ஆண்டாள் திருப்பாவை – 10, பெருந்தூக்கம் தூங்கிடும் பெண்ணே! விழித்துக் கதவைத்திற!

Read Time:3 Minute, 13 Second

சென்ற பிறவியில் செய்த நல்வினைகளின் பயனாக கண்ணன் மாளிகைக்கு அடுத்த மாளிகையில் வாழும் சிறுமியை நீராட அழைத்துச் செல்ல வந்த சிறுமியர்கள் பாடும் பாடலாகும். பெருந்தூக்கம் தூங்கிடும் பெண்ணே! விழித்துக் கதவைத்திற! என்கிறார்கள்.

திருப்பாவை – 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்

குறிப்பு

நோற்று = நோம்பு இருந்து / விரதம் இருந்து
சுவர்க்கம் = சொர்க்கம், மோட்சம் / நல்ல சுற்றம்
அம்மனாய்-தலைவியாக, தாயாக
மாற்றமும் தாராரோ = மாற்றுப் பதில் தர மாட்டாயா
திறவாதார் = திறக்காதவர்கள்
நாற்றத்துழாய் = நறுமணமிக்க துளசி (துழாய்=துளசி)
பறை = பரிசு
புண்ணியனால் = தர்மம் வழியில் வந்தவன்
பண்டொருநாள் = முன்னொரு காலத்தில்
கூற்றத்தின் = யமனின்
தோற்றும் = தோல்வியடைந்து
பெருந்துயில் = பெரும் உறக்கம்
ஆற்ற = எல்லையில்லாத
அனந்தலுடையாய் = சோம்பல் உடைய
அருங்கலமே = அரிய ஆபரணம் போன்ற சிறந்தவள்
தேற்றமாய் = தெளிவாய்

பொருள்

பாவை நோன்பிருந்து அதன் புண்ணியத்தால் சொர்க்கம் செல்ல நினைக்கும் பெண்ணே, நாங்கள் உன் இல்லத்தின் வாசலில் வந்து காத்திருக்கையில், வீட்டுக் கதவினை திறந்து எங்களை வரவேற்காமல் இருப்பதை நாங்கள் பொருட்படுத்தவில்லை, ஆனால் எங்களுக்கு மாற்றுப் பதில் கூடவா சொல்லக் கூடாது? நறுமணமிக்க துளசிமாலையைச் சூடிய, எல்லா இடங்களிலும் வீற்றிருக்கும் எம்பெருமாள் நாராயணன், நாம் அவனைப் போற்றிப் பாடும் பாடல்களை கருத்தில் கொண்டு, நமக்கு அனைத்து விதமான செல்வங்களையும் அளிக்கின்றான். நாராயணன், ஸ்ரீ ராமபிரானாக திருவவதாரம் எடுத்த போது, அவனிடம் தோற்று, எமனின் வாயில் இரையாக விழுந்த கும்பகர்ணன் உறக்கப் போட்டியில் உன்னிடம் தோற்று, தான் வரமாகப் பெற்ற தூக்கத்தினை உனக்கு தந்தானோ? எல்லையற்ற சோம்பலுடையவளே!

எங்களுக்கு கிடைத்த கரிய மாணிக்கமே நீ, தூக்கத்திலிருந்து விடுபட்டு, படுக்கையில் புரண்டுபடுத்ததால் கலைந்துபோன ஆடைகளை சரிசெய்துகொண்டு எங்களுடன் வந்து இணைவாயாக, என்று தோழியை கோதை அழைக்கிறாள்…!