ஆண்டாள் திருப்பாவை – 25, எங்கள் துயர் நீக்கு கண்ணா!

Read Time:3 Minute, 48 Second

ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டபடி, ஒருவழியாக சமாதானம் ஆகி, ஆஸ்தான மண்டபத்துக்கு வந்து சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டான் கிருஷ்ணன். கிருஷ்ணனுக்கு சேவை செய்வதையே பெரிதாக நினைத்து வந்திருப்பதாகவும், அவர்கள் விரும்புவது எது என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும் என்பதால், அதைத் தட்டாமல் தரும்படிக் கேட்டாள். கேட்டதும் கொடுப்பவன் என்று போற்றப்படும் கிருஷ்ணன், ஆண்டாள் கேட்டதை உடனே கொடுத்துவிடவில்லை. ஆண்டாள் தொடர்ந்து, கிருஷ்ணன் யார், அவன் எப்படிப்பட்டவன் என்பதெல்லாம் தங்களுக்குத் தெரியும் என்று பாடுகிறாள்.

கிருஷ்ணனுக்கு முந்தைய அவதாரமான ராமாவதாரத்தில் ராமபிரான் கோசலைக்கு மகனாகப் பிறந்தாலும், அவன் வளர்ந்தது என்னவோ கைகேயியின் பிள்ளையாகத்தான். கிருஷ்ணனுக்கும் ஒருத்தி மகனாய் பிறந்து மற்றொருத்திக்குப் பிள்ளையாக வளரும் ஆசை ஏற்பட்டுவிட்டது போலும். அதைத்தான் ஆண்டாள் மறைமுகமாகக் குறிப்பிடுகிறாள் இப்பாடலில்.

திருப்பாவை – 25

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

குறிப்பு

தரிக்கிலனாகி – தாங்க முடியாதவனாகி (தரிக்கிலான்(தாங்க முடியாதவன்)+ஆகி)
நினைந்த – நினைத்த
பிழைப்பித்த – வீணாக்கி, பிழை எனக் காட்டி
கஞ்சன் – கம்சன்
அருத்தித்து – விரும்பி
பறைதருதியாகில் – அருள் தருவாய் ஆனால் (பறை(அருள்)+தருதி(தருவாய்)+ஆகில்(ஆனால்))
திருத்தக்க – செல்வத்துக்கே செல்வம், நீங்காத செல்வம் (திரு(செல்வம்)+தக்க)
சேவகமும் – வீரமும்
யாம் – நான்
தீர்ந்து – நீக்கி
மகிழ்ந்தேலோர்-மகிழ ஏற்றுக்கொள்

பொருள்:-

தேவகி பிராட்டிக்கு மகனாகப் பிறந்த அதே இரவினில் மதுரையிலிருந்து ஆய்ப்பாடி நந்தகோபன் திருமாளிகை வந்தடைந்து, யசோதை பிராட்டியின் மகனாக நீ ஒளிந்து வளர்ந்ததை அறிந்த கம்சன், எவ்வாறேனும் உன்னைத் தொலைத்துவிட வேண்டும் என்று பல விதமான தீங்குகள் செய்த போதும், அவனது சூழ்சிகளை முறியடித்து அவனது வயிற்றினில் நெருப்பு நின்றது போன்று அவனை வருத்திய நாராயணனே, நாங்கள் உன் மீது கொண்ட விருப்பினால் உனது அருள் வேண்டி இங்கே வந்தோம்; நீ எங்களுக்கு பறை இசைக் கருவியும் தந்து உனது அருளினையும் எங்களுக்குத் தருவாயாகில் நாங்கள் உனது செல்வத்தையும் வீரத்தையும் புகழ்ந்து பாடுவோம்.

உன்னைப் பிரிந்திருந்த எங்களது வருத்தமும், உன்னைக் கண்டதால் மறைந்தது; எனவே நாங்கள் வருத்தம் ஏதுமின்றி மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றோம் என்கிறாள்.