பிளாஸ்டிக் தடையால் பனை ஓலைக்கு மசுவு… திரும்பும் பாரம்பரியம்!

Read Time:9 Minute, 34 Second

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் ஓலைப் பெட்டியில் வைக்கப்படும் உணவுப் பொருளும் தனி மணத்தை கொண்டிருக்கும். பிளாஸ்டிக் தடையால் பனை ஓலை, பாக்கு மட்டை, மஞ்சள் பை உள்ளிட்ட இயற்கைக்கு உகந்த பொருட்கள் மக்கள் மத்தியில் மீண்டும் நடமாட தொடங்கியது நம்முடைய பாரம்பரியத்தை திரும்பச் செய்துள்ளது.

உலகிலுள்ள மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழியின் எழுத்துகள் முதன் முதலில் பதியப்பட்டது பனை ஓலையில்தான். பனைமரம் தான் தமிழரின் அடையாளமாகும். தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமை கொண்டதும் பனைமரம்தான்!. பல சங்க இலக்கிய நூல்கள் கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடியால்தான். பனைமரம் என்ற ஒன்று இல்லாத நிலையை கற்பனை செய்தால் ஒருவேளை சங்கத்தமிழ் நூல்களும் பல வரலாற்றுக் குறிப்புகளும் நமக்கு கிடைக்காமலேகூட போயிருக்கலாம் என்ற அதிர்ச்சி கிடைக்கிறது. கடும் புயலைக்கூட தாங்கி நிற்ககூடிய வீடுகளை நம்முன்னோர் பனை ஓலையால்தான் முடைந்தனர்.

அழிவுப்பாதையின் விளிம்பில் பனைமரம்! பனைத்தொழில்!!

தமிழர்களின் வாழ்வில் உயிராக கலந்திருந்த பனைமரம் அழிவை நோக்கிய விரைவான பயணம் மெல்ல தடைப்படும் வகையில் மகிழ்ச்சியான நகர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இயற்கை சீற்றம், செயற்கையினால் ஏற்படும் விஷத்திற்கு மத்தியில் பனைமரத்தின் நலன் அறிந்து மீண்டும் உயிர்பெறத் தொடங்கியுள்ளது.

முந்தைய காலங்களில் வீடு கட்டுவதில் பனைமரம் முக்கிய பங்கு வகித்தாலும், இன்றைய நிலை முற்றிலும் மாறுபட்டது. மரங்கள் செங்கல் சூழைகளுக்குதான் அனுப்பப்படும் நிலைதான் உள்ளது. இருப்பினும் அதிலிருந்து கிடைக்கும் நுங்கு, கிழங்கு, பதநீர், கருப்பட்டியினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் தொடர்பான விழிப்புணர்வு மரம் வளர்ப்பு தொடர்பான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. மனிதனின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், உடல் உறுப்புகளை வலிமையாக்கும் மருந்தாகவும் இருக்கும் பனை மரங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இப்போது மேலும் ஒரு நேர்மறையான நகர்வு பிளாஸ்டிக் தடை நடவடிக்கையால் பனைத்தொழிலுக்கு கிடைத்துள்ளது.

பனை ஓலைக்கு மசுவு

90-களில் பனை ஓலைகள் கூரை வேயவும், பெட்டி, கூடை, விசிறி, பாய், முறம் மற்றும் பூச்சாடி போன்ற கைவினை பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. விவசாயம், வீட்டுத்தேவைக்குயென்று விதவிதமான அளவில் பெட்டிகள் முனைப்படும். திருமணம், கோவில் விழாக்காலங்களில் பனை ஓலை பெட்டிகள் முக்கிய இடம் பிடிக்கும். திருச்செந்தூர் கோவிலில் கோவில் பூஜைக்கான பொருட்கள் ஓலை பெட்டியிலே வழங்கப்படும். பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப் பொருட்கள், உடலுக்கு ஆராக்கியம் தருவதாகவும், அதேநேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் இருக்கும்.

கடைகளில் மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்கள் பனை ஓலைப்பெட்டிகளிலேயே வைத்து கொடுப்பார்கள். இதனால் பனை ஓலைப் பெட்டிகள் இல்லாத மிட்டாய் கடைகளையே பார்க்க முடியாது. வீடுகளிலும் பொருட்கள் வைப்பதற்கு பெட்டிகளே அதிகமாக பயன்படுத்தப்பட்டது. மக்கள் அதிகளவில் பயன்படுத்தியதால் பனை ஓலைப்பெட்டிகளின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் பனை ஓலை பொருட்கள் தொழில் மிகவும் நன்றாக இருந்தது. காலப்போக்கில் பிளாஸ்டிக் பைகள், அட்டை பெட்டிகள் வரத்தால் பெட்டிகளுக்கான தேவையும் குறையத் தொடங்கிவிட்டது. இதுதொடர்பான தொழிலும் முடங்கியது. சில கடைகளில் மட்டுமே பார்க்க முடிந்தது.

