விஜய் மல்லையா பொருளாதார குற்றவாளி – நீதிமன்றம் அதிரடி; அடுத்தது என்ன?

Read Time:5 Minute, 29 Second

விஜய் மல்லையாவை பொருளாதார குற்றவாளியாக அறிவித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பொருளாதார குற்றவாளிகள் சட்டம்

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் பணத்தை கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் தொழில் அதிபர்கள் தப்பி வெளிநாடுகளுக்கு ஓடும் சம்பவம் தொடர்கிறது. இதுபோன்ற வழக்குகளின் விசாரணை சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டது. இச்சட்டம் போதுமானதாக இருக்கவில்லை. பிஎம்எல்ஏ சட்டத்தின்படி, குற்றவாளியின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய முடியாது. பொருளாதாரக் குற்றங்களின் மூலம் சேர்த்த சொத்துகளை மட்டுமே பறிமுதல் செய்ய முடியும் என்ற நிலையிருந்தது.

விஜய் மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி என்ற தொடர் ஓட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு நடவடிக்கையை எடுத்தது.அதன்படி வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பொருளாதார மோசடி குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில் மசோதா ஒன்றை மத்திய அரசு கொண்டுவந்தது. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தினை அமல்படுத்தியது. இதனால் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பொருளாதார மோசடி குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய முடியும்.

100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துவிட்டு வழக்கைத் தவிர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுபவர்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்ப மறுப்பவர்கள் போன்றவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யமுடியும்.

குற்றவாளிகள் நாடு திரும்ப தொடர்ந்து மறுக்கும் பட்சத்தில் கடன் கொடுத்தவர்களுக்கான தொகையை சொத்துகளை விற்று அமலாக்கத்துறை திருப்பிக் கொடுக்கும். இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்பு சட்டம், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரிய சட்டம், சுங்க சட்டம், நிறுவனங்கள் சட்டம், எல்எல்பி சட்டம், புதிய திவால் சட்டம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நிதி மற்றும் நிதி சார்ந்த குற்றங்களுக்கு இந்த மசோதா செல்லுபடியாகும்.

பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி மோசடி செய்து இங்கிலாந்துக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நாடு திரும்ப மறுத்ததால் இத்தகைய சட்டம் ஒன்றைக் கொண்டுவரவேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மல்லையாவிற்கு எதிராக நடவடிக்கை

விஜய் மல்லையாவிற்கு எதிராக புதிய சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. தலைமறைவு பொருளாதார குற்றவாளி என அறிவிக்கக்கோரும் வழக்கில் தான் பதிலளிக்க அவகாசம் தர வேண்டும் என விஜய் மல்லையா தரப்பில் தொடர்ந்து நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து வழக்கை ஒத்திவைக்க நேரிட்டது. மல்லையா தரப்பில் எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டது.

சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், விஜய் மல்லையாவை தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவித்து உத்தரவிட்டது. உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா தரப்பில் கேட்கப்பட கால அவகாசமும் நிராகரிக்கப்பட்டது. புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எதிர்க்கொள்ளும் முதல் நபர் விஜய் மல்லையா ஆவார்.

அடுத்தது என்ன?

தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி அமலாக்கப்பிரிவு, அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்யலாம். கர்நாடகம், இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும். தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் பிரிவு 2எப்-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிவு 2எப்-ன் கீழ் பொருளாதார மோசடியை செய்துவிட்டு, விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பவர்கள் மற்றும் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்களை தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கலாம்.