நகர்புற தனியார் மருத்துவமனைகளில் அதிகரிக்கும் சிசேரியன் பிரசவம்!

Read Time:10 Minute, 23 Second

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சிசேரியன் முறையில் குழந்தை பிறப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. 9 சதவீதத்திலிருந்து 18.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.

கருப்பையில் உள்ள குழந்தை அம்மாவின் இடுப்பெலும்பு எனும் கோட்டையைக் கடந்து, கருப்பை வாய் எனும் சுரங்கப் பாதையையும் கடந்து, பிறப்புறுப்பு எனும் இயற்கை பாதை வழியாக வெளி உலகுக்கு வரும் இயற்கையான முறைக்கு எதிரானது சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும் முறை. இயற்கையான முறையில் குழந்தை பிறப்பதில் சிரமம் ஏற்படும் போது குழந்தையின் உயிரையும், அம்மாவின் உயிரையும் காப்பாற்ற உள்ளே இருக்கும் குழந்தையைப் பாதுகாப்பாக வெளியில் எடுக்கப்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், ஆஸ்துமா போன்ற நோய்கள் இருப்பவர்களுக்கு சிசேரியன் தேவைப்படும். ஹெச்ஐவி, ஹெர்பிஸ் போன்ற தொற்று நோய்கள் தாய்க்கு இருக்குமானால், சிசேரியன் தேவைப்படலாம். லான்சட் அறிக்கையின்படி தனியார் மருத்துவமனையில் சிசேரியன் முறையிலான பிரசவம் பிரதானமாக இயங்கி வருகிறது என்பதை காட்டுகிறது. தனியார் மருத்துவமனைகளில் தேவையில்லாமல் சிசேரியன் பிரசவம் மேற்கொள்ளப்படுகிறது, பிரச்சனையில்லாத போதும் சிசேரியன் பிரசவத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறது என்ற கேள்வியை வலுப்பெற செய்கிறது.

உலக அளவிலும் சிசேரியன் முறையிலான பிரசவம் அதிகரித்து வருகிறது. தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சை நடைமுறைகள் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் மரணம் அல்லது இயலாமைக்கு முடிவடையும் என்று உலக சுகாதார மையம் 2015-ல் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக சிசேரியன் முறையிலான பிரசவம் கணிசமாக உயர்ந்து வருகிறது. இது தாய்மார்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது.

“சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதால் எங்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் செலவானது. இப்போது இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக பெரிதும் யோசிக்க வேண்டியதுள்ளது,” என்று சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பெண் கூறுகிறார். முதல் பிரசவம் சிசேரியன் முறையில் செய்துக்கொண்டால், இரண்டாவது பிரசவத்தின் போது முன்கவனம் அதிகம் தேவைப்படுகிறது.

சுகப் பிரசவத்துக்கு வாய்ப்பு இருந்தும் இன்றைக்கு அநேகம் பெண்கள் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதையே பெரிதும் விரும்புகிறார்கள். இதனால் ஏற்படும் சிக்கல்களை அறிந்தும் பெரும்பாலான மருத்துவர்களும் அறுவைசிகிச்சை பிரசவத்தையே ஊக்கப்படுத்துகிறார்கள். தவிர்க்க முடியாத சூழலில் மருத்துவக் காரணங்களுக்காக 10-15 சதவீதம் அளவுக்கு அறுவைசிகிச்சைப் பிரசவங்களை அனுமதிக்கலாம் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். ஆனால், இந்திய மருத்துவர்களோ இது 15-20 சதவீதம் இருக்கலாம் என்கிறார்கள்.

சிசேரியன் முறையிலான பிரசவம் ஏற்றுக்கொள்ளத்தக்க சதவீதத்தில் உள்ளதா? 1985 – ம் ஆண்டு ஒரு நாட்டில் 10% -15% பிரசவம் சிசேரியன் நடைமுறைகளால் இருக்கலாம் என்றது உலக சுகாதார மையம். ஆனால் 2015 அறிக்கையில் அது தேவைப்படும் எந்தவொரு பெண்மணிக்கும் வழங்கலாம் என்றது. ஒரு நாட்டில் சிசேரியன் முறையிலான பிரசவ விகிதம் 10 சதவிதத்தை நோக்கி உயர்ந்தபோது பிரசவத்தின் போது குழந்தை மற்றும் தாய் இறப்பு விகிதங்கள் சரிந்தது. ஆனால் விகிதம் 10% கடந்த பிறகு குழந்தை மற்றும் தாய் இறப்பு ஒரு தாக்கத்தை உருவாக்கும் எந்த ஆதாரமும் இல்லை.

10% -15%-க்கும் மேல் சிசேரியன் முறையில் பிரசவம் நடந்தால் அதனை அதிகமாக பயன்படுத்துதல் அல்லது தவறாக பயன்படுத்துகிறது என்று பொருள் என்று தி லான்சட் (The Lancet)அறிக்கை தெரிவிக்கிறது.

