இந்தியர்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவித்த வோக்ஸ்வேகன்…

Read Time:5 Minute, 20 Second

தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் நிறுவப்பட்ட குழு தாக்கல் செய்த அறிக்கையில், 2016-ம் ஆண்டில் 48.678 டன் நைட்ரஜன் ஆக்சைடை வோக்ஸ்வாகன் கார்கள் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் இந்தியா மோட்டார் வாகன நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம், தான் தயாரித்த 3 லட்சத்து 23,700 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அப்போது ஆட்டோமொபைல் ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வை மேற்கொண்டதில் நைட்ரஜன் ஆக்ஸைடு வாயுக்களை 2.6 மடங்கு அதிகமாக வெளியேற்றியதும், அதை மறைக்க சில மென்பொருட்களையும் வோக்ஸ்வேகன் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இந்திய விதிமுறைகளுக்கு மாறான நடவடிக்கையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது.

நவம்பர் 16-ம் தேதி விசாரணையை மேற்கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. வோக்ஸ்வேகன் கார்கள் மூலம் ஏற்பட்ட மாசுகளின் அளவை ஆய்வு செய்யவும், இதனால் உடல்நலத்திற்கு ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் துல்லியமாக ஆய்வினை மேற்கொண்ட 4 நபர்கள் கொண்ட குழுவை அமைத்தது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழுவில் ஏஆர்ஏஐ ( Automotive Research Association of India) இயக்குநர் ராஷ்மி உர்த்வார்ஷி, டாக்டர், ஆராய்ச்சியாளருமான நிதின் லப்செட்வர், மத்திய கனரக அமைச்சகத்தின் இயக்குநர் ராம்காந்த் சிங், மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயலர் பிரசாந்த் பார்கவா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அந்தக் குழு ஆய்வு செய்ததில் ஏறக்குறைய டெல்லியில் மட்டும் வோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டில் 48.678 டன் நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

வோக்ஸ்வேகன் கார்களில் இருந்து வெளியேறிய நைட்ரஜன் ஆக்சைடு காரணமாக மக்களுக்கு ரூ. 171. 34 கோடியளவில் உடல்நல கேடு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் டெல்லியில் காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுகாதார கேடு மதிப்பு ரூ. 150 கோடிக்கு மேல் உள்ளது.

வோக்ஸ்வேகன் கார்களில் இருந்து அதிகப்படியான நைட்ரஜன் ஆக்சைடு (NOx) வெளியேற்றத்தினால் இந்தியர்களின் உடல்நலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கப்பட்டது. இதற்காக, வோக்ஸ்வாகன் இந்தியாவிற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த வாரம் ரூ .171.34 கோடி அபராதம் விதித்தது. போக்ஸ்வேகன் மோட்டார் வாகன நிறுவனம் இந்தியாவில் தனது 3.27 லட்சம் டீசல் கார்களில் மோசடியான கருவியை பொருத்தியதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது. ஜெர்மனியில் ஏற்கனவே தண்டனை பெற்ற நிறுவனத்திற்கு 6 மாதங்கள் கழித்து இந்தியாவிலும் அபராதம் விதிக்கப்பட்டது.

ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்து 2 மாதங்கள் ஆகியும் வோக்ஸ்வேகன் நிறுவனம் அந்தப் பணத்தை மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் டெபாசிட் செய்யவில்லை. இதுதொடர்பான விசாரணை ஜனவரி 17-ல் நடைபெற்ற போது, 24 மணி நேரத்துக்குள் ரூ.100 கோடியை மத்திய மாசுக்கட்டுப்பாட்டுவாரியத்தில் டெபாசிட் செய்து, அதற்கான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்” என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

உத்தரவை மீறும் பட்சத்தில், அந்நிறுவனத்தின் இந்தியத் தலைவர் கைதுசெய்யப்பட்டு சொத்துகள் கையகப்படுத்தப்படும் எனவும் எச்சரித்தது. . நைட்ரஜன் ஆக்ஸ்சைடு போன்ற வாயுக்கள் பூமி வெப்பமயமாதல் மற்றும் அமில மழைக்குக் காரணமாக அமையும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவே தொழிற்சாலைகள் மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடும் விதிகளை வகுத்துள்ளது.