ஆண்டாள் திருப்பாவை -15, எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

Read Time:5 Minute, 22 Second

பிரியமான தோழியிடம் “நாங்கள் வந்திருப்பதை அறிந்துகொண்ட பின்பும், நீ இன்னுமா தூங்குகிறாய்?” என்று ஆண்டாள் பிராட்டியார் கேட்பது போன்ற கருத்தை இப்பாடல் கொண்டுள்ளது. ஆயர்பாடியில் ஒவ்வொரு சிறுமிகளையும் எழுப்பிக்கொண்டு வரும் ஆண்டாள், பிரியமான தோழியை எழுப்ப செல்லும் போது அவர் விழித்து இருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையிலான உரையாடல்தான் இப்பாடலாகும். ஆண்டாள் எழுப்ப சென்ற போது பிரியாமான தோழி, ஆண்டாளுடன் உரையாடுகிறாளே தவிர எழுந்து வருவதாகத் தெரியவில்லை. ஆண்டாள் ஒன்று சொல்ல, தோழியும் ஒன்று சொல்கிறார்.

இறுதியில் “நீ ஒன்றும் சொல்லவேண்டாம். உடனே எழுந்து வந்து எங்களுடன் சேர்ந்துகொண்டு மார்கழி நீராட வந்தால் போதும். உன்னைத் தவிர மற்ற எல்லோரும் வந்துவிட்டார்கள். வேண்டுமானால் நீ வந்து எண்ணிப் பார்த்துக்கொள்” என்று சொல்கிறாள் ஆண்டாள் பிராட்டியார்.

திருப்பாவை -15

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ.
சில்லென் றழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்,
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்,
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக,
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை,
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொல்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

குறிப்பு

எல்லே = என்னே, எலே
இளங்கிளியே = இளைய கிளியே
உறங்குதியோ = உறங்குகிறாயா
சில்லென்றழையேன் = ‘சில்’ என்று அழைக்காதீர்கள்
நங்கைமீர் = பெண்கள்
போதர்கின்றேன் = புறப்பட்டு வருகிறேன்
வல்லை = வல்லமை\வலிமை உடையவள்
கட்டுரைகள் = கட்டுக்கதைகள்
பண்டே = நீண்ட நாட்களாக
வாயறிதும் = உன் வாயை அறிவோம் (அறிதும்-அறிவோம்)
வல்லீர்கள் = வல்லமை உடையவர்கள்
ஒல்லை = சீக்கிரம்
போதாய் = எழுந்து வா
வேறுடையை = வேறு வேலை இல்லையா
போந்தாரோ = வந்தார்களா
போந்தார் = வந்தனர்
போந்தெண்ணிக்கொள் = எழுந்து வந்து எண்ணிப் பார்த்துக்கொள் (போந்து = வந்து +எண்ணி+கொள்)
வல்லானை = வலிய யானை (வல் = வலிய)+ஆனை=யானை)
கொன்றானை = கொன்றவனை
மாற்றானை = பகைவர்கள்
மாற்றழிக்க = மாற்றி அழிக்க (மாற்று+அழிக்க)
மாயனை = மாய லீலைகள் செய்பவன்
பாடேலோர் = பாடி, ஏற்று அறிந்து கொள்
ரெம்பாவாய் = எங்கள் பெண்ணே

பொருள்:-

ஆண்டாள்/நீராட புறப்பட்டு நிற்கும் பெண்கள்: இளமை தோற்றத்திலும், இனிமையான பேச்சிலும் கிளி போன்றவளே, நாங்கள் அனைவரும் உனது வீட்டின் வாசலில் நிற்கின்றோம், நீ இன்னுமா உறங்குகிறாய் ?

உள்ளே புறப்படும் சிறுமி: கிளி என்று கிண்டலாக கூப்பாடிட்டு என்னை அழைக்காதீர்கள், நான் முன்னமே எழுந்துவிட்டேன். கொஞ்சம் பொறுங்கள். புறப்பட்டு வருகிறேன்.

வெளியே இருக்கும் பெண்கள்: உன்னுடைய வார்த்தைகள் நன்றாக இருக்கிறது. உன்னுடைய கட்டுக்கதைகளின் வலிமை பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும்.

உள்ளே இருப்பவள்: நீங்கள்தான் என்னைவிடவும் பேச்சில் வல்லவர்கள். (பெண்ணே என்று அழைக்காமல் கிளியே என்று அழைத்ததை குறிப்பிட்டாள் போலும்) இருந்தாலும் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். நான் இப்போது என்ன செய்யவேண்டும் நீங்கள் கூறுவீர்களாக.

வெளியே இருப்பவர்கள்: விரைந்து வந்து எங்களுடன் நீ சேர்ந்து கொள்வாயாக. சாமர்த்தியமான பேச்சுத் திறமையைத் தவிர்த்து, நீ வேறு என்னென்ன குணங்களை வைத்துள்ளாய் (உனக்கு செயல் வல்லமை உண்டா என்று கேலியாக வினவினார்கள் போலும்)

உள்ளே இருப்பவள்: நோன்பிற்கு வர வேண்டியவர்கள் அனைவரும் வந்து விட்டார்களோ?

வெளியே இருப்பவர்கள்: அனைவரும் வந்துவிட்டார்கள். வேண்டுமானால் நீ வெளியே வந்து எண்ணிக்கொள்ளலாம்.

உள்ளே இருப்பவள்: இப்போது நாம் அனைவரும் செய்யவேண்டியது என்ன?

வெளியே இருப்பவர்கள்: வலிமை மிகுந்த குவலாபீடம் என்ற யானையினை கொன்றவனும், பகைவர்களின் செருக்கினை அழிக்கும் திறமை படைத்தவனும், பல மாயச் செயல்கள் புரிபவனும் ஆகிய கண்ணனின் பெருமைகளை நான் அனைவரும் சேர்ந்து பாடுவோம் என்கிறார்கள்.