ஆண்டாள் திருப்பாவை -19, நப்பின்னையே, கண்ணனே விழித்து எழுங்கள்!

Read Time:4 Minute, 50 Second

கிருஷ்ணன் படுத்திருக்கும் அறையின் வாசலில் நின்றுகொண்டு, கிருஷ்ணனை உறக்கம் நீங்கி எழுந்திருக்குமாறு கேட்கிறாள் ஆண்டாள் பிராட்டியார். கிருஷ்ணன் எழுந்து வருவதாகத் தெரியாத நிலையில், கிருஷ்ணன் எவ்வளவு சொகுசாகப் படுத்து உறங்குகிறான் என்பது பாடலாக விவரிக்கிறார். ஆண்டாளின் கெஞ்சலை கேட்டு தன் மலர்வாய் திறந்து பதிலளிக்க கிருஷ்ணனுக்கு ஆசைதான். ஆனால் நப்பின்னையின் மீறி எதுவும் செய்யமுடியவில்லை. நப்பின்னை திரும்பும் வேளையிலாவது உன் கைகளை அசைத்து அபயம் என்று சொன்னாலே போதுமே என்று கெஞ்சுகிறாள். கிருஷ்ணன் அதற்கும் அசயவில்லை. தாயாரின் கடாக்ஷம் இருந்துவிட்டால் பெருமாளின் கடாக்ஷம் கிடைத்துவிடும் என்ற முடிவுக்கு உடனடியாக வரும் ஆண்டாள் பிராட்டியார், இனி நாம் நப்பின்னையிடமே வேண்டிக் கொள்வோம் என்று நினைக்கிறார்.

நீதான் அவனை எழுந்திருக்க விடாமல் செய்கிறாயோ? என்று நப்பின்னையிடம் கேள்வி எழுப்பும் ஆண்டாள் பிராட்டியார், “எங்களுடைய குலத்திலேயே பிறந்து எங்களுடனே ஆடியும் பாடியும் திரிந்த நீ, நாங்கள் வேண்டி விரும்பிக் கேட்டும் கிருஷ்ணனை எங்களுடன் அனுப்பாவிட்டால், அது உன்னுடைய மேன்மைக்கு இழுக்கு ஆகாதா?” என்று கேட்கிறாள்.

திருப்பாவை – 19

குத்துவிளக்கு எரிய கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய் .

குறிப்பு

கோட்டுக்கால் – யானை தந்தத்தால் செய்த கால் (கோடு=தந்தம்)
பஞ்சசயனம் – பஞ்சு அடைத்த படுக்கை
கொத்தலர் – கொத்துக் கொத்தாக மலர்ந்திருக்கும் (கொத்து+அலர் (மலர்))
பூங்குழல் – பூ அணிந்த கூந்தல்
கொங்கை – மார்பு
கிடந்த – பள்ளி கொண்ட
மைத்தட – மையிட்ட பெரிய (தட-பெரிய)
கண்ணினாய் – கண்ணையுடைய
மணாளனை – மணந்த கணவனை
எத்தனை போதும் – எந்த பொழுதிலும்
துயிலெழ – தூக்கத்தில் இருந்து எழ (துயில்=தூக்கம்)
ஒட்டாய் – பிரிவில்லாமல் பொருந்துதல்
காண் – பார்
எத்தனையேலும் – எந்தநேரமும்
பிரிவாற்ற – பிரிதல் பொறுக்க (பிரிவு+ஆற்ற(பொறுக்க))
தத்துவம் – உண்மை

பொருள்:-

நான்கு புறமும் குத்து விளக்கு பிரகாசத்துடன் எரிந்து ஒளி வீசும் அறையினில், யானைத் தந்தங்களால் அழகு செய்யப்பட்ட கட்டிலினில் மேல், மெத்தென்று இருப்பதும், அழகு, குளிர்ச்சி, மென்மை, நறுமணம் மற்றும் வெண்மையான பஞ்ச சயனம் என்று அழைக்கப்படும் படுக்கையின் மேல் படுத்திருக்கும் கண்ணபிரானே, கொத்து கொத்தாக பூத்துக் கிடக்கும் மலர்களை அணிந்துள்ள கூந்தலை உடைய நப்பின்னை பிராட்டியின் மார்பினைத், தனது அகன்ற மார்பினில் வைத்தவாறு உறங்கும் கண்ணபிரானே, மலர் போன்ற மார்பினை உடையவனே, நீ உனது திருவாய் மலர்ந்து அருள்வாயாக.

மை தீட்டிய அகன்ற கண்களை உடைய நப்பின்னை பிராட்டியே, நீ உனது கணவன் துயிலெழுந்து படுக்கையினை விட்டு எழுந்துசெல்ல எப்போதும் சம்மதிக்கமாட்டாய் போலும்; அவனது ஒரு நிமிடப் பிரிவினையும் உன்னால் தாங்கமுடியாது போலும்; கண்ணன் உன்னை விட்டு பிரிந்திருப்பதை தடுக்கும் வண்ணம், எங்களது தலைவனாகிய கண்ணபிரானை நாங்கள் காண்பதற்குகூட அனுமதிக்காமல் இருப்பது, தலைவியாகிய உனது இயல்புக்கும் உனது தன்மைக்கும் பொருத்தமன்று. எனவே நீ துயிலெழுந்து, பின்னர் கண்ணனை துயிலெழுப்பி, நாங்கள் அவனைக் கண்டு மகிழ வகை செய்வாயாக” என்கிறாள்.