“பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல” பிளாஸ்டிக் தடைக்கு ஒத்துழைப்போம்… 

Read Time:8 Minute, 32 Second

“பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல” பிளாஸ்டிக் தடைக்கு ஒத்துழைப்போம்…

90களில் கிராமங்களிலும், நகரங்களிலும் கடைக்கு செல்லும் போது துணிப்பைகளையும், கூடைகளையும் மக்கள் எடுத்துச் செல்வதை பார்க்க முடிந்தது. தேநீர் கடைகளுக்கு சென்றபோது பாத்திரங்களை கொண்டு சென்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற தென் மாவட்டங்களில் இனிப்பகங்களுக்கு சென்ற போது காகிதத்தில் மடித்து தரப்படும். பனை ஓலையால் செய்யப்பட்ட சிறுபெட்டிகளில் இனிப்பு வைத்து தரப்படும். சிறுபெட்டிகள் அடுக்கி வைத்திருக்கும் காட்சியே அழகாக இருக்கும்.

இதுபோன்று கோவில்களிலும் பூ, பழம், தேங்காய் எடுத்துச் செல்ல பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று பார்த்தால் நிலைமை எங்கும் மாறியுள்ளது. அனைத்திலும் பிளாஸ்டிக் என்ற விஷம் பரவியுள்ளது. அதுயென்ன விஷம்? இயற்கைக்கு தீங்கிழைக்கும் எந்தஒரு பொருளும் விஷம்தான்.  “கைவீசம்மா கைவீசு, கடைக்கு போகலாம் கைவீசு, அங்கு பாலிதீன் கவரில் வாங்கி வரலாம்” என்று மக்களின் எண்ணமும் ஆகிவிட்டது. மஞ்சள்பை, மூங்கில் கம்புகளை கொண்ட பைகளை வைத்திருப்பவர்களை கேலி செய்யும் காலமாகியது.  நவநாகரிகம் என்ற பெயரில்  பிளாஸ்டிக் வளர்ச்சி அசுரனாகிவிட்டது.

காபலீஸ்வரர் கோவில்

உலகிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தஒரு பொருளையும்  முளையிலே கிள்ளிவிட வேண்டும். பிளாஸ்டிக் உயிரினங்களுக்கு பெரும் சவாலாகியுள்ளது, அது கடலையைவும் விட்டுவைக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.  பிளாஸ்டிக் தடை சாத்தியமா? என்ற கேள்வி எழலாம். முடிந்தால் எதனையும் சாதிக்கலாம் என்பதை மட்டும் மனதில் வையுங்கள். மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்க்கட்டும்.  ஒரு பிளாஸ்டிக் பையை மண்ணிற்குள் போட்டால் அது நூறாண்டு பாவத்திற்கு சமமாகிறது.

உலகம் முழுவதும் ஜூம் 5-ம் தேதி உலக சுற்றுச்சுழல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 2018-ம்  ஆண்டு ‘பிளாஸ்டிக் மாசை முறியடிப்போம்’  என்பது  உலக சுற்றுச்சுழல் தினத்தின் கருப்பொருளாக உள்ளது. உலகில் சுற்றுசுழல் மாசுப்பாட்டிற்கு மிகவும் சவாலாக விளங்கும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் மாசுப்பாட்டை முறியடிக்கும் வகையில் அனைத்து நாட்டவர்களும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

ஜூன் 5-ம் தேதி, சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  பேசுகையில், தமிழகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதாக, உலக சுற்றுச்சூழல் தினமான கடந்த அறிவித்தார்.  பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்கள் உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ் டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி உள்பட 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை ஜூலை 16-ந் தேதி வெளியிடப்பட்டது.

உணவுப் பொருட்கள் வைக்கப்படும் பிளாஸ்டிக் உறை, தெர்மக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் கைப் பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காவித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித பைகள், தண்ணீர் பாக்கெட்கள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்டவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இப்போது, பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை என முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்ட கடைகளை நடத்தி வந்த பலர் பிளாஸ்டிக் பொருட்களை முழுவதுமாக அகற்றி விட்டு எளிதில் மக்கக்கூடிய கைப்பைகள், துணிப்பைகள், சணல் பைகள், பாக்குமட்டை தட்டுகள், பேப்பர் குவளைகள், பேப்பர் உறிஞ்சுகுழல், மரக்கட்டையிலான ஸ்பூண்கள் போன்றவற்றை மட்டுமே விற்பனை செய்யும் கடைகளாக மாற்றி உள்ளனர். இது மிகவும் பாராட்டக்கூடியது. இருப்பினும் துணிப்பைகள், பாக்குமட்டை, சணல் போன்ற பொருட்களை தயாரிக்கவும், பயன்படுத்தவும் அவசர மற்றும் தொடர் விழிப்புணர்வு தேவையென்பது மிகவும் முக்கியமானது.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2002-ம் ஆண்டு தமிழகத்தில் முன்னோடி திட்டமாக பிளாஸ்டிக் தடை கொண்டுவரப்பட்டது. ஆனால் ஏதோ சில காரணங்களால் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. இப்போது தமிழக அரசு சிறப்பான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இருப்பினும், பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்கள் தரப்பில் போராட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.  தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உற்பத்தி மையங்கள் இருக்கிறது என்றால் அதிர்ச்சியாகதான் இருக்கும். மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் பணியில் அவர்களும் மனது வைக்க வேண்டும். பாக்கு மட்டைகள், இலைகளை கொண்டு உணவு வழங்கும் பொருட்களை தயாரிப்பதற்கு முன்னுரிமையை கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.  ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்தியா முழுவதும் 2022-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட இருக்கிறது.

இப்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டம் மக்களுடைய ஒத்துழைப்பின்றி சாத்தியம் கிடையாது.   தண்டனை, அபராதம் விதிப்பு போன்ற நடவடிக்கை இதில் பயனளிக்குமா என்பது தெரியவில்லை.  ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்புணர்வு இருந்தால்தான் இந்த பிளாஸ்டிக் தடை வெற்றிபெறும்.  கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பையில் போட்டு கொடுக்கிறார்களே என்று பொதுமக்கள் வாங்கி வந்தால், பிளாஸ்டிக் பை என்றைக்கும் ஒழியாது. எதிர்கால  சந்ததியின் நலனை கருத்தில் கொண்டு, மக்களே பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து துணிப் பைகளுக்கு மாற வேண்டும்.   மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக் என்ணும் அரக்கனை மண்ணை விட்டு ஒழிப்பபோம் என சபதம் எடுப்போம்.

இந்த பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்பதை நாம் மறந்தால் இயற்கை பொங்கியெழும்! என்பதை நாம் மறவவேண்டாம்.

எனவே அரசு கொண்டுவந்துள்ள பிளாஸ்டிக் ஒழிப்புக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.  இயற்கையை காப்போம்…