“மோடி அரசின் காலாவதி தேதி முடிந்து விட்டது” எதிர்க்கட்சிகள் மாநாட்டின் 10 முக்கிய குறிப்புக்கள்:-

Read Time:4 Minute, 2 Second

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் பதவிக் காலம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட இருக்கின்றன. 3-வது அணி என்ற பேச்சும் உள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் பா.ஜனதாவுக்கு எதிராக 22 எதிர்க்கட்சி தலைவர்கள் திரண்டனர். எதிர்க்கட்சிகள் தலைவர்கள் பேச்சு தொடர்பான முக்கிய குறிப்புக்கள்:-

1) நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான தேர்தல் – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே.

2) மோடியும் அமித்ஷாவும் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் நாட்டை துண்டாடிவிடுவார்கள். அரசியல் சாசனத்தையே மாற்றி தேர்தல்கள் நடைபெறுவதை ரத்து செய்து விடுவார்கள், அவர்களை அப்புறப்படுத்த வேண்டியது கட்டாயம் – அரவிந்த் கெஜ்ரிவால்

3) பா. ஜனதா ஆட்சியில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது, அதை காப்பாற்றுவதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றாக திரண்டு உள்ளனர் – யஷ்வந்த் சின்கா.

4) அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது, நாட்டுக்கு புதிய தலைவருக்கான தேவை ஏற்பட்டுள்ளது – சத்ருகன் சின்கா (பா.ஜனதா எம்.பி.)

5) நம்முடைய சிந்தனை ஒன்று தான் பாரதீய ஜனதா கட்சியை வீழ்த்த வேண்டும். மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பா.ஜனதாவை தனியாக வீழ்த்த முடியாது, பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும், எதிர்க்கட்சியினரும் ஒன்று சேர வேண்டும் – மு.க.ஸ்டாலின்.

6) பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் கார்ப்பரேட் ஆட்சி இது. இதற்கு எதற்கு நாம் வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள் – மு.க. ஸ்டாலின்.

7) பாரதீய ஜனதா நாட்டை பிளவுபடுத்துகிறது. இந்தியாவையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதுதான் நமது லட்சியம் – சந்திரபாபு நாயுடு.

8) மோடி அரசின் காலாவதி தேதி முடிந்து விட்டது. எல்லோரையும் அரவணைத்து செல்ல முடியாதவர் நல்ல தலைவராக இருக்க முடியாது. இதுதான், பா.ஜனதா முடிவு காலத்தின் தொடக்கம் ஆகும். மோடி அரசு, சட்டத்தை மாற்றியது, அரசியல் சட்டத்தை மாற்றியது. இப்போது, அந்த அரசையும் மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது – மம்தா பானர்ஜி.

9) “பா.ஜனதாவை ஒழிப்போம், தேசத்தை காப்போம், ஜெய் ஹிந்த், வந்தே மாதரம்” – மம்தா பானர்ஜி.

10) கொல்கத்தாவில், எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துக்கொண்டனர். மாநாட்டில் இடதுசாரி கட்சிகள், அ.தி.மு.க., தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜூ ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.