தண்ணீர் வீணாவதைத் தடுக்க உணவகங்களில் அரை டம்ளர் தண்ணீர் முயற்சி!

Read Time:6 Minute, 48 Second

இந்தியாவின் பல்வேறு நகரங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை நோக்கி பயணிக்கும் நிலையில் மராட்டிய மாநிலம் புனேவில்
தண்ணீர் வீணாவதைத் தடுக்க உணவகங்களில் அரை டம்ளர் தண்ணீரை வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

நீரின்றி வாழாது உயிர்கள் என்பது தண்ணீர் மகத்துவத்தை பறை சாற்றுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் வந்தால் ஆச்சரியமில்லை என்ற எச்சரிக்கையும் இருக்கிறது. அனைத்துக்கும் ஜீவனான தண்ணீரை, நாம் தேவைக்கு அதிகமாக செல்வழிப்பதில், விரயமாக்குவதில் தயக்கம் காட்டுவது கிடையாது. தண்ணீர் தானே என்ற அலட்சியம் இன்றளவும் இருக்கதான் செய்கிறது. உணவங்களுக்கு செல்லும் போது வழங்கும் தண்ணீரை முழுமையாக குடிக்கிறோம் என்றால் இல்லை. பின்னர் வீணாக்கப்படுகிறது. இன்றைய நமது அலட்சியம், வருங்காலத்தில் நமக்கே ஆபத்தை விளைவிக்கும் என்ற அபாயத்தை தெரியாமல் பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள்.

இவ்வாண்டு தொடக்கத்தில் மத்திய அரவு வெளியிட்ட அறிவிப்பின்படி, தேசத்தில் தீவிர தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. இதன் காரணமாக இதுவரை 600 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2020-ம் ஆண்டில் சுமார் 21 நகரங்களில் நிலத்தடி நீர் வற்றிப்போகும் அபாயமும் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு பருவநிலை மாற்றம், காடுகள் அழிப்பு, நகர்புற மக்கள்தொகை வேகமாக அதிகரிப்பு போன்றவையே காரணம் என நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மே மாதம் இந்தியாவில் பல்வேறு நகரங்கள் வறட்சியினால் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்டன.

இந்தியாவில் மராட்டிய மாநிலம் தண்ணீர் பற்றாக்குறையை அதிகமாக எதிர்க்கொண்டுவரும் மாநிலமாகும். கோடைக் காலம் தொடங்கியதும் மோசமான நிலை காணப்படும். இவ்வாண்டு போதிய மழையின்மை காரணமாக குளிர்காலத்தின் தொடக்கத்திலே பற்றாக்குறை தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை தொடங்கிவிட்டது. புனேவிலும் பாதிப்பு தொடங்கிவிட்டது.

இந்தியாவின் நிதி தலைநகரான மும்பைக்கு அடுத்ததாக உள்ளது புனே நகரம். படித்தவர்கள் அதிகமாக வாழும் இந்நகரம் கலாச்சார மையமாகவும் உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் “ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் ஆஃப் இந்தியா” என்று விவரிக்கப்பட்டது. இங்குள்ள 4 மில்லியன் மக்களுக்கு 1878-ம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட கடக்வாஸ்லா அணையில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இப்போது அங்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. அங்கு தூர்வாரும் பணிகள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படாததால் தண்ணீர் சேமிப்புத் திறன் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புனே மாநகராட்சி அக்டோபர் மாதமே தண்ணீர் வழங்கலில் ஒவ்வொருவருக்கும் 10 சதவிதம் ‘கட்’ செய்துள்ளது.

இந்நிலையில் புனேவில் தண்ணீர் வீணாவதைத் தடுக்க உணவகங்களில் அரை டம்ளர் தண்ணீரை வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. புனே உணவகங்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் அசோசியேஷன் (PRAHA) தண்ணீர் வீணாவதைத் தடுக்க இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. உணவருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் வீணாவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து புரிந்து கொள்வதற்காக விழிப்புணர்வு அட்டைகளும் வழங்கப்படுகிறது. இந்த அட்டைகள் உணவு மேஜைகளில் வைக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை மற்றும் தண்ணீரை சேமிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் PRAHA பல்வேறு ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளுக்கு இந்த மையக்கருத்தை விளக்கும் அட்டைகளை வழங்குகிறது. இதுவரை 400 ரெஸ்டாரண்டுகள் தண்ணீர் வீணாவதை தடுப்பதற்கான இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ள 800 உணவங்களுக்கும் உறுப்பினராக அல்லாத 3,500 உணவங்களுக்கும் இந்த அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

PRAHA தலைவர் மற்றும் கலிங்கா உணவகத்தின் உரிமையாளருமான கணேஷ் ஷெட்டி பிபிசியிடம் பேசுகையில்,

“உணவகங்களில் நாங்கள் அரை டம்ளர் தண்ணீர் மட்டும்தான் நிரப்புகிறோம். அதன்பின்னர் வாடிக்கையாளர் கேட்டால் மட்டுமே நிரப்புகிறோம். மீதமாகும் தண்ணீரை மறுசுழற்சிக்கு உட்படுத்தி செடிகளுக்கு ஊற்றுவதற்கும் தரையை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்துகிறோம். மழைநீர் சேகரிப்பு அமைப்பையும் நிறுவியுள்ளோம். தண்ணீரை குறைவாக பயன்படுத்தவேண்டும் என்று ஊழியர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.

முன்னதாக எங்கள் உணவகத்தில் தினமும் 1,600 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. இப்போது அன்றாட பயன்பாட்டில் கிட்டத்தட்ட 50 சதவீத தண்ணீர் சேமிக்க முடிகிறது. ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் மிகவும் முக்கியமானது, எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்றால் இப்போது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தண்ணீர் வீணாவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கையை முன்னெடுக்கும் புனே மாநகராட்சி கண்காணிப்பையும் மேற்கொள்கிறது. தண்ணீர் சிக்கனம், தேவை இக்கனம் என்பதை புரிந்து செயல்படுவோம்.