காஃபி வித் கரண் ஷோவில் சர்ச்சை பேச்சு; பாண்டியா, ராகுலுக்கு பிசிசிஐ நோட்டீஸ்

Read Time:3 Minute, 3 Second

காஃபி வித் கரண் ஷோவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாண்டியா, ராகுலுக்கு பிசிசிஐ நோட்டீஸ் விடுத்தது.

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியை பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வருகிறார். சினிமா நட்சத்திரங்கள் கலந்துக்கொள்ளும் இந்நிகழ்ச்சியில் முதன்முறையாக கிரிக்கெட் வீரர்கள் கலந்துக்கொண்டார். இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். ஷோவில், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என கேள்விக்கு, இருவரும் சிறிதும் தயங்காமல் இருவரும் விராட் கோலியின் பெயரைக் குறிப்பிட்டனர்.

பெண்களின் வாழ்க்கை தொடர்பான கேள்விக்கு சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்தனர். கருப்பு ஆளுங்களான எங்களுக்கு பெண்களைப் பார்த்தால் ஒரு ஈர்ப்பு வரத் தான் செய்யும் என்று பாண்டியா பேசி அதுதொடர்பாக பெரும் விளக்கத்தை கொடுத்தது சர்ச்சை ஏற்படுத்தியது. பாலியல் தொடர்பாக இருவரும் சில விஷயங்களை ஓப்பனாக பேச இப்போது நடவடிக்கை வரையில் சென்றுள்ளது. இருவரும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகினர். இவ்விவகாரம் பிசிசிஐ வரை செய்துள்ளது.

கண்டங்கள் எழுந்ததையடுத்து ‘நிகழ்ச்சியில் மூழ்கிய நிலையில் அப்படி கூறிவிட்டேன், உண்மையில் எனக்கு யாரையும் புண்படுத்த வேண்டும், நோகடிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை” என்று கூறி மன்னிப்பு கேட்டிருந்தார் பாண்டியா. ராகுல் தரப்பிலிருந்து பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஷோவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாண்டியா, ராகுலுக்கு பிசிசிஐ நோட்டீஸ் விடுத்துள்ளது.

உச்ச நீதிமன்ற நியமன கிரிக்கெட் கமிட்டி தலைவர் விநோத் ராய் , 24 மணிநேரத்துக்குள் பாண்டியா, ராகுல் இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கிடையே இனி கிரிக்கெட் அல்லாத நிகழ்ச்சிகளில் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பதைத் தடை செய்ய பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல்களும் வெளியாகியுள்ளது