ஆண்டாள் திருப்பாவை – 12, கோவிந்தன் புகழைப் பாட எழுந்து வா தோழி!

Read Time:3 Minute, 23 Second

ஆயர்பாடியில் அனைவருடைய பணியும் கால்நடைகளை மேய்ப்பதும், பராமரிப்பதும், பால் கறப்பதுமாகும். அங்கு ஒருவன் மட்டும் கணக்கற்ற பசுக்களை செல்வமாகப் பெற்றிருந்தான். முழு நேரமும் கண்ணனுக்கு சேவைகள் செய்வதில் ஈடுபட்டு இருந்தான் போலும். அவனுடைய தங்கையை, மனத்துக்கு இனியவனான ராமனின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீயோ வாய் திறந்து பேசாமல் தூங்குகிறாய் என்று எழுப்புகிறார் ஆண்டாள் பிராட்டியார்.

திருப்பாவை 12

கனைத்து இளங்கற்று எருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற்கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனிதான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

குறிப்பு

கனைத்து = கதறிக்கொண்டு
கற்று = கன்று
இரங்கி = இரக்கப்பட்டு
சோர = பெருக
நற்செல்வன் = சிறந்த செல்வம் கொண்டவர்
தங்காய் = தங்கை
வீழ = விழ
வாசற்கடை = வாசல்
கோமான் = அரசன்
செற்ற = கொன்ற

பொருள்:-

கன்றுகளின் பசிக் குரலைக் கேட்டவுடன் எருமைகள் தங்கள் மடியிலிருந்து கன்றுகளுக்கு பால் ஊட்டும் நினைப்பினில், பால் கற்பவர்கள் எவரும் அருகில் இல்லாத நிலையில், எவரும் கறக்காமலே தாமே பால் காம்பின் மூலம் பால் சொரிகின்றன. அவ்வாறு இடைவிடாது சொரியப்படும் பால் வீட்டினை நனைக்கிறது. அத்தகைய வளமான செல்வமாகிய எருமை மாடுகளை உடைய செல்வனது தங்கையே, உனது வீட்டு வாசலில் உனக்காக காத்திருக்கும் எங்களது தலையில் பனி விழுந்து எங்களை நனைக்கின்றது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்

நாங்கள் அனைவரும் சேர்ந்து, தென் இலங்கைக்கு அரசனாக விளங்கிய இராவணன் மீது கோபம் கொண்டு அவனை வென்றவனும், நமது மனங்களுக்கு இனியனவாகவும் திகழும் ராமபிரானின் புகழினைப் பாடுகின்றோம். ஆனால் நீயோ வாய் திறவாமல் இருக்கின்றாய், இந்த ஊரினில் உள்ள அனைவரும் எழுந்து விட்டார்கள். நாங்கள் உனது வீட்டின் வாசலில் நிற்பதை ஊரில் உள்ள அனைவரும் அறிந்து கொண்டார்கள். ஆனால் நீயோ இன்னும் உறக்கம் கலையாமல் இருகின்றாய். இப்போதாவது உறக்கம் கலைந்து எழுந்து எங்களுடன் இணைந்து கொள்வாயாக என்று தோழியை எழுப்பப் பாடுகிறாள் ஆண்டாள் பிராட்டியார்.

இப்பாடலில் கோதை ஆண்டாள் `சினத்தினால் தென்னிலங்கை கோமானை செற்ற மனத்துக்கினியான்’ என்று ராமனின் புகழைப் பாடுகிறார்.