ரூ. 2000 நோட்டு அச்சடிப்பு குறைப்பு ஏன்?

Read Time:3 Minute, 37 Second

ரூ. 2000 நோட்டுகளை அச்சடிப்பதை பாரத ரிசர்வ் வங்கி குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மதிப்பிழப்பு செய்து மத்திய அரசு கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி நடவடிக்கை எடுத்தது. புதிய ரூ. 500, ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை அரசு வெளியிட்டது. மத்திய அரசு உயர்மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது விமர்சனத்திற்கு உள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்கள் பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு நடவடிக்கையே ஊக்குவிக்கும் என்ற விமர்சனம் எழுந்தது. இதற்கிடையே 2000 ரூபாய் நோட்டுக்களையும் மதிப்பிழப்பு செய்யலாம் என்ற தகவல்களும் வெளியாகியது. ஆனால் அரசு தரப்பில் மறுக்கப்பட்டது.

இந்தியாவில் வருமான வரித்துறை மற்றும் பிற விசாரணை முகமைகள் சோதனை நடத்திய போது கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2018 மார்ச் வரையில் புழக்கத்திலிருந்த பணத்தின் மதிப்பு ரூ. 18.03 லட்சம் கோடியாகும். இதில் ரூ. 6.73 லட்சம் கோடி அல்லது 37 சதவிதம் 2000 ரூபாய் நோட்டுக்களாகும். 500 ரூபாய் நோட்டுக்கள் ரூ. 7.73 லட்சம் கோடியாகும். தோராயமாக 43 சதவிதமாகும். மற்றவை குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களாகும்.

இந்நிலையில் பாரத ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதை நிறுத்திவிட்டதாக தி பிரிண்ட் செய்தி வெளியிட்டது. 2000 ரூபாய் நோட்டுக்களை பதுக்கலுக்கும், வரி ஏய்ப்புக்கும், பண மோசடிக்கும் பயன்படுத்தப்படுகிறது என்ற சந்தேகத்தில் அரசு அச்சடிப்பதை நிறுத்திவிட்டதாக செய்தியில் குறிப்பிடப்பட்டது.

இதற்கிடையே ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பு பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் அவ்வப்போது புழக்கத்தில் இருக்கும் பணத்துக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ முடிவெடுக்கும். ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பது பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.2,000 நோட்டுகளை குறைந்த அளவில் வைத்திருக்கவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிதல்ல என நிதியமைச்சக தகவல் வெளியாகியது.

பொருளாதார விவகாரத்துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் டுவிட்டரில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “ நோட்டுகளை அச்சிடும் பணி தேவைக்கேற்பவே திட்டமிடப்படுகிறது. ரூ.2000 நோட்டுகள் இப்போதைக்கு தேவைக்கு அதிகமாகவே புழக்கத்தில் உள்ளன. மொத்த பணப்புழக்கத்தில் 35%-க்கும் மேலாக ரூ.2000 நோட்டுகள் உள்ளன. அதனாலேயே ரூ.2000 நோட்டுகளை அச்சிடுவது தொடர்பாக அண்மைக்காலமாக எந்த புதிய முடிவும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.