ஆண்டாள் திருப்பாவை – 11, அசையாமல், பேசாமல் தூங்குவது ஏன் ?

Read Time:3 Minute, 30 Second

ஆயர்பாடியில் மிகவும் செல்வச் செழிப்பு உடைய குடும்பத்தில் பிறந்த சிறுமியை எழுப்ப முயற்சி செய்த போது பாடிய பாடலாக கருதப்படுகிறது. ஆண்டாள் எழுப்பப்போகும் தோழி மிகவும் பேரழகு கொண்டவள். பாம்பை போன்ற இடையை கொண்ட, காட்டிலிருக்கும் மயில் போன்றவளே! என்று அழைக்கிறாள். அவளை பெண்ணாகப் பெற்றதால், பெற்றவர்கள் மட்டுமல்ல கோகுலத்தில் உள்ள அனைவரும் பாக்கியம் செய்தவர்களாம். அப்படி கோகுலத்துக்கே பெருமை சேர்த்த அந்தப் பெண்ணை எழுப்ப முயற்சி செய்த போது பாடிய பாடலாக கருதப்படுகின்றது.

திருப்பாவை – 11

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறல் அழிய சென்றுச் செருச் செய்யும்
குற்றம் ஒன்று இல்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

குறிப்பு

கற்று = கன்று
கறவை = பசு
கணங்கள் = கூட்டங்கள்
செற்றார் = பகைவர்
திறலழிய = வெற்றி அழியும்படி (திறல் = வலிமை, வெற்றி+அழிய)
கோவலர் = ஆடு, பசு போன்ற விலங்குகளை பராமரிப்பவர்கள்
புற்றரவு = புற்றில் இருக்கும் பாம்பு (அரவு = பாம்பு)
அல்குல் = இடை
புனம் = காடு
போதராய் = வருவாயாக
முகில்வண்ணன் =கருமையான மேகம் போன்ற வண்ணம் உடையை கண்ணன்
சிற்றாதே = (சிற்றல் =சிதறுதல்) அசையாமல்
எற்றுக்கு = எதற்காக
பொருளேலோ = பொருள் என்னவோ

பொருள்

பெற்ற இளம் கன்றுகளை கொண்ட பசுக்களின் மடியில் கை வைத்து கறக்கத் தொடங்கும் போதே பாலைப் பொழிகிற பசுக்களைப் பெற்றவரும், தன்னுடைய பகைவர்களின் வலிமை அழியும்படி அவர்களை போரில் வெல்லும் திறமை கொண்டவரும், குற்றங்கள் ஏதுமில்லா தலைவரின் மகளே, பொற்கொடி போன்று அழகிய தோற்றம் உடையவளே, புற்றில் இருக்கும் பாம்பை போன்ற இடையை கொண்டவளே, காட்டிலிருக்கும் மயில் போன்றவளே! சுற்றுப்புறத்தில் உள்ள எல்லாத் தோழிகளும் உன் வீட்டு வாசலில் வந்து கூடி, மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீயோ சிறிதும் அசையாமலும், பேசாமலும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கின்றாய். இதன்மூலம் நீ எங்களுக்கு என்ன உணர்த்துகின்றாய்? எங்களுக்கு ஏதும் புரியவில்லை என்கிறார் ஆண்டாள் பிராட்டியார்.

மார்கழி நீராடி, கண்ணனின் புகழைப் பாடி, அவனுடைய அருளைப் பெறுவதற்காக நாங்கள் எல்லோரும் வந்து உன் வீட்டு முற்றத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். விரைந்து எழுந்திருந்து எங்களுடன் வா” என்று அழைத்துச் செல்கிறார்.