ஆண்டாள் திருப்பாவை – 8 கண்ணனிடம் நாம் விரும்புவதை அடைவோம்

Read Time:6 Minute, 52 Second

ஸ்ரீபூமாதேவியின் அம்சமாக பூமியில் துளசிச் செடிகளின் மத்தியில் அவதரித்தவர் ஸ்ரீஆண்டாள். ஸ்ரீவில்லிப்புத்தூர் எனும் திவ்யதேசத்தில் ‘பெரியாழ்வார்’ என்றழைக்கப்படும் ‘ஸ்ரீவிஷ்ணுசித்தரின்’ வளர்ப்பு மகளான ஆண்டாளின் பெருமை, எல்லையற்றது. அன்பின், ஒழுக்கத்தின், பக்தியின் எல்லையற்ற உதாரண மனுஷியாகத் திகழ்ந்த தெய்வாம்சம் ஆண்டாள். அதனால்தான் பன்னெடுங்காலம் கழித்தும் கூட, இன்றைக்கும் நம்மையெல்லாம் தெள்ளுதமிழால் நம்மை ஆண்டுகொண்டிருக்கிறாள்.

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் ஆள்வாள்; தமிழால் வாழ்வாள். நம்மையெல்லாம் வாழவைப்பாள்.

மாலவனின் மீது மாளாத அன்பும் பக்தியும் கொண்டு பூமாலையோடு பாமாலையும் தொடுத்து மூடி, மாலவனுடன் இரண்டறக கலந்தவர். எனவே இறைவனையே ஆட்கொண்டதால் ‘ஆண்டாள்’ எனவும், கோதை நாச்சியார் என்றும் சூடிக்கொடுத்த நாச்சியார் என்றும் பெயர் பெற்றவர். நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் இயற்றிய பன்னிரெண்டு ஆழ்வார்களுள் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள்தான். ஸ்ரீமகாவிஷ்ணுவின் மீது ஆண்டாள் இயற்றிய பாடல்கள் 143 ஆகும்.

‘நாச்சியார் திருமொழி’ என்கிற தலைப்பில் ஆண்டாள் அருளிச்செய்த பாடல்களின் ஒரு பகுதியே ‘திருப்பாவை’. திருப்பாவை முப்பது பாசுரங்களைக் கொண்டது. மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஸ்ரீமாலவனை தரிசிக்கச் செல்லும் ‘ஆண்டாள்’ பிராட்டியார், அதிகாலை வேளையில் உறங்கிக் கொண்டிருக்கும் தம் தோழியரை எழுப்பி அவர்களுக்கும் அந்த பேறு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களை துயில் எழுப்புவது போல் மாலவனின் பெருமைகளைக் கூறுவது போல், ஆண்டாள் உருகி உருகிப் பாடினாள். அதுவே திருப்பாவை!

ஸ்ரீஆண்டாள், திருவல்லிக்கேணி.

தனது பக்திப் பயணத்தின் லட்சியக் குறிக்கோளை நோன்பு தொடங்கும் ஆரம்பப் பாசுரத்திலேயே அறிவித்துவிட்டார் ஆண்டாள். நாராயணனைத் துதித்து வரம் பெற விரும்பும் பக்தர்கள், குறிப்பாகப் பெண்கள், பாவை விரதத்தைக் கடைப்பிடித்தால் பல்வேறு நன்மைகளும் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் பாவை நோன்பு இன்றளவிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

‘திருப்பாவை’ இவ்வுலக சுகபோகங்களில் தம்மை மறந்து மாயை எனும் மயக்கத்தில் உழலும் இவ்வுலக மாந்தர்களை விடுவித்து, இறைவன் திருவடியில் சேர்ப்பதற்கான முயற்சியாக தூக்கத்தில் இருந்து துயில் எழுப்பது என்பதன் உட்கருத்து!. அதே வேளை, மார்கழி மாதங்களில் விடியற்காலைப் பொழுதில் வீசும் காற்றில் பிராணவாயு அதிகமாக உள்ளது. இது அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்ட உண்மை. எனவே உடலும் உயிரும் ஆன்ம நலத்துடன் வாழ வேண்டி திருப்பாவை நோன்பு நோற்போம். ஸ்ரீஆண்டாளின் திருவாக்குப்படி என்றும் வளமோடு வாழ்வோம்!

திருப்பாவை – 8

கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்; கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்,
ஆவாவென்று ஆராய்ந்து அருள் — ஏலோர் எம்பாவாய்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்.
நோன்பு நோற்கவிருக்கும் இடத்திற்கு விரைந்து செல்வோம் என சிறுமிகளை அழைக்கும் பாடலாகும். கண்ணன் அரக்கர்களையும், கம்சனின் அரசவை மல்லர்களையும் அழித்தான் என்று கூறுகிறார். கண்ணன் தன்னை நெருங்கும் எதிரிகளை மட்டுமே கொல்வான்; அவனது அடியார்களாகிய நாம் அவனை நெருங்கினால் நம் தேவைகளை ஆராய்ந்து அறிந்து, அதனை நாம் வெளிப்படுத்தும் முன்னரே, நமக்கு அளிப்பான் என்கிறார் ஆண்டாள் பிராட்டியார்.

குறிப்பு:-

கீழ்வானம் = கிழக்கு வானம்
வெள்ளன் = வெளுத்தது
சிறுவீடு = தோட்டம்
பரந்தன = பரவின
மிக்குள்ள = மற்றமுள்ள
கூவுவான்-அழைப்பதற்கு
கோதுகலம்-குதூகலம்
பறை-பரிசு
மா-குதிரை
மல்லர்-மல்லுயுத்த வீரர்
மாட்டிய- வென்ற, வீழ்த்திய

பொருள்:-

கிழக்கே வானம் வெளுத்து விட்டது, ஆய்ப்பாடியில் உள்ள எருமைகள் பனிப்புல் மேய சிறு தோட்டங்களில் பரந்துள்ளன. நோன்பு செய்யும் இடத்தில் பல சிறுமியர்கள் கூடியுள்ளார்கள்; மற்ற சிறுமியர்களும் அங்கு செல்ல மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்; ஆனால் நாங்கள் அவர்களை அங்கே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளோம்; உன்னையும் அவர்களுடன் கூட்டிச் செல்லலாம் என்று உனது வீட்டு வாசலில் வந்து நிற்கின்றோம். கண்ணனுக்கு மிகவும் பிரியமானவளாக இருப்பதால் மிகுந்த மன மகிழ்ச்சியுடன் இருக்கும் பெண்ணே! எழுந்திடு! கண்ணனின் புகழைப்பாடி, அவனிடம் விரும்பியதை பெறுவோம்.
கேசி என்னும் குதிரை முகம் கொண்ட அசுரனின் வாயினைப் பிளந்தவனும், கம்சன் அனுப்பிய அரசவை மல்லர்களான சாணூரன் மற்றும் முஷ்டிகன் ஆகியோரை அழித்து வெற்றி கொண்டவனும், தேவாதி தேவனுமான கண்ணனை நாம் வணங்கினால் தேவையை ஆராய்ந்து ‘ஆஆ’ என்று அலறிக்கொண்டு நாம் வேண்டுவன எல்லாம் கொடுத்து அருள்புரிவான். பெண்ணே! இதை நினைவில் கொண்டு எங்களுடன் கிளம்பு!.