ஆண்டாள் திருப்பாவை – 28; குறைவொன்றும் இல்லாத கோவிந்தன் என்பதை புரிந்துகொண்டோம்…!

Read Time:3 Minute, 52 Second

ஆண்டாள் பிராட்டியார் இப்பாடலில் குறைவொன்றும் இல்லாத கோவிந்தன் நீ என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம் என்று கிருஷ்ணனின் அன்பைப் போற்றுகிறாள்.

‘கூடாரை வெல்லும்’ பாசுரத்தில் கிருஷ்ணனின் அருளால் தாங்கள் பெற்ற பரிசுகளை பட்டியலிடும் ஆண்டாள் பிராட்டியார், தாங்கள் கிருஷ்ணனுடனும் நப்பின்னையுடனும் கூடி இருந்து, நெய்கலந்த பால்சோற்றை சாப்பிடப்போவதாக சொல்கிறாள். ஆண்டாள், ஆயர்குல சிறுமிகள் கிருஷ்ணனை ஆயர்குலச் சிறுவன் என்று நினைத்து, ஒருமையில் அழைத்ததை எல்லாம் பொருட்படுத்தாமல், மிக்க அன்புடனே வேண்டியதை தரும் கிருஷ்ணனை போற்றுகிறார்கள்.

திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில்.

நாங்கள் உன்னிடம் கேட்டு பெற்ற கைவளையும், தோள்வளையும், தோடும் எல்லாம் எங்களுக்குப் பெரிதல்ல என்று கூறும் ஆண்டாள் பிராட்டியார், பகவானுடைய திருவடி நிழலிலேயே இருக்கவேண்டும் என்கிறார்.

திருப்பாவை – 28

“கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

குறிப்பு

கறவைகள் – பசுக்கள்
பின்சென்று – பின்னே போய்
கானம் – காடு
ஆய்க்குலத்து – இடைக்குலத்தில்
உந்தன்னை – உன்னை
பெறுந்தனை – பெறுவதற்குத் தக்க
உன்றன்னோடு – உன்னோடு
உறவேல் – உண்டான உறவு (உறவு+ஏல்(ஏற்றுக் கொண்ட))
நமக்கிங்கு – இங்கு நம்மால்
ஒழிக்க – அழிக்க
ஒழியாது – அழிக்கமுடியாது
பிள்ளைகளோம் – பிள்ளைகளாய்
சிறுபேர் – சிறிய பெயரால்
அழைத்தனமும் – அழைத்ததைக் குறித்து
சீறி அருளாதே – கோபித் தருளாமல் (சீறி-கோபித்து)
தாராய் – தந்தருள்
பறையேலோர்-உணர்ந்து வேண்டிய பரிசை அளிக்க வேண்டும்

பொருள்:-

ஆநிரைகள் மேய்வதற்கான புல்வெளிகளைத் தேடி, பசுக்களின் பின்னே காட்டிற்கு சென்று, அங்கே கூடி கலந்து உண்ணும் வழக்கத்தினைக் கொண்ட, அறிவில்லாத ஆய்க்குலத்தில் பிறந்த நாங்கள், உன்னை எங்கள் குலத்துப் பிள்ளையாக பெறுவதற்கு உரிய புண்ணியத்தை செய்தவர்களாக உள்ளோம். குறை ஏதும் இல்லாத கோவிந்தனே, உன்னோடு நாங்கள் கொண்டுள்ள உறவினை, எவரும் அழிக்க முடியாது.

திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில்.

நாங்கள் அறியாத பிள்ளைகளாய் இருப்பதால், உனது பெருமையினை முற்றிலும் உணராது, உன் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக, உன்னை சிறிய பெயர்களால் பலமுறை அழித்துள்ளோம். அவற்றை மனதில் வைத்துக்கொண்டு எங்கள் மீது கோபம் கொள்ளாமல், இறைவனே, நீ எங்களுக்கு பறைகள், மற்றும் நாங்க விரும்பிய பொருட்களை அருளவேண்டும் என்கிறாள்.