2019 தேர்தல்: தமிழகத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? கருத்து கணிப்பில் தகவல்

Read Time:4 Minute, 46 Second

2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு 257 இடங்கள் கிடைக்கும் என இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல்-மேயில் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் வெற்றிப்பெற்ற காங்கிரஸ் புதிய உத்வேகத்துடன் உள்ளது. எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைக்க முயற்சி செய்கிறது. பா.ஜனதாவும் ஆட்சியை தக்கவைக்க அதிரடி காட்டுகிறது. இதற்கிடையே கருத்துக்கணிப்பு தகவல்களும் வெளியாகி வருகிறது. 2014 தேர்தலில் 282 தொகுதிகளில் வெற்றிப்பெற்று பா.ஜனதா முழு பலத்துடன் ஆட்சிக்கு வந்தது.

இந்தியா டிவி – சிஎன்எக்ஸ் சார்பில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற கருத்து கணிப்பில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 281 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கூட்டணிக்கு 124 இடங்களும் பிற கட்சிகளுக்கு 138 இடங்களும் கிடைக்கும் என தெரியவந்தது. 5 மாநிலத் தேர்தலுக்கு பின்னர் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜனதாவிற்கு பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது தேர்தல் நடந்தால் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணிக்கு 257 இடங்கள் மட்டுமே கிடைக்கும். இது பெரும்பான்மை பலத்துக்கு தேவையான 272 இடங்களை விட 15 இடங்கள் குறைவு ஆகும். இதுபோல காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கு (யுபிஏ) 146 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், அதிமுக, திரிணமூல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகளுக்கு 140 இடங்கள் கிடைக்கும். இதில் சில கட்சிகளின் ஆதரவுடன்தான் மத்தியில் புதிய ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. பா. ஜனதா தலைமையிலான கூட்டணியில், பா.ஜனதா (223), சிவசேனா (8), ஐக்கிய ஜனதா தளம் (11), அகாலி தளம் (5), பாஸ்வானின் எல்ஜேபி (3), மிசோ தேசிய முன்னணி (1), அப்னா தளம் (1), சிக்கிம் ஜனநாயக முன்னணி (1), மேகாலயாவின் என்பிபி (1), புதுச்சேரியின் என்ஆர் காங்கிரஸ் (1), பாமக (1), நாகாலாந்தின் என்டிபிபி (1) ஆகிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது. மொத்தம் 257 தொகுதிகளில் வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஏ கூட்டணியில், காங்கிரஸ் (85), திமுக (21), ராஷ்ட்ரிய ஜனதா தளம் (10), தேசியவாத காங்கிரஸ் (9), மதச்சார்பற்ற ஜனதா தளம் (4), தெலுங்கு தேசம் (4), ராஷ்ட்ரிய லோக் தளம் (2), தேசிய மாநாடு (2), ஆர்எஸ்பி (1), ஜேஎம்எம் (4), ஐயுஎம்எல் (2), கேரள காங்கிரஸ் (எம்) (1) மற்றும் ஆர்எல்எஸ்பி (1) ஆகிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது. 146 இடங்களில் வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுகவிற்கே அதிகமான தொகுதிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் (26), சமாஜ்வாடி (20), பகுஜன் சமாஜ் (15), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (19), டிஆர்எஸ் (16), பிஜு ஜனதா தளம் (13), அதிமுக (10), அமமுக (4), இடதுசாரி முன்னணி (8), ஆம் ஆத்மி (2), ஏஐயுடிஎப் (2), பிடிபி (1), ஜேவிஎம்-பி (1) மற்றும் ஏஐஎம்ஐஎம் (1) ஆகிய பிற கட்சிகள் 140 இடங்களில் வெற்றி பெறும். இதுபோன்று பா.ஜனதா கூட்டணிக்கு 37.15 சதவீதம், காங்கிரஸ் கூட்டணிக்கு 29.9 சதவீதம், மற்ற கட்சிகளுக்கு 32.93 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.