ஆண்டாள் திருப்பாவை – 20, பெரிய பிராட்டியே! உன்னுடைய கருணை எங்களுக்கு கிடைக்காதா?

Read Time:5 Minute, 10 Second

எழுந்திராத கிருஷ்ணன், நப்பின்னை பிராட்டி இருவரும் உடனே எழுந்திருக்க வேண்டும் என்று ஆண்டாள் பிராட்டியார் இப்பாடலை பாடுகிறார். கிருஷ்ணனையும், நப்பின்னையையும் எழுந்திருக்கச் செய்ய இருவரையும் புகழ்ந்து பாடினார். ஆனால் இருவரும் எழுந்திருக்கவில்லை. இத்தனைக்கும் ஆண்டாள் பிராட்டியார் முதலில் ஆண்டாள் நப்பின்னையைத்தான் புகழ்ந்து பாடினார். கிருஷ்ணனை எழுப்பி அனுப்பச் சொன்னாள். என்னதான் அவளைப் புகழ்ந்தும் கெஞ்சியும் கேட்டும், கிருஷ்ணனை எழுந்திருக்க விடவில்லை. ஒருவேளை கிருஷ்ணனைப் புகழாமல் நப்பின்னையை மட்டும் புகழ்ந்ததால், அவள் இப்படி நடந்துகொள்கிறாளோ என்று எண்ணிய ஆண்டாள், இந்தப் பாடலில் இருவரையுமே புகழ்ந்து பாடுகிறாள்.

கிருஷ்ணனை பாடிய பின்னர் நப்பின்னையை துணைக்கு அழைக்கும் ஆண்டாள் பிராட்டியார், அவரை நீளா தேவியாகப் பார்க்காமல், சாட்சாத மகாலட்சுமியாகவே பாவித்து, பெரிய பிராட்டியே! உன்னுடைய கருணை எங்களுக்கு கிடைக்காதா? உன்னுடைய கருணை மட்டும் எங்களுக்கு இருந்துவிட்டால், கிருஷ்ணனின் கருணை எங்களுக்கு தானாகவே கிடைத்துவிடுமே. எங்களிடம் கருணை கொண்டு, எங்கள் நோன்புக்குத் தேவையான விசிறியும், கண்ணாடியும் தருவதுடன், கிருஷ்ணனையும் எழுப்பி எங்களுடன் அனுப்பி வைப்பாய்’ என்று வேண்டுகிறாள்.

திருப்பாவையின் இரண்டாவது பாடலில், நோன்பு நோற்கும் சமயத்தில் தங்களது கூந்தலுக்கு மையிட்டும், மலரிட்டும் அழகு செய்துகொள்ளமாட்டோம் என்று உணர்த்திய ஆயர் குலத்துச் சிறுமிகள், நோன்பு முடிந்த பின்னர் தங்களது கூந்தலைத் திருத்திக்கொள்ளும் வகையில், கண்ணாடி கொடுத்து அருளுமாறு நப்பின்னை பிராட்டியிடம் கோருவதை நாம் இந்த பாட்டில் உணரலாம்.

திருப்பாவை – 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

குறிப்பு

அமரர்க்கு – தேவர்களுக்கு
கப்பம் – நடுக்கம்
கலியே – மிடுக்குடையவனே (கலி-மிடுக்கு)
துயில் – தூக்கம்
எழாய் – எழுங்கள்
செப்பம் – சீர்மை, சிறப்பு, நேர்மை
உடையாய் – உடையவனே
செற்றார்க்கு – பகைவர்களுக்கு
விமலா – குற்றமற்ற
செப்பென்ன – செப்பு போன்ற (செப்பு(செம்பு)+அன்ன(போன்ற))
மென் முலை – மென்மையான மார்பு
செவ்வாய் – சிவந்த வாய்
மருங்குல் – இடை
நங்காய் – நங்கையே
திருவே – திருமகளே
உக்கமும் – விசிறியும்
தட்டொளியும் – கண்ணாடியையும்
மணாளனை – மணம் புரிந்த கணவனை
எம்மை – எங்களை
நீராட்டேலோர் – உணர்ந்து நீராட்டு

பொருள்:-

முப்பத்து முக்கோடி தேவர்களை துன்பங்கள் ஏதேனும் அணுகும் முன்னமே, அவர்களது நடுக்கத்தை தவிர்த்து அவர்களது இடர்களைக் களையும் வல்லமை வாய்ந்த பெருமானே, நீ உனது உறக்கம் களைந்து எழுந்திருப்பாயாக. செம்மையான குணங்களை உடையவனே, வல்லமை வாயந்தவனே, உனது பகைவர்கள் உன்னிடம் உள்ள பயத்தினால் காய்ச்சல் அடையச்செய்யும் வீரம் பொருந்தியவனே, குற்றங்கள் ஏதும் இல்லாதவனே, நீ எழுந்திராய்.

செப்புக் குடங்கள் போன்று அழகினை உடையதும் மென்மையும் உடையதும் ஆகிய மார்புகளையும், சிவந்த உதடுகளையும், சிறிய இடையினையும் உடைய நப்பின்னை பிராட்டியே, எங்களின் செல்வமாக விளங்கும் நங்கையே, நீ துயில் எழுவாயாக. உனது மணாளனான கண்ணனையும் துயிலெழுப்பி, அவனிடம் ஆலவட்டத்தையும் கண்ணாடியையும் கொடுத்து அனுப்புவாயாக. நாங்கள் கண்ணனையும் அழைத்துக்கொண்டு நீராடச் செல்வதற்காக காத்திருக்கின்றோம். கண்ணனையும் எங்களுடன் அனுப்பி, நாங்கள் நீராடுவதற்கு வழி வகுப்பாயாக என்கிறாள்.