ஆண்டாள் திருப்பாவை – 18, சுலபத்தில் தன் நாயகனைப் பிரிய சம்மதிப்பாளா என்ன?

Read Time:4 Minute, 48 Second

கண்ணனை, பலதேவர் முன்னிட்டு எழுப்பலாம் என்று முந்தைய பாடலில் தீர்மானித்த ஆயர் குலத்து சிறுமிகள், இப்பாடலில் நம்பின்னையை எழுப்புகிறார்கள். கண்ணன் உறங்கிய அறையின் கதவு திறக்கப்படவில்லை. அப்போதுதான் கண்ணனின் மனைவியான நம்பின்னை எழுந்து கதவைத் திறந்தால்தானே, நாம் கூப்பிடுவது கண்ணனுக்கு தெரியும் என ஆண்டாளுக்கு ஞாபகம் வருகிறகிறது. இதனையடுத்து நம்பின்னையின் புகுந்த வீட்டுப் பெருமையை குறித்தும், அவளுடைய சிறப்புகள் குறித்தும் ஆண்டாள் பாடுகிறாள். “செந்தாமரை மலர்களைப் போன்ற கைகளை உடையவளே! நப்பின்னையே! எழுந்துவந்து உன் கை வளைகள் ஒலிக்கும்படியாக கதவுகளைத் திறந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தவர்கள் ஆவோம்,” என்கிறார் ஆண்டாள் பிராட்டியார்.

திருப்பாவை – 18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

குறிப்பு

உந்து = தள்ளு, செலுத்து, பெருகும்
மதகளிற்றன் = மதநீர் சிந்தும் ஆண் யானை (மத+களிற்று=ஆண் யானை)
தோள்வலியன் = வலிமையான தோல் கொண்டவன்
கந்தம் = வாசனை
கமழும் = மணக்கும்
குழலீ = கூந்தல் உடையவள் (குழல்-கூந்தல்)
கடை = கடைவாசல்
திறவாய் = திறப்பாயாக
வந்தெங்கும் = வந்து எங்கும் பரவி
மாதவி = குருக்கத்தி
பல்கால் = பல முறை (பல்=பல)+கால்=முறை)
கூவினகாண் = கூவின பார்
பந்தார் = பந்து பொருந்திய (பந்து+ஆர்(பொருந்திய))
விரலி = விரல் உடையவள்
மைத்துனன் = கணவன்
பேர்பாட = புகழ் பாட
சீரார் = சிறப்பு பொருந்திய (சீர்=சிறப்பு+ஆர்=பொருந்திய)
வளையொலிப்ப = வளையல்கள் ஒலிக்க
திறவாய் = திறந்திடு
மகிழ்ந்தேலோ = மகிழ்ந்து அறிந்து ஏற்றுக்கொள்
(மகிழ்ந்து+ஏல்(ஏற்றுக் கொள்) +ஓர்(ஆராய்ந்து அறிந்து கொள்))
எம்பாவாய் = என் பெண்ணே (பாவாய் = பதுமையே, பெண்ணே)

பொருள்:-

பெருகி வரும் மதநீரை உடைய பெரிய யானையோடுகூட போராடி வெற்றி கொள்ளும் தோள் வலிமை உடைய நந்தகோபனின் மருமகளே, நம்பின்னை பிராட்டியே, நறுமணம் வீசும் கூந்தலை உடைய தேவியே, பொழுது விடிந்ததை உணர்த்தும்பொருட்டு கோழிகள் அனைத்து இடங்களிலும் கூவிவிட்டன. மாதவிக் கொடிகள் படர்ந்திருக்கும் பந்தல்கள் மீது அமர்ந்திருக்கும் பல வகையான குயில்கூட்டங்கள் கூவிவிட்டன. இவ்வாறு கோழிகள் கூவியதையும், குயில்கள் கூவியதையும் நீ பார்க்கவில்லையா. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக்கொண்டவளே! நீ கண்ணனை விளையாட்டாக பரிகாசம் செய்யும்போது நாங்களும் உன்னுடன் சேர வேண்டும் அல்லவா, எனவே நீ உனது செந்தாமரைக் கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலிப்ப, அந்த கைகளை அசைத்து, உனது மாளிகைக் கதவுகளை திறப்பாயாக என்கிறார்.

கண்ணனுடைய எட்டு பட்டத்து ராணிகளில் ஒருத்திதான் நப்பின்னை. இவள் உண்மையில் பகவான் நாராயணனின் மூன்று மனைவியரில் ஒருவளான நீளாதேவியே ஆவாள். பகவான் கிருஷ்ணன் அவதரித்தபோது மூன்று தேவியருமே இந்த உலகத்தில் அவதாரம் செய்தனர். மகாலெட்சுமி ருக்மிணியாகவும், பூமிதேவி சத்யபாமாவாகவும், நீளாதேவி நப்பின்னையாகவும் அவதரித்து கிருஷ்ணனை மணந்துகொண்டனர். நப்பின்னை ஆயர்குலத்தில், யசோதையின் சகோதரனுக்கு மகளாகப் பிறந்தவள். ஆண்டாள் தன்னை ஆயர்குலத்தில் பிறந்தவளாகக் கருதிக்கொண்டு பாவை நோன்பு இருப்பதால் நம்பின்னையை மட்டும் சிறப்பித்து அழைக்கிறாள். நம்பின்னை அத்தனை சுலபத்தில் தன் நாயகனைப் பிரிய சம்மதிப்பாளா என்ன?…