொடர்பாக அமைதியாகவே இருந்து வருகிறது.

7) ராகுல் காந்தியின் பெயரை மு.க. ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது காங்கிரசுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிவிப்பதற்கு முன்னதாக இதுதொடர்பாக ராகுல் காந்தியிடமோ, சோனியா காந்தியிடமோ தெரிவிக்கப்படவில்லை.

8) பிரதமர் வேட்பாளர் தொடர்பாக தேர்தலுக்கு பிறகு அனைத்துக்கட்சிகளும் அமர்ந்து இதனை முடிவு செய்யும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

9) மு.க.ஸ்டாலின் அறிவிப்பை மிகவும் முக்கியமாக பார்க்கிறோம் என கூறும் திரிணாமுல் காங்கிரஸ், பிரதமர் வேட்பாளராக யாருடைய பெயரையும் அறிவிப்பதை விரும்பவில்லை. இது எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைவதை பாதிக்கும் என தெரிவித்துள்ளது.

10) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசுகையில் ‘‘ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை கூற முழு உரிமை உள்ளது. 1998-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்தபோதும் சரி, 2004-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபோதும் சரி, தேர்தலுக்கு பின்பே பிரதமர் பற்றிய முடிவெடுக்கப்பட்டது. அதுவே நமது நாட்டிற்கு வழக்கமானது. ஜனநாயகத்துக்கும் வலு சேர்க்கும். தேசிய அளவில் கூட்டணி என்பது தேர்தலுக்கு பிறகு தான். அதுவரை மாநில அளவில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து பணியாற்றுவது தான் நடைமுறை சாத்தியம்’’ என கூறியுள்ளார். பிற எதிர்க்கட்சிகளும் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.