பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்யப்பட்டு வரும் அம்மா குடிநீர்!

Read Time:3 Minute, 0 Second

தமிழக அரசு விற்பனை செய்யும் அம்மா குடிநீர் பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகள் உள்பட 14 வகையான பொருட்கள் மீதான தடை கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனையடுத்து பொதுமக்கள், கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை வெகுவாகவே நிறுத்தி விட்டனர்.

இதனால் நடைபாதை உணவகம் முதல் ஓட்டல்கள் வரை தற்போது வாழை இலை அடங்கிய தட்டுகளிலேயே உணவுகள் பரிமாறப்பட்டு வருகின்றன. இறைச்சி கடைகளில் மந்தார இலைகளிலேயே இறைச்சி மடித்து தரப்படுகிறது.

மளிகை கடைகளிலும் பொட்டலம் கட்டும் நடை முறைக்கு திரும்பி இருக்கிறது. இதனால் மக்களிடையே தவிர்க்க முடியாத அங்கமாக இருந்த பிளாஸ்டிக் பைகள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பிளாஸ்டிக் பைகளின் நடமாட்டம் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. அரசின் தொடர் விழிப்புணர்வு தேவையென்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிர்ச்சிக்கரமான சம்பவமாக தமிழக அரசு விற்பனை செய்யும் அம்மா குடிநீர் பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம் அம்மா குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு விற்பனை செய்யும் குடிநீர் விலை குறைவு என்பதால் மக்கள் மத்தியில் அம்மா குடிநீருக்கு அமோக வரவேற்பு உள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மா குடிநீர் பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்யப்பட்டு வருகிறது. அம்மா குடிநீரும் பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் விநியோகிக்கப்படுகிறது. இதனால் அரசே பிளாஸ்டிக் பயன்பாட்டை ஊக்குவிப்பதுபோன்று இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு உடனடியாக இதனை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.