இப்போது தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளதால், இயற்கையான பொருட்களுக்கு மக்கள் நகரத் தொடங்கியுள்ளனர். இதனால் இயற்கையும் பயனடையும், உடல்நலமும் பாதுகாக்கப்படும். பிளாஸ்டிக் தடையினால் பனை ஓலையினால் செய்யப்பட்ட பெட்டிகள், பாக்கு மட்டையால் செய்யப்படும் தட்டுகள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கான மஞ்சள் பைகளுக்கு மீண்டும் மசுவு ஏற்பட்டு பாரம்பரியத்தை கையில் கொண்டுவந்துள்ளது.

தென் மாவட்டங்களில் கடைகளுக்கு பனை ஓலை பெட்டிகள் விற்பனைக்கு வந்துள்ளது. கடைகளில் இனிப்பு, காரம் போன்ற பண்டங்களை பனை ஓலைப் பெட்டியில் பொதிந்து விற்பனை செய்ய உரிமையாளர்கள் தொடங்கிவிட்டார்கள். பொதுமக்களும், கடை உரிமையாளர்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க தொடங்கிவிட்டனர். திருநெல்வேலியில் அல்வாவின் நெய் ஒழுகாமல் இருக்க அதனை, பட்டர் பேப்பரில் பொதிந்து, பனை ஓலைப் பெட்டியினுள் வைத்து விற்பனை செய்யும் பழக்கம் தொடங்கியுள்ளது.

திருநெல்வேலி டவுன் கீழரத வீதியில் உள்ள ஹாரிகா அல்வா கடையில், அல்வாவின் நெய் ஒழுகாமல் இருக்க அதனை, பட்டர் பேப்பரில் பொதிந்து, பனை ஓலைப் பெட்டியினுள் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இக்கடை உரிமையாளர் ஹாரிகா கண்ணன் தி இந்து தமிழ் திசைக்கு அளித்துள்ள பேட்டியில், தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன் விளையில் குடிசை தொழிலாக பல வீடுகளில் பனை ஓலை பெட்டிகளை முடைகிறார்கள். அங்கிருந்து அவற்றை வாங்கி வந்துள்ளேன். பனை ஓலை பெட்டியில் வைத்து அல்வாவை விற்பனை செய்வதால் விலையை உயர்த்தவில்லை என்று கூறியுள்ளார். இதேபோன்று பிற கடைகளிலும் பெட்டிகள் பயன்பாடு தொடங்கியுள்ளது. இறைச்சி கடைகளிலும் பனை ஓலையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பனை ஓலையினால் செய்யப்பட்ட பெட்டிகள், பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் உணவுப் பொருளும் தனி மணத்தை கொண்டிருக்கும்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 மற்றும் விதிகள் ஒழுங்குமுறைகள் 2011–ன்படி உணவகங்களில் பிளாஸ்டிக் பேப்பர்கள் கொண்டு உணவு பரிமாறுவது, சூடான உணவுப்பொருட்களை பார்சல் செய்து கொடுப்பது குற்றமாகும். பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப்பொருட்களை அடைத்து விற்பனை செய்யும்போது பிளாஸ்டிக் பேப்பர்களில் உணவு பரிமாறும் போது ரசாயன நச்சுப்பொருள் உருவாகி உணவுப்பொருளோடு கலந்து சிறுநீரகத்தை பாதிப்படைய செய்து புற்றுநோய் ஏற்பட காரணமாகிறது. இப்போது இந்த அச்சத்திற்கான முடிவு தொடங்கியுள்ளது. இயற்கையை பாதுகாக்கவும் வழிவகைச் செய்யும். பனை ஓலையினால் செய்யப்பட்ட பெட்டிகளை பயன்படுத்துவதை மக்கள் தொடங்க வேண்டும்.

“பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல” பிளாஸ்டிக் தடைக்கு ஒத்துழைப்போம்…

பிளாஸ்டிக் தடையால் மஞ்சள் பைகள், பாக்கு மட்டை தட்டுக்கள் தயாரிப்பு அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழலுக்குப் பேராபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முடிவுகட்டும் வகையில் தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை வரவேற்புக்குரியது. 2002-ம் ஆண்டே பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். ஆனால் அடுத்த ஆண்டே சட்டம் திரும்ப பெறப்பட்டது பின்னடைவைத் தந்தது. இப்போது அரசு கொண்டுவந்துள்ள நடவடிக்கையை பேச்சளவில் மட்டும் அல்லாமல், முழுமையாக இந்தத் தடை அமல்படுத்தப்படுவதற்கு அனைத்துத் தரப்புகளின் ஒத்துழைப்பு அவசியமாகும். ஆதரவு அளிப்போம், இயற்கை காப்போம்…