2019 தேர்தல்: பிரதமர் மோடி பேட்டி, 10 முக்கியக் குறிப்புகள்!

Read Time:11 Minute, 5 Second

2019 நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல்-மேயில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து முக்கிய பிரச்சனைகளுக்கு பதிலுரைத்து உள்ளார். 95 நிமிடங்கள் பேட்டியளித்து பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்தார். உர்ஜித்படேல் ராஜினாமா அரசின் அழுத்தம் காரணமாக நடைபெறவில்லை எனவும் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் பதில்கள்:-

அயோத்தியில் ராமர் கோவில்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக காத்திருக்கிறோம். நீதிமன்ற நடவடிக்கை முடிந்த பிறகே அரசு தன்னுடைய பணியை தொடங்க முடியும். நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரே சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அவசரப்பட வேண்டிய அவசியம் கிடையாது. இந்த விவகாரத்தில் சட்டத்துக்குட்பட்டே தீர்வு காணப்படும் என கடந்த தேர்தல் அறிக்கையில் நாங்கள் தெளிவாக தெரிவித்துள்ளோம். எனவே நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.

ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் வேண்டுமென்ற தலையிட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை தாமதப்படுத்துகிறது. நீதிமன்ற நடவடிக்கைகள் உரிய காலத்தில் முடிய விடாமல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராகி தாமதப்படுத்துகின்றனர்.

உர்ஜித் படேல்

கடந்த 6-7 மாதங்களுக்கு முன்னதாகவே ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகப்போவதாக உர்ஜித் படேல் என்னிடம் தெரிவித்திருந்தார். அவர் ரிசர்வ் வங்கியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். எனவே இதில் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுவது போன்று அவருக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. என்னிடம் தனிப்பட்ட முறையில் சந்தித்த உர்ஜித் படேல் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருந்தார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அவசரமாக கொண்டுவரபட்டது கிடையாது. ஒரு வருடத்திற்கு முன் நாங்கள் மக்களுக்கு எச்சரிக்கை செய்திருந்தோம். நீங்கள் அத்தகைய கருப்பு பணம் வைத்திருந்தால், அபராதம் செலுத்தலாம் மற்றும் நீங்கள் உதவி செய்யப்படும். எனினும் மோடியும் மற்றவர்களைப் போலவே நடந்து கொள்வார் என நினைத்தார்கள், ஒரு சிலர் மட்டுமே கருப்பு பணத்தை தாமாக முன்வந்து திரும்ப செலுத்தினர்.

காங்கிரஸ்

ஊழலில் ஈடுபட்ட எந்தவொரு காங்கிரஸ் தலைவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 4 தலைமுறைகளாக இந்த நாட்டில் ஆட்சி செய்து வந்த குடும்பத்தினர் பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது தற்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 2ஜி, காமன்வெல்த் மற்றும் நில அபகரிப்புகளில் ராபர்ட் வாத்ரா போன்றவர்கள் தற்போது சுதந்திரமாக சுற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், ப.சிதம்பரம் போன்றவர்கள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனக்கு பழிவாங்கும் நடவடிக்கைகளில் பெரியளவில் விருப்பமில்லை. இதில் வரும் தீர்ப்புகளின் அடிப்படையில் அனைத்து சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். ஆனால், அவை தாமதிக்கப்படாமல் உடனடியாக நடைபெற வேண்டும்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் மிகப்பெரிய சாதனையாகும். இதில் நமது தரப்பில் இழப்பு ஏற்படாமல் சாதர்யமாக, அதேசமயம் எதிரிகளின் இலக்கை தகர்த்துள்ளோம். பாகிஸ்தான் ஒரே சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கில் மாறிவிடும் என்று நினைப்பது தவறானது. பாகிஸ்தானை மாற்ற மேலும் அதிகமான தாக்குதல்கள் தேவையாகும். இதற்கு முன்னதாக இருநாடுகளுக்கு இடையே போர் நேரிட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் தோல்வியை தழுவியிருந்தாலும் அதிலிருந்து பாடம் கற்கவில்லை.

அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், அதன் மூலம் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபடும் என்பதில் சந்தேகமில்லை. எனவே பாகிஸ்தான் மீது இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும். மேலும் அவர்களை நம்புவது மிகத் தவறான செயலாகும். பாதுகாப்பு நடவடிக்கைகளில் என் மீது தவறான விமர்சனங்களை முன்வைப்பது நாட்டின் பாதுகாப்பு அமைப்பின் மீதான விமர்சனமாகும்.

