ஆண்டாள் திருப்பாவை – 29; கிருஷ்ணனின் அருள் என்றென்றும் கிடைக்கட்டும்…!

Read Time:5 Minute, 12 Second

ஆடியில் அவதரித்த ஆண்டாள், பெருமாளை கணவனாக அடையும் உறுதியுடன் மார்கழியில் பாவை விரதம் இருந்து பாடிய பாடல்களே ‘திருப்பாவை’. மாதத்தில் நீராடி, திருப்பாவை பாடி கிருஷ்ணனை வழிபட விரும்பும் ஆண்டாள் பிராட்டியார், தான் பெறப்போகும் பேரின்பம் தன்னுடைய தோழியர்களும் பெறவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பாடலாகப் பாடி அவர்களை எழுப்பி தன்னுடன் அழைகிறார். நிறைவாக கிருஷ்ணனையும் எழுப்பி விட்டாள். கிருஷ்ணனைப் பணிய வேண்டுமானால் அவனும் தங்களுக்கு அருகில் இருந்தால்தானே முடியும்? எனவே கிருஷ்ணனையும் எழுப்பி தங்களுடன் யமுனைக்கு வருமாறு அழைக்கிறாள்.

பாவை நோம்பு இருக்கும் ஆண்டாள் பிராட்டியார் மற்றும் ஆயர்குல சிறுமிகளுக்கு கிருஷ்ணனும் அருள் புரிந்துவிட்டான்.


திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில்.

மேலும் தன்னை விரும்பி வணங்குவதன் காரணம் என்ன என்றும் கேட்கிறான். அதற்கு கிருஷ்ணனுடன் உறவு கொண்டு அவனுக்கு ஆட்பட்டு அவனுக்குப் பணி செய்வதுதான் தங்களது உண்மையான விருப்பம் என்றும் இந்த விருப்பம் இந்த பிறப்பிலும் மற்றும் எடுக்கவிருக்கும் அனைத்து பிறவிகளிலும் தொடர்ந்து ஈடேற வேண்டும் என்பதே ஆயப்படி சிறுமியர்களின் உண்மையான நோக்கம் என்று ஆண்டாள் பிராட்டியார் கூறுகின்றார். இதைத் தவிர வேறு எந்த விருப்பமும் எங்களுக்கு இல்லை என்கிறாள்.

திருப்பாவை – 29

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

குறிப்பு:-

சிற்றம் – சிறிய அழகிய (சிறு+அம்(அழகிய))
சிறுகாலே – அதிகாலைப் பொழுது,வைகறை
பெற்றம்மேய்த்து – பசுக்களை மேய்த்து (பெற்றம்-பசுக்கள்)
குற்றேவல்-சிறு வேலை (குறு(சின்ன)+ஏவல்(வேலை))
கொள்ளாமல் போகாது-வாங்காமல் போக முடியாது
இற்றை-இன்று
பறைகொள்வான்-பரிசு பெற்றுக்கொள்வான்(பறை-பரிசு)
எற்றைக்கும்-காலம் உள்ள வரை
உன்தன்னோடு-உன்னோடு
உற்றோமே-உறவு உடையவர்களாக
ஆட்செய்வோம்-அடிமை செய்யக்கடவோம் (ஆள்(அடிமை)+செய்வோம்)
மற்றை-மற்ற
காமங்கள்-ஆசைகள்
மாற்றேலோர்-உணர்ந்து நீக்கு (மாற்று+ஏல்(ஏற்றுக் கொள்)+ஓர்(ஆராய்ந்து அறிந்து கொள்))

பொருள்:-

கிருஷ்ணா! இந்த விடியற்காலை வேலையில், இவ்விடத்துக்கு வந்து, உன்னை தெண்டனிட்டு உனது அழகிய திருவடித் தாமரைகளை மங்களாசாசனம் செய்வதற்கான பலனை, அதன் பொருளை நீ கேட்டு அருள வேண்டும். பசுக்களை மேய்த்து, அவற்றின் மூலம் கிடைக்கும் பாலும் தயிரும் வெண்ணெயும் விளைபொருளுமாக உண்ணுகின்ற இடையர் குலத்தில் பிறந்த நீ, எங்கள் அந்தரங்கக் கைங்கரியத்தினை ஏற்று, எங்களைக் ஏற்காமல் போகாதே! இன்று உன்னால் கொடுக்கப்படுகிற இந்தப் பறையினைப் பெறுவதற்காக நாங்கள் வரவில்லை! காலம் உள்ளளவும், ஏழேழ் பிறவிக்கும், உன்னுடைய எந்த அவதாரங்களிலும், உன்னோடு உறவு உடையவர்கள் ஆவோம். உனக்கு மட்டுமே நாங்கள் அடிமை செய்யக் கடவோம்.


திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில்.

உன் மீதான பக்தியை மாற்றமாட்டோம்; எங்களின் மற்றைய இகலோக விருப்பங்களைத் தவிர்க்கும்படி, எங்களுக்கு நீயே அருளவேண்டும் என்று ஆயர்சிறுமியர் பிரார்த்தித்தனர். உன் பொற்றாமரை அடியைப் போற்றுதற்கான நோக்கம் என்வென்று கேட்டாய். பாற்கடல் நடுவே பரமபதத்தில் நாயகனாக விளங்கும் நீ, உன் இருப்பிடத்தைத் தவிர்த்து இங்கே இடைக்குலத்தில் வந்து பிறந்தாய். அதற்கு ஒரு பயன் வேண்டுமன்றோ? எங்களிடம் நீ கைங்கரியத்தை ஏற்காது இருப்பாயாகில் உன்னுடைய இப்பிறவியே பயனற்றதாகுமே! என்கின்றனர். ஸ்ரீ சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.