ஆண்டாள் திருப்பாவை – 30; திருப்பாவை பாசுரத்தை படிப்பதால் நாம் அடையும் நன்மைகள்…

Read Time:4 Minute, 32 Second

திருமாலை அன்றி ஒருவரையும் மணாளனாக ஏற்க மறுத்தவர் ஆண்டாள். அதற்காக பாவை நோன்பை மேற்கொண்டு, தன் விருப்பப்படியே திருமாலை மணம் புரிந்தவர். ஆண்டாள் பாவை நோன்பை மேற்கொண்டு, தன் விருப்பப்படியே திருமாலை மணம் புரிந்தவர். ஆண்டாள் பிராட்டியார், தான் பெறப்போகும் பேரின்பம் தன்னுடைய தோழியர்களும் பெறவேண்டும் என்பதற்காக பாவை நோம்பு மேற்கொள்ள செய்தார். திருப்பாவையின் 30-வது பாடலான இப்பாடலில் திருப்பாவை பாசுரத்தை படிப்பதால் விளையும் பலன்களை ஆண்டாள் பிராட்டியார் கூறியுள்ளார்.

ஸ்ரீஆண்டாள், திருவல்லிக்கேணி.

ஆண்டாள் நாச்சியார் தன்னை ஆயர் குலச் சிறுமியாக உருவகித்துக்கொண்டு பாடிய பாடல்கள் என்ற விவரம் இந்த பாடலில் தெரிவிக்கப்படுகின்றது.

திருப்பாவை -30

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்டவாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

குறிப்பு

வங்கக்கடல் – அலைகள் நிறைந்த கடல் (வங்கம்-அலை)
மாதவனை – திருமகளின் கணவனை (மா(திருமகள்)+தவன்(கணவன்))
கேசவனை – கேசி என்ற அரக்கனைக் கொன்றவனை
திங்கள் – சந்திரன்
திருமுகத்து – அழகிய முகத்தை (திரு-அழகு)
சேயிழையார் – செழிப்பான ஆபரணங்கள் உடையவர் (சேய்(செம்மை)+இழை(ஆபரணம்))
சென்றிறைஞ்சி – சென்று வணங்கி (சென்று+இறைஞ்சி(வணங்கி))
பறைகொண்ட – பரிசு வாங்கிக் கொண்ட (பறை-பரிசு)
ஆற்றை – வழியை (ஆறு-வழி)
அணி – அழகிய
புதுவை – புத்தூர்,வில்லிபுத்தூர்
பைங்கமலம் – பசுமை பொருந்திய தாமரை (பைம்(பசுமை)+கமலம்(தாமரை))
தண்தெரியல் – குளிர்ந்த மாலை (தண்(குளிரிந்த)+தெரியல்(தொங்கு மாலை))
பட்டர்பிரான் – பெரியாழ்வார்
கோதை – ஆண்டாள்
சங்கத்தமிழ்மாலை – சங்கத் தமிழில் தொடுக்கப்பட்ட மாலை
முப்பதும் – முப்பது பாசுரங்கள்
தப்பாமே – தப்பாமல்
பரிசுரைப்பார் – பரிசைப் பாடுபவர்கள்
ஈரிரண்டு – நான்கு (ஈர் +இரெண்டு)
மால்வரைத்தோள் – பெரும் மலைத் தோள்கள் (மால்(பெரிய)+வரை(மலை)+தோள்
செங்கண் – சிவந்த கண்
இன்புறுவர் – இன்பம் அடைவர்
எம்பாவாய் – என் பெண்ணே

பொருள்:-

இந்தத் திருப்பாவையைச் சொன்னால் என்ன பயன் ஏற்படுகிறது என்பதைக் கூறுகிறது இந்தப் பாசுரம்.


திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில்.

கடலுக்குள் இருக்கும் அமுதத்தை எடுத்து, பகவான் தேவர்களுக்குக் கொடுத்தான். கேசி என்ற அரக்கனை அழித்த கண்ணபிரானை, சந்திரன் போன்று அழகிய முகத்தினையும் செம்மையான ஆடைகளையும் உடைய ஆயர் குலத்துச் சிறுமிகள் சென்றடைந்து அவனை வேண்டிப் பறை கொண்ட தன்மையை, அழகிய வில்லிபுத்தூரில் பிறந்தவளும், பசுமையும் குளிர்ச்சியும் உடைய தாமரை மலர்களால் புனையப்பட்ட மாலையினை உடையவளும் பெரியாழ்வார் என்று அழைக்கப்படும் பட்டர்பிரானின் மகளுமாகிய ஆண்டாள் அருளிச்செய்த இந்த முப்பது பாடல்களைக் கொண்ட பாசுரத்தை, சங்கத் தமிழ் மாலையை, தப்பாமல் ஓதுவார்கள், பெரிய மலை போன்ற நான்கு தோள்களை உடையவனும், சிவந்த கண்களை உடையவனும், ஒப்பற்ற செல்வதை உடையவனும் ஆகிய திருமாலின் அருளினால் அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வினில் இன்பங்களை அடைவார்கள். ஸ்ரீ சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.