ஆண்டாள் திருப்பாவை – 23, எங்கள் குறைகளைக் கேட்டு அருள் புரிவாயாக!

Read Time:4 Minute, 38 Second

ஒருவழியாக கிருஷ்ணனும் எழுந்திருக்கிறான். நப்பின்னையின் மனமும் ஆண்டாளிடமும் அவளுடைய தோழிகளிடமும் இரக்கம் கொண்டது. அவளும் கிருஷ்ணனை அழைத்துச் செல்ல சம்மதம் தெரிவித்துவிட்டாள். கிருஷ்ணன் துயிலெழுந்து வெளியே வருவதை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் ஆயர் சிறுமிகள், கிருஷ்ணன் வெளியே வரும் காட்சியினை தங்களுக்குள்ளே விவரித்துக்கொள்ளும் பாடல். வீரம் மிகுந்த ஆண் சிங்கம் எழுந்துவரும் காட்சியை ஒத்து இருப்பதாக பாடுகிறார் ஆண்டாள் பிராட்டியார்.

கிருஷ்ணன் சீக்கிரம் வந்து அவனுக்கு உரிய ஆசனத்தில் அமர்ந்து தங்களுடைய குறைகளைக் கேட்கவேண்டும் என்று சொல்கிறாள். கிருஷ்ணன் நடையழகை தரிசித்து மகிழ ஆஸ்தான மண்டபத்துக்கு எழுந்தருளச் சொல்கிறாள் ஆண்டாள் பிராட்டியார். அப்படி கிருஷ்ணன் நடந்து வரும்போதுதானே அவனுடைய திருவடிகளின் திவ்விய தரிசனத்தை ஆண்டாளும் தோழியரும் பெற முடியும். ஆண்டாள் கிருஷ்ணனுடைய நடையழகைக் காண விரும்புவதாகச் சொன்னவுடனே கிருஷ்ணன் எழுந்து வந்துவிடுவானா என்ன? ஆண்டாளின் தேன்தமிழ்ப் பாசுரங்களைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருந்ததுபோலும். எனவே அவன் உடனே எழுந்து நடந்து வரவில்லை. ஆண்டாளும் விடுவதாக இல்லை…..

திருப்பாவை – 23

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

குறிப்பு

மாரி – மழை
முழைஞ்சில் – குகையில்
மன்னி – ஒட்டி கொண்டு
சீரிய – சீர்மை, சிறப்பு, பெருமை
அறிவுற்று – உணர்ந்து எழுந்து
தீவிழித்து – நெருப்புப்பொறி பறக்கும்படி கண்களை விழித்து
வேரி மயிர் – உளை மயிர், பிடரி மயிர்
எப்பாடும் – எல்லா பக்கமும்
பேர்ந்துதறி – பெயர்ந்து உதறி (பேர்ந்து(பெயர்ந்து) +உதறி)
மூரி நிமிர்ந்து – சோம்பல் முறித்து
போதருமா – வருவது (போதரும்(வெளியில் வந்து) +ஆ)
பூவைப் பூவண்ணா – காயம் பூ நிறத்தையுடைய கண்ணா
போந்தருளி – எழுந்தருளி
கோப்புடைய – உறுதியான சட்டங்கள் கட்டி உள்ள
சீரிய – சிறப்பான
சிங்கா சனத்திருந்து – அரியாசனத்தில் இருந்து (சிங்காசனம்-அரியாசனம்)
யாம் – நாங்கள்
அருளேலோர் – உணர்ந்து அருள வேண்டும் (அருள்+ஏல்(ஏற்றுக் கொள்)+ஓர்(ஆராய்ந்து அறிந்து கொள்))

பொருள்:-

மழைக் காலத்தில், குகையின் உள்ளே தனது துணையான பெண் சிங்கத்துடன் சேர்ந்து உறங்கிய, வீரம் மிகுந்த ஆண் சிங்கம், உறக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வரும்போது, கனல் போன்ற தனது கண்களிலிருந்து தீப்பொறி பறக்குமாறு விழித்து, பிடரி மயிர் சிலிர்க்க, நான்கு புறங்களிலும் திரும்பி திரும்பி பார்த்தவாறு சோம்பல் முறித்து, தனது உடலினை நீட்டி, கர்ஜனை செய்தவாறு புறப்படும்போது, காட்டில் உள்ள மற்ற விலங்குகள் அச்சம் கொள்ளும்.

அதே போன்று காயாம்பூ நிறத்தினை உடைய கண்ணபிரானே நீ, உறக்கத்திலிருந்து விழித்து, கம்பீரமாக நடந்து உனது மாளிகையிலிருந்து வெளியே வருவாயாக, பின்னர் உனக்காக அமைக்கப்பட்டுள்ள சீரிய சிங்காதனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக உன்னைக் காண வந்தோம் என்பதை கேட்டறிந்து எங்களது தகுதியினை ஆராய்ந்து எங்களுக்கு அருள் புரிவாயாக என்கிறாள்.