50 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை வளர்த்த ‘மரமனிதர்’ விஷ்வேஸ்வர் மரணம்

Read Time:4 Minute, 34 Second

உத்தரகாண்ட் மாநிலத்தின் மரமனிதரும், சுதந்திர போராட்ட வீரருமான விஷ்வேஸ்வர் தத் சாக்லானி 96 வயதில் மரணமடைந்தார்.

“மரங்கள்தான் எனக்கு எல்லாமே. மரங்கள்தான் என்னுடைய குடும்பம், என்னுடைய பெற்றோர், என்னுடைய நண்பர்கள், என்னுடைய உலகம்,” என ஒவ்வொரு மரத்தையும் தன்னுடைய உலகமாக பார்த்து வாழ்ந்துள்ளார் விஷ்வேஸ்வர் தத் சாக்லானி.

1922 -ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி பிறந்த விஷ்வேஸ்வர் தன்னுடைய 8-வது வயதில் மரங்களை நடுவதை தொடங்கினார்.
சிறுவயதில் இருந்தே மரங்கள் வளர்ப்பதென்றால் அலாதி பிரியம் கொண்ட அவர் அதற்கான பணியை தீவிரமாக மேற்கொண்டார். ஒவ்வொரு புதிய முயற்சியையும் இவ்வுலகம் முதலில் சிரிக்கும், பின்னர் வியப்படைந்து பாராட்டும் என்பது விஷ்வேஸ்வர் விஷயத்திலும் பொருந்தும்.

விஷ்வேஸ்வர் தன்னுடைய சொந்த மாவட்டமான தெக்ரியில் மலடாக காட்சியளித்த இடங்களை பசுமையாக்கியுள்ளார். கொய்யா, மா உள்ளிட்ட மரங்களையும் காட்டுப்பகுதியில் வளர்த்து பசுமை சோலையாக்கியுள்ளார். அவருடைய முயற்சியை ஆரம்பித்தபோது மலடாய் இருந்த நிலம் இப்போது கால்நடைகள், பறவைகளுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கு பெரும் பயனை கொடுக்கும் பச்சை வனப்பகுதி உயர்ந்து நிற்கிறது.

சுதந்திர போராட்ட வீரரான விஷ்வேஸ்வருக்கு பசுமையான காடுகளை உருவாக்கும் பணி எளிதானதாக அமைந்துவிடவில்லை. ஆரம்ப காலங்களில் அவர் மரங்களை நடுவதன் மூலம் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளையும், இன்னல்களையும் எதிர்க்கொண்டு தன்னுடைய பணியில் தொடர்ந்தார். அவருக்கு சுற்றுசூழல் மற்றும் மரங்கள் மீது இருந்த பாசம், அதனால் ஏற்பட்ட நலன்களை மக்கள் உணர்ந்துக்கொள்ள பல வருடங்கள் ஆனது. பின்னர் அவருடைய பணியை பாராட்டி பலரும் உதவிகளை செய்ய முன்வந்தனர். இதுவரையில் 50 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை வளர்த்த அவர் நேற்று இயற்கையிடம் சென்றார்.

விஷ்வேஸ்வர் தத் சாக்லானி மகன் சந்தோஷ் பேசுகையில், “10 வருடங்களுக்கு முன்னதாக என்னுடைய தந்தையின் கண் பார்வை மங்கியது. மரங்கள் நடவு செய்யும் போது சேறு, தூசிகள் அவரது கண்களுக்குள் சென்றது பெரும் விளைவை ஏற்படுத்தியது. இருப்பினும், அவை அவருடைய பணியை தடுக்கவில்லை. கண் தெரியாத நிலையிலும், ஆயிரக்கணக்கான மரங்களை நட்டுள்ளார்,” என்று கூறியுள்ளார். விஷ்வேஸ்வர் தத் சாக்லானிக்கு 1986-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, இந்திரா பிரியதர்ஷினி விருது வழங்கி கெளரவித்துள்ளார்.

மரம் நடுவதற்கு விஷ்வேஸ்வருக்கு உதவியாக இருந்த அவருடைய மனைவி பகவதி பேசுகையில், “அவருக்கு மரம்தான் எல்லாம். மரம்தான் என்னுடைய குடும்பம், பெற்றோர், நண்பர்கள், உலகம். ஒவ்வொரு மரமும் அவருக்கு உலகமாக தெரிந்ததால், இந்த உலகத்தை அவர் பார்க்க விரும்பவில்லை,” என்று கூறியுள்ளார். விஷ்வேஸ்வர் இந்த உலகைவிட்டு சென்றாலும் அவர் நட்டு வளர்த்த மரங்கள் அவருடைய புகழை உலகிற்கு எடுத்துக்கூறும் என்பதில் ஐயம் கிடையாது.

நம்முடைய வாழ்நாளில் நாம் ஒரு மரமாவது நட்டது உண்டா? அது வளர தண்ணீர் ஊற்றியது உண்டா? பாதுகாப்பு செய்தது உண்டா? என்று ஒவ்வொருவரும் சுயப்பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டிய தருணம் இன்று உலகில் நிலவுகிறது. “மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும், வாழ்நாளில் ஒரு மரமாவது வளர்க்க வேண்டும்” இதுதான் நாம் இவ்வுலகில் இயற்கைக்கு செய்யும் துரோகத்திற்கான கைமாறு ஆகும்.