ஆண்டாள் திருப்பாவை – 21, கண்ணா எழுந்திரு !

Read Time:4 Minute, 14 Second

இதுவரையில் தோழிகள் முதல் நப்பின்னை வரையில் அனைவரையும் எழுப்பிய ஆண்டாள் பிராட்டியார், இந்த பாடல் முதல் கிருஷ்ணனிடம் பேசி அவனைத் துயில் எழுப்ப முயற்சி செய்கிறார். நப்பின்னையை புகழ்ந்தும், கிருஷ்ணனைப் புகழ்ந்தும், இருவரையும் சேர்த்தே புகழ்ந்தும் கிருஷ்ணன் எழுந்தபாடில்லை. இப்போது கிருஷ்ணன் யாருடைய பிள்ளை, அவன் தந்தை எப்படிப்பட்ட வள்ளல், அவனுடைய செல்வச் செழிப்புதான் என்ன என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி, கிருஷ்ணனை எழுந்திருக்குமாறு சொல்கிறாள். இப்பாடலில் அனைவரும் இணைந்து கிருஷ்ணனின் குணங்களைப் புகழ்ந்து பாடுவதையும் நாம் உணரலாம்.

உன்னிடம் பிரேமை கொண்டவர்களாக வந்து இருக்கிறோம் என்று கூறும் ஆண்டாள் பிராட்டியார், எங்களுக்கு அருள் செய்ய எழுந்து வருவாயாக என்று கிருஷ்ணனிடம் வேண்டுகிறாள். ஆனால், ஆண்டாளின் தெள்ளுத் தமிழ்ப் பாசுரங்களை இன்னும் கேட்கவேண்டும் போல் இருக்கிறதோ என்னவோ? கிருஷ்ணன் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.

திருப்பாவை – 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன்னடி பணியுமாப் போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

குறிப்பு

ஏற்ற கலங்கள் – ஏந்திய பாத்திரங்கள் (கலம்-பாத்திரம்)
மீதளிப்ப – மேலும் வழியும்படி
மாற்றாதே – இடைவிடாமல்
பால்சொரியும் – பால் சுரக்கின்ற
ஆற்றப் படைத்தான் – ஆற்றல் படைத்தவன்
அறிவுறாய் – அறிவு உணர்தல்
ஊற்றம் – உறுதி,வலிமை
உடையாய் – உடையவனே
பெரியாய் – பெருமை பொருந்தியவனே
தோற்றமாய் – தோற்றத்தின் காரணமாக (தோற்றம்+ஆய்(தாய்))
துயிலெழாய் – உறக்கத்தில் இருந்து ஏழு (துயில்-உறக்கம்)
மாற்றார் – பகைவர்
வலிதொலைந்துன் – வலிமையை தொலைத்து உன்
வாசற்கண் – வாசலில்
ஆற்றாது – ஆத்த மாட்டாமல்
பணியுமாப் போலே – பணிவது போல்
புகழ்ந்தேலோர் – புகழ்வதை உணர்ந்து,எங்களை ஏற்றுக்கொள்

பொருள்:-

பால் கறப்பதற்காக வைத்துள்ள பாத்திரங்கள் நிரம்பி, அந்த பாத்திரங்களிலிருந்து பால் பொங்கி வழியுமாறு, பால் கறப்பவர்கள் சிறுவர்களாயினும் பெரியோர்களாயினும், தங்களது தன்மையில் மாற்றம் ஏதுமின்றி, வாரிக் கொடுக்கும் வள்ளல்கள் போன்று பால் சுரக்கும் பெருமை மிகுந்த பசுக்களை உடைய நந்தகோபனின் மகனே, நீ உறக்கம் தெளிந்து, உணர்வுற்று எழுவாயாக;

வேதங்களால் புகழப்படுபவனே, வேதங்களும் அளக்க முடியாத பெருமை வாய்ந்தவனே, உலகத்தவர் கண்டு மகிழும் வண்ணம் உலகில் தோன்றியவனே, ஒளி மிகுந்து பிரகாசிப்பவனே, நீ துயிலெழுவாயாக; உனது வலிமையை உணர்ந்த உனது பகைவர்கள், தங்களது வலிமையை இழந்தவர்களாய் ஏதும் செய்யத் திறமையின்றி உனது வாசலில் வந்து நின்று உனது திருவடிகளைப் பணிவதற்காக நிற்கின்றார்கள், நாங்களும் உன்னைப் புகழ்ந்து பாடி, உனது திருவடிகளை வணங்குவதற்காக உனது வாசலில் வந்து காத்து நிற்கின்றோம். எனவே கண்ணபிரானே நீ துயிலெழுந்து, உனது வாயிலுக்கு வந்து எங்களுக்கு உனது திருமுக தரிசனம் அருளுவாயாக என்கிறாள்.