ஆண்டாள் திருப்பாவை – 9 மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!

Read Time:4 Minute, 10 Second

கண்ணன் வந்த பின்னர் தான் எழுந்து செல்லலாம் என்று படுக்கையில் புரளும் சிறுமியை எழுப்பச் செல்லும் ஆயர்பாடி சிறுமிகள், அந்த சிறுமியின் தாயினை அழைத்து ‘கண்ணனை பார்க்கப் போகலாம் என்று சொல்லி மகளை எழுப்புமாறு வேண்டும்’ பாடலாகும். சிறுமிக்கு உறங்கும் மந்திரமும், விழிக்கும் மந்திரமும் கண்ணனாகவே இருக்கிறது. கண்ணன் மீது கொண்ட காதலால், அவனின் நினைவாகவே படுக்கையில் உறங்கியும், உறங்காமலும் இருக்கும் சிறுமியை விடியற்காலையில் எழுப்ப முயற்சி செய்யும்போதுதான் “ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?” என்கிறார்கள்.

இப்பாடலில் கண்ணனது மாமன் மகளை, தங்களது மாமன் மகளாக கருதி சிறுமிகள் அழைக்கிறார்கள். சிறுமிகள் கண்ணனிடம் கொண்டுள்ள நெருக்கம், உரிமை காரணமாக, கண்ணனின் உறவினர் அனைவரையும் தங்களது உறவினராக கருதுகிறார்கள்.

திருப்பாவை – 9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய
தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
மாமீர்! அவளை எழுப்பீரோ?! உம் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்!

குறிப்பு

தூ = தூய
தூபம் = நறுமணம்மிக்க புகை
துயிலணை = தூங்கும் கட்டில் (துயில் = உறக்கம்+அணை = படுக்கை)
கண் வளரும் = கண் உறங்கும்
எழுப்பீரோ = எழுப்புகிறீர்களா
அனந்தல் = தூக்கம், சோம்பல்
ஏமப்பெருந்துயில் = இன்பம் தரும் பெருந்தூக்கம் (ஏமம் = இன்பம் +பெரும்+துயில் =தூக்கம்)
மாமாயன் = பெரிய மாயங்கள் செய்கின்றவன் (மா = பெரிய+மாயன் = மாயங்கள் செய்கின்றவன்)
மாதவன் = தாயும் தந்தையும் ஆனவன் (மா = அன்னை+தவன் = பிதா)

திருவெம்பாவையின் ஒவ்வொரு பாட்டும் ஏலோர் எம்பாவாய் என்று முடியும். நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள். அதை எண்ணிப்பார் என்றும் பொருள் சொல்லலாம்.

பொருள்:-

ஒளி வீசும் சிறந்த மணிகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மாடம். அதிலே சுற்றிலும் விளக்குகள் ஒளிர, அழகிய தூபம் மணக்க, அங்கு போடப்பட்டுள்ள சப்பர மஞ்சத்தில் ஒய்யாரமாக தூங்கும் மாமன் மகளே, நீ எழுந்து வந்து மணிகள் பொருத்தப்பட்டுள்ள கதவின் தாழினைத் திறப்பாய். எங்களது மாமியே, பெரிய மாயக்காரனானை ‘மாமாயன்’ என்றும் தாயும் தந்தையும் ஆன ‘மாதவன்’ என்றும் வைகுந்த வீட்டுக்கு தலைவனான ‘வைகுந்தன்’ என்றும் பலவாறு கண்ணனின் திருநாமங்களை சொல்லிய பின்னரும், எழுந்திராமல் உமது மகள் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கின்றாள்.

பார்த்தசாரதி கோவில்.

அவள் ஏன் வாய் திறந்து ஏதும் பேசாமல் இருக்கின்றாள். அவள் என்ன ஊமையா? அல்லது அவள் செவிடா? நாங்கள் பேசியது ஏதும் அவளின் காதுகளில் விழவில்லையா? அல்லது உறக்கத்தினால் விளைந்த சோம்பல் அவளை ஆட்கொண்டுவிட்டதா? அல்லது எழுந்து வெளியே வாராத வகையில் படுக்கையில் காவலுக்கு உட்பட்டு இருக்கின்றாளா? அல்லது ஏதேனும் மந்திரத்தின் வயப்பட்டு மயங்கி இருக்கின்றாளா? எங்களுக்கு ஏதும் புரியவில்லை. எனவே மாமியே நீங்கள்தான் அவளை எழுப்ப வேண்டும். அந்தப் கண்ணனை பார்க்கப் போகலாம் என்று சொல்லி எழுப்புங்களேன் என்கிறார்கள் ஆயர்பாடி சிறுமிகள்.