தண்ணீரில் இயங்கும் புதிய பைக் கண்டுபிடிப்பு: மதுரை இளம் விஞ்ஞானி சாதனை

Read Time:4 Minute, 11 Second

மதுரையை சேர்ந்த இளம் விஞ்ஞானி ஒருவர் தண்ணீரில் இயங்கக்கூடிய பைக்கை கண்டுபிடித்துள்ளார்.

தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற நலச் சங்கத்தின் 7-ம் ஆண்டு விழா சென்னை வடபழனியில் 23-ம் தேதி நடந்தது. சங்கத்தின் நிறுவனர் எம்.நாகலிங்கம் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக இளம் விஞ்ஞானி முருகன் பங்கேற்று, மின் பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட்டார். தண்ணீரில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனத்தை முருகன் உருவாக்கியுள்ளார். அதையும் அறிமுகப்படுத்தி செயல்விளக்கம் அளித்தார். தொடர்ந்து, வாகனத்தை இயக்கிக்காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இளம் விஞ்ஞானி முருகன், மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த ரெங்கசாமிபுரத்தை சேர்ந்தவர். மதுரை அரசு ஐடிஐ-யில் 2-ம் ஆண்டு படிக்கிறார். சிறுவயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் மிகுந்தவர். தனது கண்டுபிடிப்புகளுக்காக பல பரிசுகள், பாராட்டுகளைப் பெற்றுள்ளார். சமீபத்தில் கோவையில் நடந்த ஹேக்கத்தான் எனும் அறிவியல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தான் உருவாக்கிய நீரினால் இயங்கும் இருசக்கர வாகனத்தை அங்கு காட்சிப்படுத்தினார்.

தண்ணீர் மேல் ஓட்டும் சைக்கிள், கடலையை உரிக்க உதவும் நவீன கருவி உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளையும் உருவாக்கி வருவது குறிப்பிடத்துக்கது.

‘தண்ணீர் பைக்’ குறித்து முருகன் கூறியதாவது:

இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்வதற்கு மட்டும் பெட்ரோல் தேவை. எனவே, வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது மட்டும் பெட்ரோலை ஊற்றவேண்டும். பைக்கின் ஒருபுறம் 1 லிட்டர் நீருடன் 200 கிராம் உப்பை போட்டு கலந்து வைக்க வேண்டும். அதற்குள் சோலார் பேனலுடன் கூடிய பேட்டரி இணைக்கப்படும். இதன்மூலம் உப்பு கலந்த நீரில் இருந்து ஆக்ஸிஜன் தனியாக பிரிந்து வெளியேறிச் செல்ல, ஹைட்ரஜன் இன்ஜினுக்கு சென்று வாகனத்தை இயக்குகிறது. இந்த பைக்கில் 40 கி.மீ. தூரம் வரை செல்லலாம்.

2016-17ல் வேர்க்கடலையை உரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து, ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ சார்பில் வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருதை சென்னையில் பெற்றேன்.

அதைத் தொடர்ந்து, ‘வீடர் கார்’ ஒன்றை உருவாக்கினேன். சாதாரண பயன்பாடு, மாற்றுத் திறனாளிகள், விவசாயம் என முப்பரிமாணப் பயன்பாட்டுக்காக உருவாக்கினேன். ஆனால், போதிய பணம் இல்லாததால் அதை முழுமைப்படுத்த முடியவில்லை.

என்னிடம் இதுபோல பல செயல் முறைத் திட்டங்கள் உள்ளன. அரசு உதவி செய்தால், என்னால் மேலும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டுவர முடியும். பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று என் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கி வரு கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘‘பல திறமைகள் இருந்தும், பொருளாதார வசதி இல்லாததால் தன் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இளம் விஞ்ஞானி முருகன் தவிக்கிறார். அவருக்கு தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற நலச் சங்கம் அனைத்து உதவிகளையும் செய்யும்’’ என்று சங்கத்தின் நிறுவனர் எம்.நாகலிங்கம் தெரிவித்தார். நன்றி இந்து தமிழ்திசை