திருவாரூர் இடைத்தேர்தல் எதிர்ப்பும்-ரத்தும்; 10 முக்கியக் குறிப்புகள்!

Read Time:4 Minute, 26 Second

1) திருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத் தேர்தல் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

2) நவம்பர் மாதம் கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட திருவாரூரில் இடைத்தேர்தல் அறிவிப்பு நிவாரணப் பணிகளை பாதிக்கும் என்று பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

3) திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மறைந்த அதிமுக எம்எல்ஏ ஏகே போஸ் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக உள்ளது. இதேபோன்று 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளும் காலியாக உள்ளது. 19 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுவது ஏன்? என்ற கேள்வி எழுப்பட்டது.

4) இடைத்தேர்தல் நடைபெற்றால் மாவட்ட நிர்வாகத்தின் மொத்த கவனமும் தேர்தல் மீதுதான் இருக்கும், இதனால் நிவாரணப் பணிகள் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று விமர்சனம் செய்யப்பட்டது.

5) டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் ஆரோராவை நேரில் சந்தித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரில் இன்னும் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும், எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

6) இடைத்தேர்தல் அறிவிப்பை அடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரசாரத்தில் தீவிரம் காட்ட தொடங்கின.

7) டி.ராஜா, மனுவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு அனுப்பிவைத்த தேர்தல் கமிஷன், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்து சனிக்கிழமை (5-ம் தேதி) மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

8) இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தனது அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்டி அவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த கருத்துகளை தலைமை தேர்தல் கமிஷனரின் கவனத்திற்கு மாவட்ட நிர்வாகம் கொண்டு சென்றது.

9) இதனையடுத்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையமும் மாவட்ட அதிகாரிகளும் இடைத்தேர்தல் தொடர்பாக எடுத்த அனைத்துப் பணிகளை நிறுத்துமாறும் தமிழகத் தேர்தல் அதிகாரிக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தேர்தல் ஆணையம் உத்தரவு

10) திருவாரூர் தவிர மற்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் வரை இடைத்தேர்தல் வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டது. கஜா புயல் நிவாரணப்பணிகளை சுட்டிக்காட்டி தமிழக அரசு தரப்பில் டிசம்பர் 3-ம் தேதி கடிதம் எழுதப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.