மணக்கும் மதுரை தெப்பக்குளம்… காரணம் இதுதாங்க…!

Read Time:7 Minute, 11 Second

மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்ற பெயரை கேட்டாலே பக்தர்களிடம் அப்படியொரு சிலிர்ப்பும், பரவசமும் தொற்றிக்கொள்ளும். மதுரையில் திருமலை நாயக்க மன்னரால் அமைக்கப்பட்ட தெப்பக்குளம் கட்டடக்கலை நுட்பங்களின் சிறப்பினை வெளியிடுகின்றது. தெப்பக்குளத்தின் நடுவே மைய மண்டபமும், நான்கு புறமும் விமானத்தோடு அமைந்துள்ள நான்கு மண்டபங்களும் கண்களை பரிக்கும்.

தெப்பக்குளம் கலைநயம், வரலாறு கொண்டிருந்தாலும், குச்சிகளை ஊன்றி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியதைதான் மனதில் லயித்து நிற்கிறது. விளையாட செல்பவர்களை தெப்பகுளம் மகிழ்ச்சி பொங்க அரவணைக்கும். விளையாடும் போது தங்களுடைய அணியினரை மண்டபத்திலிருந்து உற்சாகப்படுத்துவதும், விளையாடிவிட்டு அங்கேயே ஓய்வு எடுப்பதும் என்றும் அழியாத நினைவாகவே மனதில் நிற்கும்… இதனை விவரிக்க வார்த்தைகளே பற்றாது. சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம்.!

குளத்தை அமைத்த நாயக்க மன்னர் வையை ஆற்றிலிருந்து இந்தக் குளத்திற்குத் தண்ணீர் வருவதற்கு வாய்க்கால் வசதியையும் செய்து வைத்தார். ஆனால் இப்போது அவையெல்லாம் கழிநீர் ஆக்கிரமிப்பால் அழிந்துவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை பருவமழை பெய்யும் காலங்களில் எப்போதும் இக்குளம் நீர் நிரம்பிக் காணப்படும். ஆனால் இப்போது பெரும்பாலும் விளையாட்டு மைதானமாகும், கால்நடைகள் மேயும் பசுமை புல் தளமாகவும்தான் காட்சியளிக்கிறது.ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், குளத்திற்கு தண்ணீர் கொண்டுவந்து நன்றாக பராமரிக்க வேண்டும், இதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்துதான் வருகிறது.

இவ்வாண்டு மழை பெய்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு முழுக் கொள்ளளவை எட்டிய வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக கடந்த மாதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரவில்லை.

ஆண்டுதோறும் தைப் பௌர்ணமியன்று தெப்பக்குளத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெப்பத்திருவிழா நடைபெறும். கோலாகலமாக நடைபெறும் இவ்விழாவிற்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் ஏற்றி, குளம் நிரப்பப்படும். விழா முடிந்த சில மாதங்களில் தண்ணீர் வற்றி குளம் முழுவதும் புல்தரை மைதானமாய் ஆகிவிடும். இந்த ஆண்டு தெப்ப உற்சவம் வருகிற 21-ம் தேதியன்று நடைபெறுகிறது. இதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தண்ணீர் நிரப்பத்தொடங்கிவிட்டனர். டிசம்பரில் குளத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்பட்ட போது தெப்பக்குளத்தை சுற்றிலும் நுரை பறந்தது. வைகை ஆற்றில் ஆங்காங்கே தேங்கி இருக்கும் கழிவுநீரையும், ரசாயனம் கலந்த நீரையும் தெப்பக்குளத்தில் நிரப்புகிறார்கள் என குற்றம் சாட்டப்பட்டது.

இயற்கை முறையில் சுத்திகரிப்பு

இப்போது குளம் தண்ணீர் நிரம்பிக் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் தண்ணீர் மிகவும் தூய்மையாக இருக்கிறது… அதுதான் எப்படி? என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழும். குளத்தில் தண்ணீர் இயற்கையான முறையில் சுத்திகரிக்கப்பட்டுள்ளது. பசுமைக்கோயில் இயக்கத்தின் தொழில்நுட்பத் தலைமை ஆலோசகர் ராஜசேகர் மற்றும் அவரது குழுதான் இந்த தூய்மை பணியை செய்துள்ளது. குளத்திற்கு தண்ணீர் வரும்போது, நிரம்பும் போதும் இருமுறைகளில் சுத்திகரிப்பு பணி நடக்கிறது என்கிறார்.

முதல் செயல்பாடு, ஆற்றிலிருந்து தண்ணீரை இறைக்கும்போது நடக்கிறது. அதாவது, இன்ட்ரின்சிக் பயோ ரெமிடியேசன் (Intrinsic Bio remidiation). ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் அளவிலான நுண்ணுயிர்க்கலவையை சொட்டுச்சொட்டாக கலந்து விடுகின்றனர். குளத்தில் துர்நாற்றம் ஏற்படுத்தும் ஆர்கானிக், பாஸ்பேட், நைட்ரானிக் போன்ற நச்சுகளை இவை அழித்துவிடும். அடுத்த செயல்பாடுதான் முக்கியமானது. பைட்டோ ரெமிடியேசன் (Phyto remidiation). மிகுந்த மருத்துவக் குணம் நிறைந்த வெட்டிவேர்களையும் கல்வாழைகளையும் குளத்தில், மூங்கில் படகுகள் செய்து மிதக்க விட்டிருக்கின்றனர்.

ஒரு வெட்டிவேர், 2.5 கிலோ கார்பன் டைஆக்சைடை உள்ளிழுத்துக் கொள்ளும். தாய்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் நீர்நிலைகளை சுத்தப்படுத்த வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது, அந்த முறையைதான் இங்கு பின்பற்றுகிறோம் என்று கூறியுள்ளார் ராஜசேகர். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற இந்தச் சுத்திகரிப்பு முறை, மீனாட்சிக்கோயில் நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு நடைபெற்று வருகின்றது. இயற்கை முறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் மதுரை தெப்பக்குளம் மணக்க தொடங்கியுள்ளது. நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள். மணம் நிறைந்த குளத்தின் மையத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் அம்மையப்பன் காட்சியளிக்கும் உற்சவம் அழகுசேர்க்கட்டும்.

தெப்பக்குளத்தை சுற்றிலும் வேம்பு, அரசு, புங்கன், நாவல், பூவரசு, கடம்பு, ஓதியன், ஆல் போன்ற நாட்டு மரங்களை நடலாம். இதில், அரசு, நாவல், ஆல் மரங்களின் பழங்களை பறவைகள் விரும்பிச் சாப்பிடும். பறவைகளை அதிகளவு தெப்பக்குளத்துக்கு வர வைக்கலாம். அழகுக்காக லில்லி, தாமரை மலர்ச் செடிகளை வளர்க்கலாம். வெட்டி வேர் செடிகள் மூலம் தண்ணீரை மேம்படுத்துவதோடு, மாசு அடையாமல் பார்த்துக் கொள்ளலாம், இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் மத்தியில் இருக்கிறது.