ஆண்டாள் திருப்பாவை – 13, கிருஷ்ணனையே கிறங்கிப் போகச் செய்யும் அழகி!

Read Time:3 Minute, 43 Second

ஆண்டாள் மிகுந்த அழகு உடைய தோழியை எழுப்பும் போது பாடிய பாடலாக கருதப்படுகிறது. கிருஷ்ணனையே கிறங்கிப் போகச் செய்யும் அழகியாக பார்க்கப்படுகிறது. அவளுடைய கண்கள் அவ்வளவு அழகானது. கண்களின் அழகில் மயங்கி கண்ணன் தன்னைத் தேடி வருவான் என்ற நம்பிக்கையில் திளைக்கும் சிறுமியை ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்று எழுப்புகிறார் ஆண்டாள் பிராட்டியார். கண்ணனைப் புகழ்ந்தும் பாடினோம். இராமபிரானைப் புகழ்ந்தும் பாடினோம் என்று அளித்த பதிலுடன் இந்த பாடல் தொடங்குகின்றது.

திருப்பாவை 13

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்

குறிப்பு

புள் = பறவை
கீண்டானை = கிழித்தவனை
கீர்த்திமை = புகழை
புக்கார் = புகுந்தனர்
வெள்ளி = சுக்கிரன்
வியாழம் = வியாழன், குரு
சிலம்பின = ஆரவாரம் செய்தன
போதரி = போது (விரிந்த மலர்) + அரி (வண்டு)
பள்ளி = படுக்கை
குடைந்து = மூழ்கி
நீராடாதே = நீராடாமல்
கிடத்தியோ = கிடக்கிறாயே
பாவாய் = பதுமை
நன்னாளால் = நல்ல நாளில்
கள்ளம் = கள்ளத்தனம்
தவிர்ந்து = தவிர்த்து

பொருள்:-

பறவை உருவம் கொண்டுவந்த பகாசுரனின் வாயினைக் கிழித்து அழித்தவனும், கொடிய அரக்கனாகிய இராவணனின் பத்து தலைகளையும் தனது அம்பினால் அறுத்து எறிந்தவனும் ஆகிய நாராயணனின் கீர்த்திகளை பாடியவாறு, சிறுமிகள் பலரும் பாவை நோன்பு நோற்கப்படும் இடத்தில் குழுமி உள்ளார்கள். வானில் விடியலில் தோன்றும் சுக்கிரன் தோன்றி உச்சிக்கு வந்து விட்டது, அதன் முன்னர் இருந்த வியாழம் மறைந்துவிட்டது. பறவைகள் தாங்கள் இரை தேடிச் சென்ற இடங்களில் செய்யும் ஆரவாரங்கள் எங்களுக்கு கேட்கின்றன.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்

விரிந்த மலர் போன்ற கண்ணில் கருவண்டு போல உன் கருமணி தெரிய, விழித்துக் கொண்டே அரைத் தூக்கம் தூங்குபவளே! கண்ணனோடு சேர்ந்து இருக்கும் பாக்கியத்தைப் பெறுவதற்காக நோன்பு நோற்கப்படும் இந்த நல்ல நாளில், விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும், குளிர்ந்த நீரில் மூழ்கி குளிக்க வராமல் படுக்கையில் கிடந்து என்ன செய்கிறாய்? படுக்கையில் படுத்துக் கொண்டு, தனியாக கண்ணனைப் பற்றிய சிந்தனைகளில் ஆழ்ந்து கிடக்கும் உனது கள்ளத்தனத்தை விட்டொழித்து, எங்களுடன் வந்து கலந்து, பாவை நோன்பு நோற்பதற்கு வருவாயாக. நாம் அனைவரும் சேர்ந்து கண்ணனின் புகழினைப் பாடலாம் என்கிறார்.