ஆண்டாள் திருப்பாவை – 14, வெறும் பேச்சில்தான் வல்லவள் போலும், சொன்னபடி செய்யாமல் இருக்கிறாயே?

Read Time:4 Minute, 25 Second

வாய்ச்சொல் வீராங்கனையாக இருக்கும் தோழியொருவரை எழுப்பச் சென்ற போது ஆண்டாள் பிராட்டியார் பாடிய பாடலாக கருதப்படுகிறது. ஆயர்பாடியில் இரவு உறங்கப்போவதற்கு முன்னதாக ஆண்டாளிடமும், பிற சிறுமிகளிடமும் நானே உங்களுக்கு முன்னதாக எழுந்து எழுப்ப வருகின்றேன் என்று சிறுமி கூறியுள்ளார். ஆனால் விடியும் வரையில் எழுந்திருக்கவில்லை. அப்படியிருக்க, ஆண்டாள் வந்து எழுப்பிய போதும் எழுந்துவரவில்லை. அப்போது ஆண்டாள் பிராட்டியார், எங்களை எல்லாம் வந்து எழுப்பிவிடுவதாக சொன்ன நீ, வெறும் பேச்சில்தான் வல்லவள் போலும். சொன்னபடி செய்யாமல் இருக்கிறாயே? உனக்குக் கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா? என்று கேட்கிறார்.

இதனையடுத்து சிறுமிக்கு ரோஷம் வந்துவிட்டது போலும், உடனே அவசர அவசரமாக படுக்கையில் இருந்து எழுந்து வந்து ஆண்டாளுடனும் மற்ற தோழிகளுடனும் சேர்ந்துகொள்கிறாள்.

திருப்பாவை – 14

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கு இடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்

குறிப்பு

புழக்கடை = வீட்டின் பின்புறம்
வாவியுள் = குளத்தில் (வாவி-சிறிய குளம்)
செங்கழுநீர் = செந்தாமரை,செங்குவளை
வாய்நெகிழ்ந்து = இதழ் விரிந்து
ஆம்பல் = அல்லி
வாய் கூம்பின = இதழ் மூடி (கூம்பின=மூடின)
செங்கல் பொடிக்கூரை = செங்கல் போடி நிறத்திலான காவி உடை (கூரை = ஆடை)
வெண்பல் தவத்தவர் = தூய்மையான பல துறவிகள் (வெண் = வெண்மை,தூய்மை, பல் = பல, தவத்தவர் = துறவிகள்)
சங்கிடுவான் = சங்கு ஊத
போதந்தார் = போகின்றார்
முன்னம் = முன்னர்
நங்காய் = நங்கையே
நாணாதாய் = நாணம் (வெட்கம்) இல்லாதவளே
நாவுடையாய் = நாவைப் படைத்தவளே
தடக்கையன் = பெரிய கை உடையவன் (தட = பெரிய +கையன் = கை உடையவன்)
பங்கயக் கண்ணானை = தாமரை போன்ற விரிந்த கண்களை உடைய கண்ணன் (பங்கயம் = தாமரை)

“தாமரை போன்ற விரிந்த கண்களை உடைய கண்ணன் புகழை அறிந்து, நெஞ்சில் நிறுத்தி பாடலாம் வா பெண்ணே!”

பொருள்:-

உங்களது வீட்டின் பின்தோட்டத்து குளத்தில் பொழுது விடிந்ததின் அறிகுறியாக செங்கழுநீர் மலர்கள் பூத்துவிட்டன. அதில் இருந்த அல்லி மலர்கள் தங்கள் இதழ்களை மூடிவிட்டன. இந்த காட்சியை நீ இன்னும் காணவில்லை போலும், இந்த காட்சியை கண்டு பொழுது புலர்ந்ததை நீ அறிந்துகொள்வாயாக.

செங்கற்களின் பொடியின் நிறத்தில் உள்ள காவி உடையினை அணிந்த தூய்மையான துறவிகள் தங்களது பொறுப்பில் உள்ள திருக்கோவில்களில் சங்குகள் முழங்க வேண்டும் என்ற கருத்துடன், கோவில்களை நோக்கி சென்றுள்ளார்கள். ஆனால், எங்களை முன்னம் வந்து எழுப்புவேன் என்று நேற்று பேசிய நீ, வெறும் வாய்ச் சொல் வீரர் போன்று, இன்னும் வெட்கமில்லாமல் உறங்குகின்றாயே; கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப் படாதவளே! பேச்சு மட்டும் இனிமையாகப் பேசுபவளே! உடனே எழுவாயாக, எங்களுடன் சேர்ந்து, சங்கினையும் சக்கரத்தினையும் ஏந்தும் நீண்ட கைகளை உடையவனும், தாமரை மலர்கள் போன்ற கண்களை உடையவனுமாகிய கண்ணனைப் பாடுவாயாக,” என்று அழைக்கிறார்.