பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்குவதற்கு தடை… வழக்கு தொடர்ந்தவர் சொல்வது என்ன?

Read Time:5 Minute, 44 Second

வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

வழக்கு தொடர்ந்தவர் சொல்வது என்ன?

வழக்கு தொடர்ந்த டேனியல் ஜேசுதாஸ் தீர்ப்பு தொடர்பாக பேசுகையில், 2006-07-ம் ஆண்டு தமிழகத்தின் நிதி கடன் தொகை ரூ. 17 ஆயிரத்து 600 கோடியாக இருந்தது. அரசின் கொள்கை என்ற பெயரில் வழங்கப்படும் இலவசங்களால் இப்போது கடன் ரூ. 3.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தமிழக அரசு தற்போது ரூ. 17,450 கோடி நிதிப் பற்றாக்குறை பட்ஜெட்டை போட்டுள்ளது. இப்போது ஆயிரம் ரூபாய் கொடுப்பதால் மேலும் கடன் சுமைதான் அதிகரிக்கும். வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு ரூ. 1000 கிடைக்க வேண்டும் என்றுதான் வழக்கு தொடர்ந்தேன். அவர்களுக்கு வழங்கப்படுவதில் எந்த தவறும் கிடையாது. இப்போது எங்களுடைய கோரிக்கையை ஏற்று ரூ. 1000 வழங்க கட்டுப்பாடுகளை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

பொங்கல் பரிசு என தமிழகத்தின் கடன் சுமையை அதிகரிப்பதற்குப் பதிலாக, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம் ஆயிரம் ரூபாய் கொடுத்தால், மக்கள் இரண்டு நாள்களுக்குத்தான் சந்தோஷமாக இருப்பார்கள். நாங்கள், மக்கள் எப்போதுமே நிம்மதியாக இருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறோம். எனவே, இதுபோன்ற இலவசங்களில் எடுக்கும் கொள்கை முடிவுகளை, கடனைக் குறைப்பதிலும் அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் குறுப்பிடுகிறார்.

உயர் நீதிமன்றம் உத்தரவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000-யை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் 5 வகையான குடும்ப அட்டைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 1000 அடங்கிய பொங்கல் பரிசு அனைத்து வகையான குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தது.

ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு 7-ம் தேதியிலிருந்து பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. மக்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் என்பவர் மனுவை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் வழங்க தடை விதித்தது. எந்த நோக்கத்துக்காக பணக்காரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. கட்சிப் பணம் என்றால் எந்த கேள்வியும் கேட்க மாட்டோம், அரசின் நிதி என்பதால்தான் கேள்வி கேட்கிறோம் அரசின் நிதி என்றால் கேள்வி எழத்தான் செய்யும் என்று நீதிபதிகள் காட்டம் தெரிவித்தனர்.

இதற்கு அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதற்கு அரசின் கொள்கை முடிவு தவறாக இருந்தால் நீதிமன்றம் தலையிடும் என்று நீதிபதிகள் பதிலடி கொடுத்தனர். பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 யாருக்கெல்லாம் போய் சேர வேண்டும் என்பதை வகைப்படுத்தியப் பிறகே திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு மட்டுமே பரிசுத் தொகை வழங்க வேண்டும். வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பை அனைவருக்கும் வழங்கலாம் என்று உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, யாருக்கெல்லாம் ரூ.1000 பரிசுத் தொகை கிடைக்கும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வெள்ளை நிற ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும், முன்னுரிமைப் பெறாத (என்பிஎச்எச்) மற்றும் சர்க்கரை மட்டுமே வாங்கும் (என்பிஎச்எச்எஸ்) அட்டைகளுக்கும் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படாது. அரிசி வாங்கும் ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பொங்கல் பரிசு வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு உச்ச நீதிமன்றம் செல்லலாம் எனவும் கூறப்படுகிறது.