தேசியக் குடும்பநல ஆய்வறிக்கை (என்.எஃப்.ஹெச்.எஸ்) தகவலின்படி 2017-ல் அதிகப்பட்சமாக தெலுங்கானாவில் 58 சதவிதம் சிசேரியன் பிரசவம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஆந்திரவில் 40 சதவிதம் ஆகும். லட்சத்தீவில் 38 சதவிதம், கேரளாவில் 36 சதவிதம், தமிழகம், புதுச்சேரியில் 34 சதவிதம் ஆகும். தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இப்போது அரசு மருத்துவமனையிலும் சிசேரியன் சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

“சிசேரியன் முறையிலான பிரசவம் 50 சதவிதத்தை தாண்டுவதை ஏற்க முடியாது,” என்கிறார் மகளிர் மருத்துவ நிபுணர் அருண் காத்ரி.

தெற்கு ஆசியாவில் கடந்த 15 வருடங்களில் சிசேரியன் முறையிலான பிரசவம் 6.1 சதவிதம் அதிகரித்துள்ளது. இந்திய துணைக் கண்டத்தை பொறுத்தவரையில் வங்காளதேசம் (30.7%), இலங்கையைவிட (30.5%) இந்தியா குறைவான சதவிதத்தையே கொண்டுள்ளது. பாகிஸ்தான் (15.9%), நேபாளைவிட (9.6%) இந்தியாவில் அதிகமாக சிசேரியன் முறையில் பிரசவம் செய்யப்படுகிறது.

தனியார் மருத்துவமனையில் சிசேரியன் அதிகரிப்பு

தனியார் மருத்துவமனைகளுக்கு சிசேரியன் முறையிலான பிரசவம் பெரும் வரப்பிரசாதமாக சுகாதாரத்துறை ஆர்வலர்கள் பார்க்கிறார்கள். மகளிர் மருத்துவ நிபுணர் அருண் காத்ரி பேசுகையில், “அரசு மருத்துவமனைகளில் பராமரிப்பு குறையும் நிலையில், சிறந்த சேவைகளுக்காக தனியார் மருத்துவமனைகளை தேர்வு செய்வதில் மக்களிடையே அவா அதிகரித்துள்ளது. இதுதான் இந்திய சுகாதாரத்துறையின் அடிப்படையான நோயியல் ஆகும். ஒழுங்குபடுத்தப்படாத சிசேரியன் அதிகரிப்பு விவகாரத்தில் தனியார் துறை பொறுப்பை ஏற்க அழுத்தம் கொடுக்கும் வகையில் 14 ஆண்டுகளாக எதுவும் செய்யப்படவில்லை. தனியார் துறை சிசேரியன் பிரசவம் மூலம் லாபம் பெறுகிறது,” என்று கூறியுள்ளார் என indiaspend தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 45 சதவிதம் சிசேரியன் அறுவைச் சிகிச்சைகள் நகர்புற தனியார் மருத்துவமனைகளிலும், 38 சதவிதம் கிராமபுற தனியார் மருத்துவமனைகளிலும் நடக்கிறது. 2017-ல் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மக்களவையில் பேசுகையில், சிசேரியன் முறையிலான அறுவைப் பிரசவம் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் அதிகமாகவே உள்ளது என்று தெரிவித்தார். மத்திய அரசு சுகாதார திட்டத்தின் (சி.ஜி.ஜி.எஸ்) கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் 56 சதவிதம் சிசேரியன் முறையில் பிரசவங்கள் நடந்துள்ளது என்று மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். 31 நகரங்களில் 20-ல் இருந்து சேகரிக்கப்பட்ட தரவு (64.5%) அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அளவுக்கு மீறிய சிசேரியன் பிரசவங்கள் நடந்துள்ளது.

பணக்காரப் பெண்கள்

செல்வம் படைத்த பெண்களில் அதிகமானவர்கள் சிசேரியன் முறையை தேடுகின்றனர் என்று கூறப்படுகிறது. “உணவுமுறையில் மாற்றம், காலதாமதமாக கர்ப்பம் அடைதல் மற்றும் வலி தொடர்பான அச்சம் உள்ளிட்டவை சிசேரியன் முறையிலான அறுவைச் சிகிச்சை அதிகரிப்பு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். மும்பையை சேர்ந்த மருத்துவர் சுஜித்ரா பண்டிட் பேசுகையில், “குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தாய்மார்கள் நம்பமுடியாத எதிர்பார்ப்புகளுடன் அழுத்தம் கொடுக்கிறார்கள். வேலை செய்யும் பெண் ஒருவர் பேசுகையில் தனக்கு 5 மணிக்கு பிறக்க வேண்டும் என்கிறார்,” என்று கூறியுள்ளார். பிரசவத்தை தள்ளிப்போட்டால் பிரச்சனை நேரிடும் என எச்சரிக்கை விடுத்த போது அவருடைய உறவினர்கள் அவர்களுடைய விவரக்குறிப்புகளை எழுதி தயாராக இருந்தனர் என்கிறார்.

சிசேரியன் முறையை தேர்வு செய்யும் பெண்களின் எண்ணிக்கை 2014 வரையில் 20 ஆண்டுகளில் 10 சதவிதத்திலிருந்து 30 சதவிதமாக உயர்ந்துள்ளது IndiaSpend 2017-ல் தெரிவித்து இருந்தது.