மத்திய அரசு நீக்கிய அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநராக மீண்டும் நியமித்து உச்ச நீதிமன்றம்

Read Time:6 Minute, 54 Second

சிபிஐ இயக்குநராக அலோக் வர்மாவை மீண்டும் நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரியில் சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா பொறுப்பேற்றபோது, இரண்டாம் இடத்தில் சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார். கடந்த 1984-ம் ஆண்டு குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தவர். பல்வேறு வழக்குகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

நிதி மோசடி தொடர்பாக இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷிக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்குகளை நீர்த்துப் போகச் செய்ய ராகேஷ் அஸ்தானாவுக்கு ரூ.3 கோடியை மொயின் குரேஷி வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதில் திடீர் திருப்பமாக, சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மற்றும் டிஎஸ்பி தேவேந்திர குமார் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா இடையிலான பனிப்போரில் ஒருவருக்கு எதிராக ஒருவர் ஊழல் புகாரை சுமத்தினர். அலோக் வர்மா லஞ்சம் வாங்கியதாக கேபினட் செயலாளர், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு ராகேஷ் அஸ்தானா புகார் கடிதங்களை அனுப்பினார்.
இதனையடுத்து இருவரையும் மத்திய அரசு கடந்த அக்டோபர் 23-ம் தேதி இரவு கட்டாய விடுமுறையில் அனுப்பியது.

அலோக் குமார் வர்மா, கட்டாய விடுமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். சிபிஐ அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்து, ஒரே இரவில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமும், மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொண்டது சட்டவிரோதம், இதுபோன்ற தலையீடுகள், சிபிஐ-யின் சுதந்திரத்தையும் தன்னாட்சியையும் சீர்குலைத்துவிடும் என்று கூறினார்.

மத்திய அரசின் நடவடிக்கையை ரத்து

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

டெல்லி சிறப்பு காவல் அமைப்புச் சட்டத்தின் 4 பி (2)ஆவது பிரிவின்படி சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் உயர்நிலைக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ இயக்குநரை பணியிலிருந்து மாற்ற முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நிலைக் குழு ஒரு வாரத்துக்குள் கூடி பரிசீலிக்க வேண்டும். அதுவரை, அன்றாட வழக்கமான பணிகளை மட்டுமே அலோக் குமார் மேற்கொள்ள வேண்டும். கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இனி, அலோக் வர்மாவுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் சி.பி.ஐ. இயக்குனரை தேர்வு செய்து நியமிக்கும் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுதான் எடுக்கவேண்டும். மத்திய ஊழல் கண்காணிப்பு கமி‌ஷன் நடத்தும் விசாரணையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படவேண்டும். தேர்வுக் குழுவின் கூட்டத்தை ஒரு வாரத்துக்குள் கூட்டவேண்டும். சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவின் நியமனமும் ரத்து செய்யப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான சிபிஐ-யின் இயக்குநர், நேர்மைக்கும், சுதந்திரத்துக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்; அவருக்கு எவ்வித கட்டுப்பாடுகளோ, குறுக்கீடுகளோ இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுரையும் வழங்கியது. சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவின் பதவி காலம் வருகிற 31–ந்தேதி முடிவடைகிறது.

மத்திய அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்திய மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, ‘மத்திய ஊழல் கண்காணிப்பு கமி‌ஷன் பரிந்துரையின் பேரில்தான் சி.பி.ஐ.யின் மூத்த அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர்’ என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கான பாடம் என்று கருத்து தெரிவித்துள்ளன. ‘‘பிரதமர் பிறப்பித்த சட்டவிரோத உத்தரவு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பில் இருந்து நீங்கள்(மோடி) பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். இது உங்களுக்கு கிடைத்த பலத்த அடி’’ என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள சிபிஐ தலைவர் முற்பட்டதால் இரவு ஒரு மணியளவில் அவர் நீக்கப்பட்டார். சிபிஐ தலைவர் அவருடைய அதிகாரத்திற்கு மீண்டும் வந்துள்ளது எங்களுக்கு சற்று நிவாரணமாகும். இனி என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். அவர்கள் ரபேல் விவகார விசாரணையில் இருந்து தப்ப முடியாது. தப்புவது சாத்தியமற்றது.

விசாரணையிலிருந்து பிரதமர் மோடி தப்ப முடியாது. மக்கள் மன்றத்தில் பிரதமர் மோடி எங்களுடன் ரபேல் விவகாரம் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும். அவர்களை ரபேல் விவகாரத்தில் யாரும் காப்பாற்ற முடியாது. உண்மையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது,” என கூறியுள்ளார்.