பொதுப்பிரிவினர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது; 10 குறிப்புக்கள்

Read Time:4 Minute, 1 Second

பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

1) பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா கொண்டுவரப்பட்டது.

2) அரசமைப்புச் சட்டத்தின் 124-வது திருத்த மசோதா என்ற பெயரிலான மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. 323 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.

3) நேற்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 165 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. அ.தி.மு.க., தி.மு.க., ராஷ்டிரீய ஜனதாதளம், பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த 7 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

4) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்து, இனி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

5) பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் ஏழைகளுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.

6) பொதுப்பிரிவினரில் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எங்களுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தோம் என்ற காங்கிரஸ், கடந்த நான்கரை ஆண்டுகளாக இல்லாமல் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மத்திய அரசு அவசர கதியில் கொண்டு வருவது ஏன்? என்று கேள்வியை எழுப்பியது. வாக்குகளை கவரும் நோக்கத்திலேயே மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது என்றும் கூறியது.

7) 2014-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது. இப்போது வேலைவாய்ப்பை உருவாக்குவதை மறந்து விடுங்கள், 2018-ம் ஆண்டில் மட்டும் 1 கோடிக்கும் அதிகமானோர் வேலையை இழந்துள்ளனர். இந்நிலையில் இட ஒதுக்கீடு செய்கிறீர்கள், ஆனால் வேலைவாய்ப்பு எங்கே? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

8) தற்போது மேற்கொள்ளப்படும் சட்டத்திருத்தத்தால் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் 50 சதவீத இடஒதுக்கீட்டில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு உறுதியளித்தது.

9) இடஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கொண்டு வந்த தீர்மானம் தோல்வியை தழுவியது.

10) 124-ஆவது சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க மசோதா வகை செய்துள்ளது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.