ஆண்டாள் திருப்பாவை – 22, செந்தாமரைக் கண்ணால் பார் கண்ணா!

Read Time:3 Minute, 42 Second

கிருஷ்ணா அருள் வேண்டி வந்திருக்கும் எங்கள்மேல் இரக்கம் காட்டக்கூடாதா? உன் செந்தாமரைக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்க்கமாட்டாயா? என்று ஆயர்குலச் சிறுமிகள் கெஞ்சுகிறார்கள். கிருஷ்ணனின் கடைக்கண் பார்வை, நமது பாவங்கள் அனைத்தையும் போக்கவல்லது என்பதை உணர்த்தும் பாடல். கிருஷ்ணனின் தரிசனத்துக்காக வந்திருப்பவர்களின் தகுதிகளைச் சொல்லும் ஆண்டாள், அப்பேர்ப்பட்டவர்கள் உன்னுடைய தரிசனத்துக்காக வந்திருக்கிறார்கள் என்றால், நீ எப்படி உன்னை ஏழை என்று சொல்லமுடியும்? விரும்பும் எதையும் தரக்கூடிய உன்னை, நீ ஏழை என்று சொல்லிக்கொண்டால், நாங்கள் அதை நம்பிவிட முடியுமா என்று கேட்பதுபோல் பாடுகிறாள் ஆண்டாள் பிராட்டியார்.

திருப்பாவை – 22

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பு எய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுசிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

குறிப்பு

அங்கண்மா – அழகான பெரிய இடம் (அம்(அழகு)+கண்(இடம்) +மா(பெரிய))
ஞாலத்து – உலகத்து
அபிமான – பெருமை
பங்கமாய் – பங்கப் பட்டு (பங்கம்+ஆய்(ஆகி))
பள்ளிக்கட்டிற்கீழே – உறங்கி கொண்டிருக்கும் கட்டிலின் கீழ்
சங்கம் – கூட்டம்
தலைப்பெய்தோம் – தலைகள் பல திரள,மழைப் போல பெய்தோம்
கிங்கிணி – கால் சலங்கையில் இருக்கும் மணிகள்,மணிகளின் ஓசை
வாய்ச்செய்த – வாய்போல
செங்கண் – சிவந்த கண்
சிறுச்சிறிதே – கொஞ்சம் கொஞ்சமாக
விழியாவோ – விழிக்க மாட்டாயோ
திங்களும் – சந்திரனும்
ஆதித் தியனும் – சூரியனும்
எழுந்தாற்போல் – உதிப்பது போல
அங்கண் – அழகிய கண் (அம்(அழகு)+கண்)
நோக்குதியேல் – நோக்கு, பார்
இழிந்தேலோர் – தீர்த்து, அறிந்து, ஏற்றுக்கொள்

பொருள்:-

அழகியதும் அகன்றதும் ஆகிய இந்த நிலவுலகத்தில் உள்ள பல அரசர்கள், தங்களது செருக்குகள் நீங்கப்பெற்று, உனது கடைக்கண் பார்வைக்கு ஏங்கியவர்களாய், உனது படுக்கைக் கட்டிலுக்கு கீழே, கூட்டமாக குழுமி இருக்கின்றார்கள்.

ஸ்ரீ ஆண்டாள், திருவல்லிக்கேணி.

நாங்களும், அவர்களைப் போன்று ஒரு குழுவாக, உனது கட்டிலின் தலைப்பக்கத்தில், உனது கடைக்கண் பார்வையினை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். கிண்கிணி மணியின் வாயில் பொறிக்கப்பட்டு இருக்கும் தாமரைப் பூ போன்றதும் செம்மையான நிறத்தில் உடையதும் ஆன உனது கண்களை சிறிது சிறிதாக மலர்ந்து எங்களை நீ நோக்கமாட்டாயா, சூரியனும் சந்திரனும் போன்று ஒளி வீசும் உனது கண்கள் கொண்டு, எங்களை நீ நோக்கினால், வினைகளால் எங்கள் மீது படர்ந்துள்ள பாவங்கள் நீங்கும் என்கிறார்கள்.