2019 தேர்தல்: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 % இடஒதுக்கீடு

Read Time:5 Minute, 59 Second

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 % இடஒதுக்கீடு 2019 தேர்தலில் பா.ஜனதாவிற்கு துருப்பு சீட்டாக அமையும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்தியாவில் இட ஒதுக்கீடானது அரசியலமைப்பு சட்டம் 15, 16 பிரிவுகளில் வருகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித் மற்றும் பழங்குடியினருக்கு என சுமார் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவது கிடையாது.

இப்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவை சேர்ந்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் என்பதை அடையாளம் காண; ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும். 1000 சதுர அடிக்கு குறைவாக வீட்டு மனை இருக்க வேண்டும். நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் 109 கஜத்திற்கு குறைவாக இருக்க வீட்டுமனை வேண்டும். நகராட்சி அல்லாத பகுதியில் 209 கஜத்திற்கு குறைவான வீட்டுமனை இருக்க வேண்டும் என நிபந்தனை வகுக்கப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடை அமல்படுத்த அரசியலமைப்பு சட்டம் 15, 16 பிரிவில் சட்டத்திருத்தம் கொண்டு வருவது அவசியமாகும். இதற்கான மசோதாவை தயார் செய்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். இதற்கான சட்டதிருத்த மசோதா பா.ஜனதா பெரும்பான்மையாக உள்ள மக்களவையில் நிறைவேற்றப்படலாம். ஆனால் மாநிலங்களவையில் பா.ஜனதாவிற்கு பெரும்பான்மை கிடையாததால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால் நிறைவேறாமல் போக வாய்ப்புள்ளது. செவ்வாய் அன்று மாற்றம் கொண்டு வருவது தொடர்பான மசோதாவை அரசு கொண்டு வரலாம் என தெரிகிறது. 2019 பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்காரில் மாநிலங்களில் ஆட்சியை இழந்தது. அக்கட்சியின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது பா.ஜனதா 2019 தேர்தலை தைரியமாக எதிர்க்கொள்ள துருப்புச் சீட்டாக அமையும் என பார்க்கப்படுகிறது. காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் உயர் வகுப்பினர் வாக்குகளை பகிர்ந்துக்கொண்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் வலியுறுத்தியிருந்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபகாலமாக கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார், காங்கிரஸ் மித இந்துத்துவாவையும் கையில் எடுக்கிறது. இதனை எதிர்க்கொள்ள அரசின் இப்போதைய இடஒதுக்கீடு பயனளிக்கும் என பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைப்பது பா.ஜனதாவிற்கு எதிர்மறையான விஷயமாக அமையும். இப்போது இடஒதுக்கீடு மற்றும் பிரதமர் மோடியின் பின்பத்தை வைத்து பா.ஜனதா தைரியமாக தேர்தலை எதிர்க்கொள்ளும். இப்போதை இட ஒதுக்கீடு அறிவிப்பு பயனாளர்கள் அடிப்படையில் வாக்காளர்கள் மத்தியில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கணிப்பது யூகத்தின் அடிப்படையானதாகும். அரசின் இந்நகர்வு எதிர்க்கட்சிகளுக்கு பெரிய அடியாகத்தான் இருக்கும் என பார்க்கப்படுகிறது.

4 வருடங்கள், 8 மாதங்கள் ஆட்சி செய்த போது இதுபற்றி ஏன் நினைக்கவில்லை? தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், இது வித்தை காட்டும் நடவடிக்கையாகும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி விமர்சனம் செய்துள்ளார். அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதா? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தலின் பெயரில் மக்களை அரசு ஏமாற்ற முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார் மம்தா பானர்ஜி. எதிர்க்கட்சிகள் தரப்பில் தொடர்ந்து விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.