நடுங்குவதை நிறுத்துங்கள்… மோடி மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

Read Time:4 Minute, 15 Second

ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையிலான மோதல் முற்றியுள்ளது.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துக்கொண்டதில் ஊழல் என காங்கிரஸ் தொடர்ச்சியாக குற்றம் சாட்டுகிறது. இதுதொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்ற போது காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுலின் குற்றச்சாட்டுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடியை கொடுத்தார். ஆனால், ரபேல் விவாதம் நடைபெற்ற போது பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

மக்களவையில் விவாதத்திலிருந்து தப்பித்துக்கொள்ள பெண் ஒருவரை நியமித்துள்ளார் என்றார் ராகுல் காந்தி. நிர்மலா சீதாராமன் காங்கிரசின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிலையில் இக்கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ராஜஸ்தானில் ராகுல் காந்தி பேசுகையில், “இந்தியாவின் பாதுகாவலர், 56 இஞ்ச் மார்பை கொண்டவர் பாராளுமன்றத்தில் தன்னை பாதுகாக்குமாறு பெண் ஒருவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நிர்மலா சீதாராமனிடம் தன்னை பாதுகாக்குமாறு வேண்டிக்கொண்டுள்ளார். பாராளுமன்றத்தில் இரண்டரை மணி நேரங்கள் பேசினாலும் அவரால் பிரதமர் மோடியை காப்பாற்ற முடியவில்லை. நான் நேரடியான கேள்வியை எழுப்பினேன். ஆம் அல்லது இல்லையென்று பதில் அளிக்க கேட்டேன். ஆனால் நிர்மலா சீதாராமனால் பதில் அளிக்கமுடியவில்லை,” என்றார். பெண் ஒருவர் என்று பாலினத்தை குறிப்பிட்டு ராகுல் கூறியதை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது.

இதனையடுத்து நிர்மலா சீதாராமன் தொடர்பான ராகுலில் பேச்சு பெண்களை அவமதிப்பு செய்வது என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

உ.பி.யில் பிரதமர் மோடி பேசுகையில் “முதல்முறையாக இந்தியாவின் மகள் பாதுகாப்புத்துறை அமைச்சராகியுள்ளார். இது மிகவும் பெருமையான விஷயம். பாராளுமன்றத்தில் ரபேல் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டையும் அமைதியாக்கினார், பொய்யை வெளிப்படுத்தினார். அதிர்ச்சியடைந்தவர்கள் பெண் பாதுகாப்பு அமைச்சரை அவமானப்படுத்தி உள்ளனர். அவர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சரை மட்டுமல்ல, இந்தியாவின் பெண் சக்தியையும் அவமதித்துள்ளனர்” என்றார். இதனையடுத்து பெண்களை வெறுப்பவர், பெண்களை அவமதிப்பவர் என்று ராகுல் காந்தியை விமர்சனம் செய்து டுவிட்டரில் பா.ஜனதாவினர் தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில் நடுங்குவதை நிறுத்துங்கள் என்று மோடிக்கு பதில் கொடுத்துள்ளார். ”மதிப்புக்குரிய மோடிஜி. நம்முடைய கலாச்சாரம் என்பது பெண்களை வீட்டில் இருந்தே மதிக்கத் தொடங்குதில்தான் ஆரம்பிக்கிறது. முதலில் நடுங்குவதை நிறுத்துங்கள். ஆண்மகனாக இருந்து என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும்போது அதனை விமானப்படையும், பாதுகாப்பு அமைச்சகமும் எதிர்த்ததா? இல்லையா?.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.