2019 தேர்தல்: காங்கிரசுக்கு டாட்டா! மாயாவதி – அகிலேஷ் யாதவ் கைகோர்ப்பு

Read Time:6 Minute, 23 Second

2019 பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் மெகா கூட்டணி அமைப்பதில் இருந்து காங்கிரஸ் கட்சி கழற்றிவிடப்பட்டது.

இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளது. மாநிலத்தில் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் கட்சிக்கு மத்தியில் ஆட்சியமைக்க வாய்ப்பு பிரகாசமாகும். 2014-ம் ஆண்டு காங்கிரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள், அயோத்தி விவகாரம், மோடி அலை காரணமாக பா.ஜனதா அமோக வெற்றியை தனதாக்கியது. பா.ஜனதா கட்சி 71 தொகுதியிலும் அதன் கூட்டணியான அப்னா தளம் 2 தொகுதியிலும் வெற்றிப்பெற்றது. காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் வெற்றிப்பெற்றனர். சமாஜ்வாடி கட்சி 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மாநிலத்தில் மற்றொரு பெரிய கட்சியான பகுஜன் சமாஜ் வாஷ்-அவுட் ஆனது. பா.ஜனதா அலையில் பிராந்திய கட்சிகள் (சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்) சிக்கி சின்னாப்பின்னமானது.

2017 தேர்தலில் சரியான அடி

மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி அரசு ஆட்சிக்காலம் முடிந்ததும் 2017 தேர்தல் நடைபெற்றது. அகிலேஷ் யாதாவின் அடம் காரணமாக சமாஜ்வாட்சி கட்சியின் தலைமையில் பிளவு ஏற்பட்டது. பா.ஜனதாவிற்கு மேலும் வலு சேர்த்தது. மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சியை இழந்த சமாஜ்வாடி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தது, 54 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றது. மாயாவதியின் கட்சியும் பெரிய அடியை சந்தித்தது. வெறும் 19 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று இருந்தது. 325 தொகுதிகளில் வெற்றிப்பெற்று பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. இது மாநில கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு சரியான அடியாக அமைந்தது.

இதனையடுத்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் பா.ஜனதாவை எதிர்க்கொள்ள வேண்டும் என்றால் கூட்டணி அவசியம் என்ற நிலை ஏற்பட்டது.

2018 இடைத்தேர்தல்

கோராக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்யநாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர். எனவே காலியாக உள்ள இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பகுஜன் சமாஜ் கட்சி வெளிப்படையாக சமாஜ்வாடிக்கு ஆதரவை தெரிவிக்கவில்லை, ஆனால் போட்டியிலிருந்து விலகியது. இதனால் சமாஜ்வாடி வெற்றி பிரகாசையானது. இறுதியில் யோகி ஆதித்யநாத் நீண்டகாலமாக எம்.பியாக இருந்த கோரக்பூர் தொகுதி சமாஜ்வாடியிடம் சென்றது. பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்தது. கூட்டணிக்கு வித்திட்டது.

2019 தேர்தல்

ஏப்ரல்-மேயில் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் வெற்றிப்பெற்ற காங்கிரஸ் அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைக்க முயற்சி செய்கிறது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சியை கூட்டணியில் இணைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டிவருகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக பேசிக்கொள்ளலாம், கூட்டணி அமைய வேண்டும் என்பதில் காங்கிரஸ் ஸ்திரமாக இருந்தது.

அகிலேஷ் யாதவ், மாயாவதி.

இதற்கிடையே மெகா கூட்டணியென்றால் காங்கிரசுக்கும் தொகுதிகளை வழங்க வேண்டும் என்ற எண்ணம் இரு மாநில கட்சிகள் இடையேயும் நிலவியது. 40/ 40 என சரிசமமாக பிரித்து போட்டியிடலாம் என்ற திட்டம் அக்கட்சிகள் மத்தியில் எழுந்ததாக தெரிகிறது. மாயாவதிக்கும் நீண்ட நாள் பிரதமர் கனவு உள்ளது. அதனால் அதிகமான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறார்.

காங்கிரசுக்கு டாட்டா

இந்நிலையில் மாநிலத்தில் காங்கிரஸ் மெகா கூட்டணியிலிருந்து கழற்றிவிடப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் சந்தித்து மெகா கூட்டணி குறித்து பேசியுள்ளனர். அப்போது அவர்கள் காங்கிரசின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். கூட்டணியில் காங்கிரசை இணைக்க அவர்கள் விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிப்பதாக என்.டி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் இரு கட்சிகளும் மாநிலத்தில் உள்ள பிற உதிரி கட்சிகளை மெகா கூட்டணியில் இணைக்க சம்மதம் தெரிவிப்பதாக தெரிகிறது. ஜனவரி 15-ம் தேதிக்கு பின்னர் தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படுகிறது. அஜித் சிங்கின் ராஷ்டீரிய லோக் தள் கட்சிக்கு மூன்று தொகுதிகள் கொடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இறுதியில் காங்கிரசுக்கு டாட்டா காட்டும் நிலையே ஏற்பட்டுள்ளது.