54 ஆண்டுகளுக்குப் பிறகு உயிர்பெற தொடங்கும் தனுஷ்கோடி! ரெயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல்

Read Time:5 Minute, 9 Second

ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு ரெயில் பாதையமைக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. கடந்த 1964–ம் ஆண்டுக்கு முன்பு பெரிய துறைமுக நகரமாக திகழ்ந்தது. இங்கு ஏராளமான வீடுகள், தபால் அலுவலகம், ரெயில் நிலையம், அனைத்து மத வழிபாட்டு தலங்கள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இருந்தன. சென்னையில் இருந்து வரும் ரெயில் நேரடியாக தனுஷ்கோடிக்குத்தான் செல்லும்.

இதேபோல தனுஷ்கோடி–தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தும் இயக்கப்பட்டு வந்தது. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் துறைமுகம், அதனருகே ரயில்வே நிலையம், நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள், இருபுறமும் நீலவர்ணத்தில் கடலும் இதமான காற்றுமென காட்சியளித்தது தனுஷ்கோடி. இந்நகரம் கடந்த 1964–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23–ந்தேதி நள்ளிரவில் ஏற்பட்ட கோரப்புயலில் அடியோடு அழிந்தது.

புயலில் இந்தியாவின் தேசப் படத்திலிருந்து தனுஷ்கோடி துறைமுகமே காணாமல் போயிற்று. புயல் வீசிய சமயம் தனுஷ்கோடி ரெயில்வே நிலையத்திலும் துறைமுகத்திலும் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிலத்திலிருந்து கடலுக்கு இடம் மாறினர். புயலுக்கு முன்னர் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு ஒரு ரெயில் புறப்பட்டுச் சென்றது. சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்யவே, ரெயில் வழியிலேயே நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட அந்த ரெயிலில் புயல் மிச்சம் வைத்தது வெறும் இரும்பு சக்கரங்களை மட்டுமே. மற்றவை அனைத்தையும் புயல் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதில் ஏராளமானோர் பலியானார்கள். கோரப் புயலின் தாக்கத்திலிருந்து இன்று வரை தனுஷ்கோடி மீளவே இல்லை.

தபால் அலுவலகம்

அதன் பிறகு தனுஷ்கோடி நகரத்தை புனரமைக்க எவ்வி த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் முகுந்தராயர் சத்திரம் வரை சென்று அங்கிருந்து மீன் வண்டிகள், வேன்கள் மூலம் கடற்கரையோரம் ஆபத்தான பயணம் மேற்கொண்டு தனுஷ்கோடி வரை சென்று பார்த்து வந்தனர். மேலும் பொதுமக்கள் நலன் கருதி தனுஷ்கோடி வரை சாலை அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் 53 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு ரூ.50 கோடி செலவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை அமைத்தது. சுற்றுலா ஸ்தலமாகவும், துறைமுக நகரமாகவும் விளங்கிய தனுஷ்கோடி தற்போது சில கட்டிடங்கள் மட்டும் நினைவு சின்னங்களாக திகழ்கின்றன. இப்போது 54 ஆண்டுகளுக்குப் பிறகு புயலால் அழிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கும், ராமேசுவரத்துக்கும் இடையே ரெயில் பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை 17.20 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில் பாதை அமைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டமைப்பு மதிப்பு ரூ.208 கோடியாகும்.

இதேபோன்று 104 ஆண்டுகள் பழமைமிக்க பாம்பன் பாலத்திற்கு பதிலாக ரூ.250 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப் பட்ட தற்போதைய பாலம் மிகவும் பழமையானது என்பதால் நவீன லிப்ட் தொழில்நுட்ப வசதியுடன் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. பழைய பாலத்திற்கு இணையாக புதிய பாலம் அமைக்கப்படும். 60 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும் இந்த பாலம் செங்குத்தாக தூக்கப்படும் போது 2 கப்பல்கள் ஒரே சமயத்தில் கடந்து செல்ல முடியும் என்றும், இப்போதைய பாலத்தை விட 3 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ்கோடியில் சிதிலமடைந்த கட்டடங்கள்ளை நினைவுச் சின்னங்களாக உள்ளது, அதனை பராமரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுகின்றன.