ஆண்டாள் திருப்பாவை – 16, “உங்கள் வாயால் மறுப்பு சொல்லாமல் கதவுகளைத் திறக்கவேண்டும்”

Read Time:4 Minute, 27 Second

திருப்பாவையின் முதல் 15 பாசுரங்களில் ஸ்ரீ ஆண்டாள் பிராட்டியார் தன்னுடைய தோழிகள் அனைவரையும் படாத பாடுபட்டு எழுப்பிவிட்டார். இப்போது மார்கழி நீராடி யாரை பூஜிக்கவேண்டும் என்று ஆண்டாள் பிராட்டியார் விரும்பினாரோ அந்த கண்ணனை எழுப்ப வந்துள்ளார். நந்தகோபனின் மாளிகை வாசலுக்கு முன்பாக தோழிகளுடன் வந்த ஆண்டாள், கண்ணனை சந்திக்க மாளிகையின் வாயில் காவலர்களிடம் உரையாடுகிறார். எதற்காக அதிகாலையில் வந்தீர்கள் என்று காவலன் வினவினான் போலும். அதற்கு விடையளிக்கும் முகமாக கண்ணன் பறைக்கருவி தருவதாக வாக்களித்தமையால் அதனைப் பெற்றுக்கொள்வதற்காக வந்தோம் என்கிறார்.

கதவுகள் திறந்தால்தானே கண்ணனை எழுப்பமுடியும், எனவே ஆண்டாள் வாயில் காவலனிடம் கதவுகளை திறக்குமாறு சொல்கிறாள். அப்போது ”நாங்கள் ஒரு நல்ல விஷயத்துக்காக வந்திருக்கிறோம். முதல் முதலாக உன்னிடம்தான் வந்திருக்கிறோம். தயவு செய்து உங்கள் வாயால் மறுப்பு எதுவும் சொல்லாமல் கதவுகளைத் திறக்கவேண்டும்” என்கிறாள் ஆண்டாள் பிராட்டியார்.

திருப்பாவை 16

நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்.
ஆயர் சிறுமிய ரோமுக்கு, அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்,
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.

குறிப்பு

நாயகனாய் = தலைவனாய்
நந்தகோபன் = கண்ணனை வளர்த்த தந்தை நந்தகோபாலன்
கோயில் = தலைவனின் இல்லம் (கோ=தலைவன்)+இல்=இல்லம்)
கொடித்தோன்றும்-கொடிகள் கட்டித் தோன்றும்
தோரண(ம்) = தொங்குதல்
தாள் = தாழ்ப்பாள்
ஆயர் = இடையர்
சிறுமிய ரோமுக்கு = சிறுமிகளான எங்களுக்கு
அறைபறை = ஒலி செய்யும் பறை (அறை=ஒலி)
மாயன் = மாயங்கள் செய்யக்கூடியவன்
மணிவண்ணன்-நீலமணி போன்ற நிறத்தை உடையவன்
நென்னலே = நேற்றே
வாய்நேர்ந்தான் = வாக்களித்தான் (நேரந்தான்=கொடுத்தான்)
தூயோமாய் = தூய்மையுடன்
துயிலெழ = தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும்படி (துயில்-தூக்கம்)
முன்னம் முன்னம் = முதன் முதலில்
மாற்றாதே = மறுக்காதே
நேயம் = நன்மை,அன்பு
நிலைக்கதவம் = நிலைக் கதவு

பொருள்:-

கோகுலத்து மக்களுக்கு நாயகனாக இருக்கின்ற நந்தகோபனுடைய திருமாளிகையின் வாயில் காப்பவனே, கொடிகள் கட்டப்பட்டு அழகாக விளங்கும் தோரண வாயிலை காப்பவனே, அழகிய மணிகள் கட்டப்பட்டு விளங்கும் கதவின் தாளினை நீக்கி, நாங்கள் அனைவரும் உள்ளே செல்வதற்கு வழிவிடுவாயாக.

அனைவரும் வியக்கத்தக்க வகையில் பல மாயச் செயல்கள் புரிபவனும், மணி போன்று ஒளிவீசும் திருமேனியை உடையவனும் ஆகிய கண்ணன், எங்களுக்கு ஓசை எழுப்பும்படி அடிப்பதற்காக பறை வாத்தியங்களைத் தருவதாக நேற்றே வாக்களித்தான். நாங்கள் அனைவரும் தூய்மையான உள்ளத்துடன், கண்ணனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடி அவனை எழுப்பி, அவனிடமிருந்து பறை இசைக்கருவி பெறுவதற்காக இங்கே வந்துள்ளோம். உன்னை வணங்கிக் கேட்கின்றோம், முதல் முதலாக உன்னிடம்தான் வந்திருக்கிறோம். எங்களது கோரிக்கையினை மறுக்கும் வகையில் உனது வாயால் மாற்று மொழி ஏதும் பேசாமல், வாயில் கதவினை அன்புடன் பிணைத்திருக்கும் தாளினை நீக்கி, நாங்கள் உள்ளே செல்வதற்கு அனுமதிப்பாய் என்று ஆண்டாள் கேட்கிறாள்.