புதியதாக உருவாகிறது கள்ளக்குறிச்சி மாவட்டம்; 10 குறிப்புக்கள்

Read Time:3 Minute, 44 Second

தமிழகத்தின் பெரிய மாவட்டமான விழுப்புரத்தை இரண்டாக பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுகுறித்த 10 குறிப்புகளை பார்க்கலாம்.

1) விழுப்புரம் பெரிய மாவட்டமாக உள்ளதால், அதனை பிரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

2) 1993-ல் தென்ஆற்காடு மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் புதிதாக உதயமானது. முதலில் ராமசாமி படையாச்சியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டு பின்னர் விழுப்புரம் மாவட்டமாக பெயர் மாற்றப்பட்டது. மாவட்டத்தில் 13 தாலுகாக்கள் உள்ளன. 11 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிகளை கொண்டிருந்தது.

3) சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் மாவட்டம், பெரிய மாவட்டமாக இருப்பதால், நிர்வாக வசதிக்காக அந்த மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும். புதிதாக தோற்றுவிக்கப்படும் இந்த மாவட்டத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் விரைவில் தனி அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்றார்.

4) புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் அமைக்கப்படுவதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆக உயருகிறது.

5) விழுப்புரம் மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

6) சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோயிலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன.

7) கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோயிலூர் ஆகிய கோட்டங்கள் முழுமையாக புதிய மாவட்டத்துக்குள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8) புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்ட தகவலறிந்த கள்ளக்குறிச்சி பெரும் மகிழ்ச்சியடைந்தனர். கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் நலத்திட்ட உதவிகளுக்கோ, ஆட்சியரிடம் மனு அளிக்கவோ, கூடுதல் மருத்துவ வசதி பெறவோ நீண்டதூரம் பயணிக்க வேண்டியதில்லை என்று குறுப்பிட்டுள்ளனர்.

9) புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் அமைக்கப்படுவதை தொடர்ந்து, தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம் என்ற அந்தஸ்தை விழுப்புரம் இழந்துள்ளது.

10) இதற்கிடையே கள்ளக்குறிச்சியை புதிய மாவட்டமாக அறிவித்ததன் பின்னணியில், முதல்வர் தனது வாரிசான மிதுன்குமாரை, நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சித் தொகுதியில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.