முத்தலாக்

உச்சநீதிமன்றம் உத்தரவை அடுத்தே நாங்கள் முத்தலாக் விவகாரத்தில் அவசரச்சட்டம் கொண்டு வந்தோம். இவ்விவகாரத்தில் அரசியலமைப்பின் கீழ் தீர்வு காண்போம் என எங்களுடைய தேர்தல் வாக்குறுதியிலே கூறியுள்ளோம். அதிகமான இஸ்லாமிய நாடுகள் முத்தலாக்கை தடை செய்துள்ளன. இது மதம் மற்றும் அதுதொடர்பான நம்பிக்கை சம்பந்தப்பட்ட விவகாரம் கிடையாது. பாகிஸ்தானிலும் முத்தலாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இது பாலின சமத்துவ விவகாரமாகும். சமூக நீதி தொடர்பானது. இது ஒரு நம்பிக்கை தொடர்பான பிரச்சினை கிடையாது. முத்தலாக் மற்றும் சபரிமலை விவகாரத்தை தனியாக பாருங்கள்.

சபரிமலை

அனைவருக்கும் சட்டம் சமமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் நோக்கம். தங்களுக்கென்று பாரம்பரிய விதிமுறைகளை கொண்ட கோவில்கள் இந்தியாவில் உள்ளது. அங்கு ஆண்களும் செல்ல முடியாது. சபரிமலை விவகாரத்தில் பெண் நீதிபதி ஒருவர் குறிப்பிட்ட கருத்தை தெரிவித்தார். அதனை முழுவதுமாக படிக்க வேண்டும். இது கோவில் பாரம்பரியம் சார்ந்தது என நீதிபதி விளக்கியுள்ளார். எங்கள் நிலைப்பாடு இது தான். சபரிமலை விவகாரத்தில் விசாரணை மேற்கொண்ட 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இடம்பெற்ற பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் செல்ல அனுமதி அளிக்க முடியாது என்று தீர்ப்பளித்தார்.

விவசாயக் கடன்

காங்கிரஸ் கட்சியின் விவசாயக் கடன் தள்ளுபடி என்பது அரசியல் பல்டியாகும். இதன்மூலம் விவசாயிகளை காங்கிரஸ் கட்சி பொய் கூறி தவறாக வழிநடத்துகிறது. இது நடைமுறை சாத்தியம் கிடையாது. ஒரு பொறுப்பு மிகுந்த அரசியல் கட்சி இதுபோன்று செய்வது மிகவும் தவறானதாகும்.

2019 தேர்தல் எப்படி?

2019 நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கும், கூட்டணிக்கும் இடையிலான போட்டியாகும். பா.ஜனதா மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. பா.ஜனதா அரசு ஏற்படுத்தியுள்ள நல்லாட்சி மற்றும் நலத்திட்டங்களின் அடிப்படையில் மக்களின் ஆதரவு உள்ளது. மோடியென்பது பொதுமக்கள் அன்பும் ஆசீர்வாதமும் தான்.

பா.ஜனதா கூட்டணி

2014 தேர்தலில் நாங்கள் முழு மெஜாரிட்டியை பெற்றோம். ஆனால் நாங்கள் கூட்டணி தர்மத்தை மதித்தோம். நாங்கள் இப்போது ஆட்சி செய்து வருகிறோம். எல்லோரையும் ஒன்றாகவே வைத்துள்ளோம். எங்களுடைய கூட்டணி வளரவேண்டும் என்பதைதான் எங்களுடைய விருப்பம். காங்கிரஸ் மாறுப்பட்டது. காங்கிரசுடன் கூட்டணி அமைத்த கட்சிகள் அனைத்தும் காங்கிரஸில் இருந்து வந்தவை. காங்கிரசுக்கு எதிராக எழுந்தவை. அவைகள் மீண்டும் காங்கிரசை அணுகும் போது அபகரிக்கிறது.

ஜிஎஸ்டி

எண்ணம்போல் பேசுவதும், செயல்படுவதும்தான் ராகுலின் நடவடிக்கைகளில் உள்ளது. ராகுலின் தவறான புரிதல்கள்தான் அவரது நடவடிக்கைகளில் பிரதிபலிக்கிறது. ஜிஎஸ்டி மிகவும் நிதானமாக பல ஆலோசனைகளுக்குப் பிறகுதான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி விவகாரத்தில் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அவை அதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஒப்புதல்களுக்குப் பிறகு தான் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் அது அனைவருக்கும் நன்மை செய்யக்கூடியதாகவே வடிவமைக்கப்படும்.

1,200 முதல் 1,250 தினசரி பயன்பாட்டுப் பொருட்கள் மீதான வரி 18, 12 மற்றும் 5 சதவீதங்களுக்கு குறைக்கப்பட்டு வருகிறது. 500-க்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் இருந்த 30 முதல் 40 சதவீதம் வரையிலான மறைமுக வரி களையப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜிஎஸ்டியில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து கட்சியினரின் முழு ஒப்புதலோடும் தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. பயனாளர்களின் நலனை கருத்தில் கொண்டுதான் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவ்வளவு பெரிய நாட்டில் இத்தனை சிறிய காலத்தில் எவ்வளவு சாதித்திருந்தாலும், அது மிக சிறியதாகவே தெரியும். மேலும் ஒவ்வொன்றிலும் மேன்மைப்படுத்திக்கொள்ளவும் காலம் உள்ளது. எனவே ஜிஎஸ்டியில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என கூறியுள்ளார்.