கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றம்; ரத்த பாதுகாப்பு தொடர்பாக கவலையை அதிகரிக்கிறது

Read Time:6 Minute, 58 Second

ரத்தம் தானம் செய்வதில் வழிகாட்டுதல்கள் இருந்த போதிலும் முக்கிய குறைபாடுகள் உள்ளன.

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தத்தை அரசு மருத்துவமனை ஏற்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்தத்தை தானம் வழங்கியவருக்கு தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியாது. இரண்டு வருடங்களுக்கு முன்னதாக அவர் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்த போது அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவரிடம் அது தெரிவிக்கப்படவில்லை. இப்போது கவனக்குறைப்பாடு காரணமாக மருத்துவமனையின் மூன்று ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது இந்தியாவில் ரத்த பாதுகாப்பு தொடர்பான கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.

உலக அளவில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் தகவலின்படி ரத்தம் மாற்றலின் மூலம் ஒரு சதவிதத்திற்கும் குறைவாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 2017-ம் ஆண்டு 2.1 மில்லியன் பேர் எச்.ஐ.வி. பாதிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.

யூனிசெப் என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் 2017-ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டு 0-19 வயதுக்குட்பட்டோர் 1.20 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். தெற்காசியாவில் இது மிக அதிகபட்சம் என்று தெரிவித்தது. இந்திய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2014 அக்டோபர் மற்றும் 2016 மார்ச்சுக்கு இடைப்பட்ட காலங்களில் 2,234 பேருக்கு ரத்த தானம் மூலமாக எச்.ஐ.வி. பாதிப்பு நேரிட்டுள்ளது. இது நோயாளிகளால் தெரிவிக்கப்பட்டது, தனிப்பட்ட முறையில் சோதனை செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கவலையளிப்பதாக உள்ளது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தினால் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் 84 சதவிதம் தானம் செய்பவரிடம் இருந்து பெறப்பட்டவையாகும். ரத்தக் கொடையாளர்களிடம் இருந்து எடுக்கப்படும் ரத்தத்தின் 3 மில்லியை எடுத்து. எச்.ஐ.வி (எய்ட்ஸ்), ஹெபடைடிஸ் பி (மஞ்சள் காமாலை), ஹெபடைடிஸ் சி (மஞ்சள் காமாலை), பால்வினை நோய், மலேரியா சோதனைக்கு அனுப்ப வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. இருப்பினும் தானமாக மற்றும் தொழில்முறையில் வழங்கப்படும் ரத்தங்களில் இதுபோன்ற சோதனையில் குறைபாடு நிலவுகிறது. ரத்த தானத்திற்கு பிரசாரம் செய்யும் செய்யும் அமைப்புகள் தரத்தைவிட அளவிற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறது. ரத்தம் தானமாக வழங்குபவர்களுக்கு முன்னதாக கொடுக்கப்பட வேண்டிய கவுன்சிலிங் மற்றும் சோதனை, சேமிப்பு தொடர்பான வழிமுறைகள் புறக்கணிக்கப்படுகிறது என Lancet தகலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தன்னார்வ நன்கொடையாளிகள், தொழில்முறை நன்கொடையாளிகளின் முந்தைய பரிசோதனை முடிகளை கண்காணிப்பதற்கோ, அவற்றை சமர்பிக்கவோ வழிகிடையாது. இதைபோன்று சோதனையின் போதும் குறைபாடுகள் நிலவுகிறது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பால் ஆதரிக்கப்பட்ட ரத்த வங்கிகள் கூட ஸ்கிரீனிங் செயல்முறைக்கு தரமான உபகரணங்களைக் கொண்டிருக்கவில்லை, இதில் பணியாற்றும் பணியாளர்களின் ஊழலை சொல்ல வேண்டாம். சுயாதீனமான மற்றும் மருத்துவமனையிலுள்ள ரத்த வங்கிகளின் பிடியில் நிலைமை மேலும் சிக்கலானது. இவை அரசு அமைப்புகளால் கண்காணிக்கப்படுகிறது, ஆனால் அதற்காக நன்கு வரையறுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் கிடையாது.

எச்.ஐ.விக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பார்த்துள்ளது. 2010 மற்றும் 17க்கு இடைப்பட்ட காலங்களில் எச்.ஐ.வி. பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் புதிய பாதிப்பு குறைந்துள்ளது. இதேபோன்று ரத்தம் வழங்கல் மூலம் எச்.ஐ.வி. பாதிப்பும் முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. ஆனால் 2017-ம் ஆண்டு மட்டும் புதியதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,000-த்திலிருந்து 88,000 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 62,000-த்திலிருந்து 69,000 ஆக உயர்ந்துள்ளது.

யாரெல்லாம் ரத்தம் கொடுக்கலாம்?

18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட யார் வேண்டுமானாலும் ரத்தத் தானம் செய்யலாம்.

அவர்களின் எடை 45 கிலோவுக்குக் குறையாமல் இருக்கவேண்டும்.

ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறையும் பெண்கள் 4 மாதங்களுக்கு ஒருமுறையும் ரத்தத் தானம் செய்யலாம்.

உடலின் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

யார் ரத்தம் தரக்கூடாது?

டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல் வந்தவர்கள், சிகிச்சை பெற்று ஆறு மாதங்கள் வரை ரத்தத் தானம் செய்யக் கூடாது.

மது அருந்தியவர்கள் அடுத்த 24 மணி நேரம் வரை ரத்தம் அளிப்பது தவறு.

மாதவிடாய் தொடங்கி 5 நாட்கள் வரை ரத்தம் தரக்கூடாது, கர்ப்பிணிகள், தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் ஓராண்டு வரை ரத்த தானம் செய்யக்கூடாது.

எச்.ஐ.வி., மஞ்சள் காமாலை தொற்றுள்ளவர்களின் ரத்தத்தைப் பெறக்கூடாது.

இதயநோய், காசநோய், வலிப்புநோய் உடையவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயாளிகள் எப்போதும் ரத்ததானம் செய்யக்கூடாது.