தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி சேனல் 21-ம் தேதி ஒளிப்பரப்பு

Read Time:4 Minute, 23 Second

தமிழகத்தில் பள்ளிக் கல்வி தொடர்பான விஷயங்களை ஒளிபரப்புவதற்காக கல்வி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது.

தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய பாடத்திட்டம், ரேங்க் முறை ரத்து, எஸ்சிஇஆர்டி யூடியூப்-சேனல் போன்ற திட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாநிலத்தில் கல்வித் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லவும் பொதுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இந்தியாவில் கேரளா உட்பட சில மாநிலங்களில் மட்டுமே கல்விக்கென பிரத்யேக தொலைக்காட்சி சேனல் உள்ளது. இதுபோல தமிழக மாணவர்களுக்காக சேனல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

புதிய சேனலில் குருவே துணை, குரளின் குரல், நலமே வளம், அறிவியல் அறிவோம் நிகழ்ச்சிக்கள் உள்பட கல்வி தொடர்பாக 20 நிகழ்ச்சிகள் தினசரி ஒளிப்பரப்பு செய்யப்படும். DTNext பத்திரிக்கைக்கு பேட்டியளித்து பேசியுள்ள கல்வித்துறை மூத்த அதிகாரி, கல்வி தொலைக்காட்சி சேனலுக்கான படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப தளம் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைப்பார். முதல்கட்டமாக சேனல் 10 மணி நேரங்களுக்கு ஒளிபரப்பு செய்யப்படும், பின்னர் 24 மணிநேரமாக மாற்றப்பட்டும். பள்ளி விடுமுறை நாட்களில் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், கபடி மற்றும் யோகா அடங்கிய ஓடிவிளையாடு பாப்பா நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும்.

மாணவர்களுக்கு கடினமான பாடங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் மூலம் விளக்கமாக பாடம் நடத்தும் நிகழ்ச்சியும் ஒளிபரப்பு செய்யப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தும் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும். தமிழ்நாடு மாநில கல்வி கழகத்தால் அனைத்து நிகழ்ச்சிக்களும் தயார் செய்யப்படுகிறது. தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநரகம், வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழு இதற்கான பணியை செய்கிறது.

இதுபோக மாணவர்களின் கம்யூனிகேஷன் திறனை மேம்படுத்தவும், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான கல்வியை மேம்படுத்தவும் பிரத்யேக திட்டங்கள் உள்ளது. குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு சேனலில் முன்னுரிமை அளிக்கப்படும். NEET மற்றும் JEE உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்த தனியார் துறையை சேர்தவர்களிடம் ஆலோசிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

எல்.கே.ஜி. வகுப்புகள் முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிக் கல்விக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், கல்வி உதவி தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான விளக்கங்கள், புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், அரசுப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள், பள்ளிகளுக்கான முக்கிய சுற்றறிக்கைகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் என பல அம்சங்கள் இடம்பெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.