ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Read Time:5 Minute, 29 Second

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அப்பகுதியை சேர்ந்த மக்கள் 22 வருடங்களாக போராடிய நிலையில் ஆலையை விரிவுபடுத்தும் பணி நடைபெற்றது. ஸ்டெர்லைட் நிர்வாகம் தமிழ்நாடு சிப்காட் நிறுவனம் மூலம் 640 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது. இதனையடுத்து கடும் போராட்டம் வெடித்தது. 2018 மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து கடும் எதிர்ப்பு காரணமாக ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பிறப்பித்த உத்தரவுகளை ரத்துசெய்தும், ஆலையை திறக்க அனுமதி வழங்கியும் கடந்த 15–ந்தேதி தீர்ப்பு கூறியது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்து பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்துசெய்ய வேண்டும், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை கடந்த 19–ந்தேதி விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, “பசுமைத் தீர்ப்பாய உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறதா? இல்லையா? என்பதை வருகிற ஜனவரி 21–ந்தேதி இந்த கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். அதுவரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்’’ என்றது.
மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் பசுமைத் தீர்ப்பாய உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்தது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த ஆணை ரத்து செய்து பசுமைத் தீர்ப்பாயம் விடுத்த உத்தரவிற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள வழக்கில் ஸ்டெர்லைட் தன்னுடைய பதிலை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்புக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவில் கூறப்பட்ட விதிமுறைகளை ஸ்டெர்லைட் ஆலை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வைகோ அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஆணையிடவில்லை என மதிமுக தெரிவித்துள்ளது. இதுதொடர்பக மதிமுக சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கு, இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரோகிங்டன் நரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வைகோ நேற்று மேல் முறையீடு செய்திருந்தார். வழக்கு எண் 913/2019. அதையும் சேர்த்து இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டார். ‘உங்களுக்காக யார் வாதாடுகிறார்?’ என்று நீதிபதி நரிமன் கேட்டார். ‘நானேதான் வாதாடுகிறேன்’ என்று வைகோ கூறினார்.

எனவே, முதன்மை வழக்கோடு வைகோவின் மேல் முறையீட்டையும் சேர்த்து விசாரிக்க நீதிபதி ஆணை பிறப்பித்தார். ஆலையை உடனே திறக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் கேட்டார். அப்படி ஒரு உத்தரவை நாங்கள் பிறப்பிக்க முடியாது. ஆலையைத் திறக்கக்கூடாது என்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்புக்குத் தடை விதிக்கின்றோம். பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு குறித்த வழக்கில் விசாரணை நடக்கும். ஸ்டெர்லைட் தரப்பு தங்கள் வாதங்களை முன்வைக்கலாம். அரசுத் தரப்பும், மற்றத் தரப்பினரும் முன்வைக்கலாம் என்று கூறி, இந்த வழக்கு தொடர்பான அனைத்துத் தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

ஆலையைத் திறக்க வேண்டும் என உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.