2019 தேர்தலும், ஆப்ரேஷன் தாமரையும்…! குமாரசாமி ஆட்சி தப்புமா?

Read Time:7 Minute, 37 Second

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்துவந்த சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆர். சங்கர் மற்றும் எச். நாகேஷ் திரும்ப பெற்றது தென்னிந்தியாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா திட்டமிட்டுள்ளது என்ற யூகத்தை வலுப்பெற செய்துள்ளது.
மாநிலத்தில் அரசாங்கம் நிலையாக உள்ள நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜனதா தலைவர்களுடன் தொடர்பில் உள்ளனர் என செய்திகள் வெளியாகியது.

224 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மை எண்ணிக்கையான 113-ஐ விடவும் அதிகமாக 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று பலமான அரசாக குமாரசாமி அரசு உள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 37 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 80 எம்.எல்.ஏ.க்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளது. பா.ஜனதா 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய செய்தால் சட்டசபையில் பலம் 210 ஆக குறையும். அப்போது மெஜாரிட்டி எண்ணிக்கை 106 ஆகும்.

இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை சேர்த்தால் பா.ஜனதாவின் எண்ணிக்கை 106 ஆக உயரும். பா.ஜனதா 104 எம்.எல்.ஏ.க்களை குர்கானுக்கு மாற்றிவிட்டது. பா.ஜனதா கர்நாடக கூட்டணி அரசை கலைக்க முயற்சி செய்கிறது என குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய செய்து ஆட்சியை தக்கவைப்பதுதான் பா.ஜனதாவின் ‘ஆப்ரேஷன் லோட்டஸ்’ பணியாகும். 2008-ம் ஆண்டும் இந்நடவடிக்கையை கர்நாடக பா.ஜனதா முன்னெடுத்தது. இப்போதும் அதே போன்ற சூழ்நிலை காணப்படுகிறது.

எடியூரப்பா விலகல்

2018 மே மாதம் கர்நாடக சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) ஆகிய 3 கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டது. தேர்தல் முடிவில் எந்த ஒரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 104 இடங்களை கைப்பற்றிய பா.ஜனதா ஆட்சி அமைத்தது. ஆனால் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற எடியூரப்பாவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே அவர் ராஜினாமா செய்தார்.

104 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் பா.ஜனதாவால் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. ஆபரேஷன் தாமரை மூலமாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதா திட்டமிட்டது. ஆனால் ஆபரேஷன் தாமரை மூலம் அந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முடியாமல் பா.ஜனதா தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து பா.ஜனதாவை ஆட்சியில் அமரவிடாத வண்ணம் ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைந்தது.

இருப்பினும் அமைச்சரவை விவகாரத்தில் இன்று வரையில் பிரச்சனை தீராது செல்கிறது.

பா.ஜனதா தீவிரம் காட்டுவது ஏன்?

104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரலில் நடக்க உள்ள 2019 மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 20 இடங்களில் வெற்றி பெற பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடக தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்காக எடியூரப்பா தீவிரமாக பிரசாரம் செய்கிறார். தேர்தலில் தென் இந்தியாவில் அதிக இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற அமித்ஷா பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியது.

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நீடித்தால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 13 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பில்லை என்ற தகவல் அமித்ஷாவுக்கு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் தேர்தலுக்கு முன்பாக ஆட்சியை பிடிக்க கர்நாடக தலைவர்களுக்கு அமித்ஷா உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையில் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா ஆர்வம் காட்டுகிறது.

இதன் காரணமாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க ஆபரேஷன் தாமரையை கையில் எடுக்க பா.ஜனதாவினர் முடிவு செய்திருப்பதாகவும், மந்திரி பதவி கிடைக்காமலும், லிங்காயத் சமூகத்தை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில்தான் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் குர்கான் கொண்டு செல்லப்பட்டனர். சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தலைமையின் தொடர்பிலிருந்து விலகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

2014 தேர்தலுக்கு பின்னர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் வெற்றியை மற்றும் பார்த்துவந்த பா.ஜனதாவிற்கு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் பெரும் அடியாக ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்தது. 80 தொகுதிகளை கொண்ட உ.பி.யில் பா.ஜனதாவிற்கு பெரும் சவாலை கொடுக்கும் வகையில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. ஒடிசா, மேற்கு வங்காளம், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பிராந்திய கட்சிகளின் பலம் ஸ்திரமாக உள்ளது.

தென் இந்தியாவை பொறுத்தவரையில் பா.ஜனதாவிற்கு சாதகமான மாநிலம் என்று பார்த்தால் கர்நாடகம் மட்டும்தான். 2019 தேர்தலில் 272 என்ற மெஜாரிட்டியை எட்ட பா.ஜனதாவிற்கு கடும் சவால் இருக்கும் என்ற நிலையில் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டுகிறது. பா.ஜனதாவை வெளியேற்ற காங்கிரஸ் இறங்கிவரும் நிலையில் பா.ஜனதாவிற்கு வெற்றிகிடைக்குமா? குமாரசாமி ஆட்சி தப்புமா? என்ற கேள்விக்கு கர்நாடக சட்டசபை கூடியதும் தெரியவரும்.