விரைவில் இடி, மின்னல் குறித்தும் வானிலை முன்னெச்சரிக்கை…!

Read Time:2 Minute, 52 Second

விரைவில் இடி, மின்னல் குறித்தும் வானிலை முன்னெச்சரிக்கை வெளியிடப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இடி, மின்னல் தாக்குதல் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் இயற்கை பேரிடரால் ஏற்படும் அழிவு குறித்தும், அதை எதிர்கொள்வது குறித்தும் சர்வதேச மாநாடு 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் கே.ஜே.ரமேஷ் பேசுகையில், இயற்கை பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகளில், இடி, மின்னல் போன்றவற்றால் உயிரிழப்பு ஏற்படுவதுதான் நாட்டிலேயே 2-வது இடத்தில் உள்ளது.

ரேடார் மற்றும் செயற்கைகோள்கள் அனுப்பும் புகைப்படங்களைக் கொண்டு, இடி, மின்னல் போன்றவற்றை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. அதன்மூலம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொலைபேசி மூலமாகவே, குறுஞ்செய்தி மூலமாகவோ தகவல்கள் தெரிவிக்கப்படும். அதற்கான தொழில்நுட்பத்தை மத்திய அரசு தற்போது உருவாக்கி வருகிறது.

இந்த விஷயத்தில் ஒடிஸா அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. கடலோரப் பகுதிகளில் பல புயல் நிவாரண முகாம்களை ஒடிசா அரசு அமைத்துள்ளது. இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு ஒடிஸா அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்ட வேண்டிய ஒன்று. இயற்கை பேரழிவு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உள்ளது என்று கூறினார்.

புவி அறிவியல் துறை செயலர் எம்.என். ராஜீவன் பேசுகையில், இடி, மின்னல் போன்ற இயற்கை பேரிடர்கள் குறுகிய கால அளவில் ஏற்படுவதால் அதை முன்கூட்டியே கணிப்பதில் சிக்கல் நிலவுகிறது. எனினும் அதற்கான ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மின்னல் குறித்த தகவலை சேகரிக்கும் வகையில், தாமினி என்ற செல்லிடப்பேசி செயலியை ஐஐடி புணே கல்லூரியுடன் இணைந்து புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் உருவாக்கியது. எனினும் இதுகுறித்து மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.