ஆண்டாள் திருப்பாவை – 27; கிருஷ்ணனிடம் இருந்து பெறவேண்டிய பரிசு…

Read Time:4 Minute, 5 Second

பகைவரை வெல்லும் சிறப்புடைய பெருமாளே! நாங்கள் உன்னைப் புகழ்ந்து பாடி பரிசு பெற வந்துள்ளோம் என்கிறார் ஆண்டாள் பிராட்டியார். பகைவர்களை வெல்வது என்பது கிருஷ்ணனுக்கு எளிதானது என்பதால், தன்னை விரும்பாதவர்களையும் விரும்பும்படி அவர்களுடைய மனதை வெற்றிகொண்டு விடுவான் என்கிறார்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்

நோன்பு நோற்பதற்கு தேவையான பொருட்களை பட்டியலிட்ட சிறுமிகளிடம் கிருஷ்ண்ன், இவை போதுமா இன்னும் வேண்டுமா என்று கேட்டான் போலும். அதற்கு அந்த சிறுமிகள் நாங்கள் நோன்பு முடிந்ததைக் கொண்டாடும்போது தங்களுக்கு வேண்டுவது என்னென்ன என்று இந்த பாடலில் கூறுகின்றார்கள்.

திருப்பாவை – 27

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூட இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

குறிப்பு:-

கூடாரை – கூட முடியாதவரை, ஒன்று படாதவரை
சீர் – பெருமை
பறை – பரிசு
சம்மானம் – வெகுமதி
பரிசினால் – பரிசாக
சூடகமே – கைவளையே
தோள்வளை – வங்கியே
செவிப்பூவே – மேல் காதில் அணியும் அணியே
பாடகமே – கால் வளையே
என்றனைய – என்று சொல்லப்படும்
பல்கலனும் – பல ஆபரணங்களும் (பல்(பல)+கலனும்(ஆபரணங்களும்))
யாம் – நாம்
மூட – மறையும் படியாக
பெய்து – பொழிந்து
குளிர்ந்தேலோர் – குளிர வேண்டும், அறிந்து ஏற்றுக்கொள்

பொருள்:-

உன்னுடன் கூடாத பகைவர்களை வெல்லும் வல்லமை படைத்த கிருஷ்ணா, நாங்கள் உனது பெருமைகளை வாயாரப்பாடி உன்னிடம் பறைக்கருவி பெற்று இந்த நோன்பினை முடித்தோம்.

இந்த நோன்பினை வெற்றிகரமாக முடித்தமையை கொண்டாடும் வகையில் நாங்கள் பெரும் சம்மானமாவன, வளையல்கள், தோளில் அணியப்படும் வளைகள், தோடு, செவிப்பூ, காலில் அணியும் சிலம்பு ஆகிய பலவிதமான அணிகலன்களை யாம் அணிந்து நாட்டோர் புகழும் வகையில் நாங்கள் அணிந்துகொள்வோம்; மேலும் நீ அளிக்கும் ஆடைகள் புனைந்து, பால் சோற்றினை முற்றிலும் மூடுமாறு நெய்யினால் அதனை மறைத்து, அந்த பால் சோற்றினில் உள்ள நெய் எங்களது முழங்கைக் வழியாக வழிந்து ஓடுமாறு சோற்றினை எங்களது கையினில் ஏந்தி, உன்னுடன் கலந்து நாங்கள் உண்போம். அவ்வாறு உண்ட பின்னர், எங்களது உள்ளம் குளிரும் வகையில் உன்னுடன் கூடி இருந்து நாங்கள் அனைவரும் மகிழ்வோம் என்கிறாள்.


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவில்.

திருப்பாவையில் இந்த பாசுரமானது கூடிவராத நற்காரியங்களையும் கூடி வரச்செய்வது. இந்த பாசுரத்துக்கு உரிய நாளில் ஆலயங்களில் கூடாரவல்லி வைபவம் நடைபெறுகிறது. திருப்பாவையில் மிகவும் விசேஷமான இந்தப் பாசுரத்தைப் பாராயணம் செய்தால், திருமணம் கூடி வராதவர்களுக்கு திருமணம் கூடி வரும் என்பது தொன்றுதொட்டு நிலவிவரும் பக்திபூர்வமான நம்பிக்கையாகும்.